ஹிந்தியில் திலீப்குமார், நிம்மி நடித்த வெற்றிப் படம், தாஹக். இதைத் தமிழில், சிவாஜி - பத்மினி நடிக்க, புனர் ஜென்மம் என்ற பெயரில் எடுத்தனர்.
படத்தில் ஒரு உணர்வு பூர்வமான காட்சி, அன்று படமாக்கப்பட்டது.
குடிப்பழக்கம் உள்ளவரான, கதாநாயகன் சிவாஜி, மது அருந்தி வந்து, கதாநாயகி பத்மினியை அடித்துக் கீழே தள்ளி விட வேண்டிய காட்சி எடுக்கப்பட்டது.
ஆனால், இயக்குனர் ஆர்.எஸ்.மணி எதிர்பார்த்த அளவுக்கு காட்சி அமையவில்லை. மீண்டும் எடுக்கப்பட்டது; அதுவும் திருப்தியில்லை.
பத்மினிக்கோ பரபரப்பு. அன்று மாலை, 6:00 மணிக்கு, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாட்டிய நிகழ்ச்சி இருந்தது. சிறப்பு விருந்தினராக, ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் கலந்து கொள்ள இருந்தார். இந்த விஷயம் நடிகர் சிவாஜிக்கும் தெரியும்.
கால தாமதமானதால், இயக்குனர் மேல் சற்று கோபத்துடன் இருந்தார், பத்மினி. சீக்கிரம் போக வேண்டுமே என்ற பரபரப்பில், எடுக்கப்படும் காட்சியும் சிறப்பாக வர வேண்டுமே என்ற கவலை அலைக்கழித்தது.
காட்சியின்படி, பத்மினி போட்டிருந்த கண்ணாடி வளையல்களை உடைத்து, ஒரு பாறையின் மீது அவரை, பலமாக தள்ளினார், சிவாஜி. காட்சி ஓ.கே., ஆனது. படப்பிடிப்பு முடிந்து, வேகமாக ராஜா அண்ணாமலை மன்றத்திற்கு புறப்பட்டு சென்று விட்டார், பத்மினி.
நிகழ்ச்சிக்காக, 'மேக் - அப்' போடும் போது தான், தன் கையைப் பார்த்தார், பத்மினி. கையில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. படப்பிடிப்பின் போது, உடைக்கப்பட்ட கண்ணாடி வளையல், பத்மினியின் கையை பதம் பார்த்துள்ளது. பின்பு சுதாரித்து நாட்டியமாடி முடித்தார், பத்மினி.
அந்த வளையல் கிழித்த காயம், ரொம்ப நாட்கள் அவரது கையில் வடுவாக இருந்தது.
'அன்றைய திரைப்பட மும்மூர்த்திகள் என்று சொல்லப்பட்ட, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், இந்த மூவருடன் நான், பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறேன்.
'என் அறிமுகப் படமான, கல்பனா முதலே, ஜெமினி கணேசனைத் தெரியும். அவர், ஜெமினி ஸ்டுடியோவில், செல்வாக்கில் இருந்தபோது, மற்ற கம்பெனிகளில் என்னையும், என் நடனத்தைப் பற்றியும் சொல்லி, புதிய வாய்ப்புகள் பெற்று தருவார்.
'அதேபோல, ஜெமினி கணேசன் நடிகரான பின், நிறைய படங்களில் என்னை நடிக்க வைக்க சிபாரிசு செய்தார். அவர், எங்கள் குடும்ப நண்பராகவும், என் அம்மா, அக்கா, தங்கை எல்லாரிடமும் நன்றாக பழகியவர்...' என்று, ஒரு பேட்டியில் கூறியுள்ளார், பத்மினி.
ஸ்ரீதர் கதை வசனத்தில், பத்மினி - சிவாஜி நடித்த, எதிர்பாராதது என்ற படம் வெளியானது. உணர்ச்சிப் போராட்டமான கதை, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார், பத்மினி.
'எதிர்பாராதது என்ற படத்தில், 'சிற்பி செதுக்காத பொற்சிலையே...' பாடலின் போது, நான் சிவாஜியை அடிக்கிற மாதிரி ஒரு காட்சி. நான் அவரை அடிப்பதற்கு தயங்கினேன்.
'ஆனால், அவரோ 'பப்பி... (சிவாஜி இப்படித்தான் என்னை கூப்பிடுவார்) நீ, தைரியமா அடி...' என்றார். ஆரம்பத்தில் அடிப்பதற்கு பயப்பட்ட நான், 'ஸ்டார்ட், கேமரா...' என்றதும், அந்த பாத்திரமாகவே மாறி, உணர்ச்சிவசப்பட்டு நிறுத்தாமல் அவர் கன்னத்தில் அடித்தேன்.
'இயக்குனர், 'கட்' சொன்னதை கூட கவனிக்கவில்லை. அப்புறம் சிவாஜி தான், 'பப்பிமா நிறுத்து, 'ஷாட்' முடிஞ்சு போச்சு'ன்னு, என் கையைப் பிடித்து நிறுத்தினார். நான் அடித்த அடியால், ரெண்டு நாள் கழிச்சு தான் அவர், படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
'நான் அவ்வளவு பலமா அடிச்சிருக்கேன்னு அப்பதான் தெரிஞ்சது. அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்...' என, பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார், பத்மினி.
பல படங்களில், சிவாஜியுடன் காதலன் - காதலியாக, கணவன் - மனைவியாக நடித்து வந்த காலகட்டத்தில், மங்கையர் திலகம் படத்தில், சிவாஜிக்கு அண்ணியாக நடிக்க பத்மினியை அழைத்தனர்.
சிவாஜி, தன்னை, 'அண்ணி' என்றழைத்தால், அதைப் பார்த்து மக்கள் சிரித்து விடுவரோ என்று பயந்தார், பத்மினி. ஆனால், இயக்குனர், எல்.வி.பிரசாத்தும், திரைக்கதை அமைப்பும், மக்களைக் கதையோடு ஒன்றிப் போக வைத்து விட்டது.
பத்மினி, சிவாஜி சேர்ந்து நடிக்கும் காட்சிகளை கூட தனித்தனி, 'ஷாட்'களாகவும், அவர்களுக்கு மிகக் குறைவான, 'காம்பினேஷன் ஷாட்'களையும் வைத்தார். பயந்தபடி ஒன்றும் நடக்கவில்லை. படத்தை ரசித்து பார்த்தனர், மக்கள்.
புதையல் படத்தின் படப்பிடிப்பு, விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில், எலியட் பீச்சில் நடந்தது. சரியான நேரத்தில் அங்கு இருக்க வேண்டும் என்பதற்காக, இரவே, 'ஹேர் ஸ்டைல்' செய்து, அலுங்காமல் ஒரு பக்கமாக படுத்து துாங்கி, காலையில் அப்படியே படப்பிடிப்புக்கு செல்வார், பத்மினி.
உத்தமபுத்திரன் படத்தில், சிவாஜியின் இரட்டை வேட நடிப்பிலும், பத்மினியின் நடிப்பிலும் காட்சிகள் பிரகாசித்தன.
'தங்கப்பதுமை படத்தில், சிவாஜிக்கு கண் போய் விட்டது என்ற செய்தியை அறிந்து, ஓவென்று அழுது அலறும் அந்தக் காட்சி, ஒரே, 'டேக்'கில் எடுக்கப்பட்டது.
'சிவாஜியோடு நான் நடித்து புகழ்பெற்ற படங்கள்: எதிர்பாராதது, மங்கையர் திலகம், அமர தீபம், புதையல், உத்தமபுத்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன்,தெய்வப்பிறவி, குலமா குணமா, இரு மலர்கள், தில்லானா மோகனாம்பாள் மற்றும் வியட்நாம் வீடு.
'இந்த படங்கள் ஒவ்வொன்றும் காதலை, வீரத்தை, தியாகத்தை, பாசத்தை மற்றும் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் உயிர்ச்சித்திரங்கள்...' என்று, ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார், பத்மினி.
பத்மினியிடம் அறை வாங்கியவர்களில், நகைச்சுவை மன்னர் நாகேஷ் ஒருத்தர். அதென்ன படம், அறைந்தது ஏன்?
— தொடரும்.
- சபீதா ஜோசப்