வி. பரமேஸ்வரன், நெல்லை: பெரியோர், சிறியோர் என்று சொல்கின்றனரே... அவர் எவர்?
செய்ய இயலாத அரிய செயல்களை செய்பவர்களை, பெரியோர் என்றும், அத்தகைய செயல்களை செய்ய இயலாதவர்களை, சிறியோர் என்றும் கூறுவர்.
* ஜி. பழனிசாமி, கோவை: தி.மு.க.,வுடன், பா.ம.க., கூட்டணி அமைத்தால், திருமாவளவன் நிலை எப்படியிருக்கும்?
தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி விடுவார். அ.தி.மு.க.,வில் கூட்டணி சேர முடியாது. தனித்து நிற்பார். 'டிபாசிட்' கூட கிடைக்காது!
பி. மோகன் ராஜு, சென்னை: அந்துமணி பதில்கள் பகுதிக்கு, இன்னும், 'போஸ்ட் கார்டுகள்' வந்து கொண்டிருக்கின்றனவா?
'போஸ்ட் கார்டு'கள் தான் அதிகம். அதுவும், புதன் கிழமை, 200 கார்டுகள் வந்து விடும். மற்ற நாட்களில், 50 முதல் 60 கார்டுகள், 'இன்லண்ட் லெட்டர்' வந்து விடும். 'இ - மெயில்' 10 முதல் 15 வரும். ஒவ்வொன்றிலும், ஐந்து முதல் 10 கேள்விகள் இருக்கும்; அனைத்தையும் படித்து விடுவேன்!
ஆர். சுப்பு, திருத்தங்கல்: 'முதல்வராகும் ஆசையில்லை...' என, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்திருக்கிறாரே...
பல ஆண்டுகள், முதல்வர் கனவு கண்டபடி துாக்கத்தில் இருந்தார் போலும்; இப்போது தான் விழிப்பு வந்திருக்கிறது!
அ. கோவிந்தன், கோவை: எவ்வளவு கற்க வேண்டும்?
ஒவ்வொருவருக்கும் கற்ற கல்வியே, அழிவில்லாத சிறந்த செல்வமாகும். மற்ற செல்வங்கள் எல்லாம் அழியக் கூடியவை!
ஆர். அமிர்தபாரதி, குஞ்சன்விளை, குமரி: தே.மு.தி.க., வீழ்ச்சி அடைந்து விட்டது. இனி, வளர்ச்சி காணுமா?
இனி, முடியவே முடியாது. இரண்டு திராவிட கட்சிகளுடன் ஏதாவது ஒன்றில் இணைந்து, அவர்களுடன் ஐக்கியமாகி விடுவது தான் நல்லது!
கே.லதா, ஸ்ரீவைகுண்டம்: மணியின் இந்த அழகான, 'டீ கப்' முகத்துக்கு வாரம் எத்தனை, 'லவ்' லெட்டர் வரும்?
வாசகர் கடிதங்கள் அனைத்துமே எனக்கு, 'லவ்' லெட்டர் தானே!
* கே. ரவி, சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், மோடி அலை ஓய்ந்து, ராகுல் அலை அடிக்க வாய்ப்புள்ளதா?
குமரி முதல், காஷ்மீர் வரை நடந்தார், ராகுல். அதன் பிறகு, வடகிழக்கு மூன்று மாநிலங்களின் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகளை பார்த்தீர்களா... லோக்சபா தேர்தலில், ராகுல் அலை அடிக்க வாய்ப்பே இல்லை!