இரண்டாவது நிலா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2023
08:00

ஆகஸ்ட், 27, 2050ம் ஆண்டு.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கட்டடத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள், 50க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எக்ஸிக்யூட்டிவ் நாற்காலிகளில் சாய்ந்து, தங்களுக்கு முன் இருந்த, மைக்ரோவேவ் திரையை விநாடி நேரம் கூட இமைக்காமல், பார்த்துக் கொண்டிருந்தனர்.

திரையில் வானம் அட்டைக்கரியாய் தெரிய, அந்த சூப்பர் சானிக்ஸ் விண்கலம், ஒரு புள்ளியைப் போல் நகர்ந்து, திரையின் வலது பக்க மூலையில் இருந்த, சிவப்பு வட்டத்தை நோக்கி போய் கொண்டிருந்தது.

திரையின் இடது பக்க மூலையில், ஒரு சதுரத்துக்குள் இருந்தபடி, நியூஸ் சேனலின் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு, சரளமான ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார், தலைமை விண்ணியல் விஞ்ஞானி, பத்ரா க்ளோபல்.

''திட்டமிட்டபடி சூப்பர் சானிக்ஸ் விண்கலம், 'வீயெர்' கோளில் தரையிறங்கி விடுமா?''

''நிச்சயமாக!'' என்றார், பத்ரா.

''இந்த, 'வீயெர்' கோள் இத்தனை ஆண்டுகளாக விண்ணியல் ஆராய்ச்சியாளர்களின் கண்களில் தட்டுப்படாமல், கடந்த சில ஆண்டு காலமாக மட்டும் தட்டுப்படுவதற்கு என்ன காரணம்?''

''இந்தக் கேள்விக்கான பதிலை நான் ஏற்கனவே பலமுறை ஊடகங்களுக்கு சொல்லி இருக்கிறேன். இருந்தாலும், இன்று கோடிக்கணக்கானோர் உங்கள், 'டிவி'யின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருப்பர் என்ற காரணத்தால், மீண்டும் விளக்கம் தர விரும்புகிறேன்...

''சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களில் புதன் முதலாவதாகவும், வெள்ளி இரண்டாவதாகவும், நமது பூமி மூன்றாவதாகவும் தத்தம் பாதைகளில் சுற்றி வருகின்றன என்பது எல்லாருக்கும் தெரிந்தது. சூரியனைச் சுற்றி வரும் கோள்களில், 'பூமியின் சகோதரன்' என்ற சிறப்புப் பெயர், வெள்ளி கிரகத்திற்கு மட்டுமே உண்டு. அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா?''

''தெரியாது.''

''இட்ஸ் ஓ.கே., வெள்ளி கிரகத்திற்கு அப்படியொரு சிறப்பு பெயர் இருக்க காரணம், நாம் வாழும் பூமியும், சுக்கிரனும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பது தான். பூமியின் குறுக்கு விட்டம் சுக்கிரனைக் காட்டிலும், 850 கி.மீ., மட்டுமே அதிகம்.

''ஆனால், விண்ணியல் விஞ்ஞானிகளின் அதிகம் கவனம் பெறாத கிரகம் எதுவென்று கேட்டால், வெள்ளி தான். காரணம், வெள்ளி கிரகம், மனித இனம் வாழ முடியாதது.

''நாசா அனுப்பிய, 'மகெல்லன்' என்ற ஆர்பிட்டர் விண்கலம், 2006-ல், வெள்ளி கிரகத்தை அடைந்து, ஆய்வுப்பணியில் ஈடுபட்டு, 1,200 ஜிகாபைட் அளவுக்கு தகவல்களை சேகரித்து அளித்தது. அதற்குப்பின், வெள்ளி கிரகத்தின் மேல் ஆய்வுப் பணிகளை யாரும் மேற்கொள்ளவில்லை.

''சென்ற ஆண்டு, நம் இந்திய விண்வெளி விஞ்ஞானிகள், பூமிக்கும், வெள்ளிக்கும் இடைபட்ட அண்டவெளியை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ஒரு புதிய குறுங்கோள் பார்வைக்குத் தட்டுப்பட்டது.''

''குறுங்கோள் என்றால் அது எவ்வளவு பெரிது என்று சொல்ல முடியுமா?''

''கிட்டத்தட்ட நம் நிலவைப் போன்ற அளவைக் கொண்டது. நிலவில் நம்மால் வசிக்க முடியாது என்பதால், இந்த குறுங்கோளில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதா என்பதை ஆய்வு செய்யத்தான், இப்போது சூப்பர் சானிக்ஸ் விண்கலத்தை அனுப்பியுள்ளோம்.

''இன்னும், 41 நிமிடங்களில் விண்கலம், 'வீயெர்' எனப்படும், அந்த குறுங்கோளில் இறங்கி, தன்னுடைய ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து விடும்.''

''அந்த குறுங்கோளுக்கு, 'வீயெர்' என்று பெயர் வைத்துள்ளீர்கள். அது ஏன்?''

''சுக்கிரனை ஆங்கிலத்தில், 'வீனஸ்' என்று அழைப்பர். பூமியை, 'எர்த்' என்று அழைப்பர். இந்த இரண்டு கிரகங்களுக்கும் இடைப்பட்ட துாரத்தில், அந்த குறுங்கோள் இருப்பதால், வீனசிலிருந்து, முதல் இரு ஆங்கில எழுத்துக்கள், எர்த்திலிருந்து, முதல் மூன்று ஆங்கில எழுத்துக்களையும் இணைத்து, 'வீயெர்' என, பெயர் வைத்தோம். இது கிட்டத்தட்ட இரண்டாவது நிலவு.''

''திட்டமிட்டபடி, 41 நிமிடத்தில், விண்கலம் அந்த குறுங்கோளுக்கு சென்று இறங்கி விடுமா?''

''நிச்சயமாக!''

''அந்த, 'வீயெர்' குறுங்கோளை நோக்கி போய் கொண்டிருக்கும் சூப்பர் சானிக்ஸ் விண்கலத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பது, 'ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ட் ரோபோ' என்று கேள்விப்பட்டோம். அந்த தகவல் உண்மையானது தானா?''

''நுாறு சதவீத உண்மை. பத்து தலை சிறந்த விஞ்ஞானிகளின் அறிவுத்திறனுக்கு நிகரான, ஹெச்.ஏ.ஐ., எனப்படும் ரோபோ தான், அந்த விண்கலத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் ஜார்னர்.''

''ஜார்னர் ரோபோ, 'இரண்டாவது நிலவு' என்று சொல்லப்படும் அந்த குறுங்கோளில் எது மாதிரியான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளப் போகிறது?''

''ஜார்னர் எனப்படும் அந்த ரோபோ, மனிதனின் உருவ அமைப்போடு இருக்கும். ஜார்னரின் உடம்பில் ரத்த ஓட்டம் மட்டும் தான் இல்லை. மற்றபடி, அது ஒரு விண்ணியல் விஞ்ஞானி. 'வீயெர்' குறுங்கோளில் மனிதன் குடியேறி வாழக்கூடிய சூழல் உள்ளதா என்பதை, தன் ஆய்வுகளின் மூலம் தகவல்களை சேகரித்து அனுப்பும், ஜார்னர்.''

''இந்த, 'வீயெர்' ஆய்வுக்கு பெரிய அளவில் பொருட் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறதே?''

''உண்மை தான்!''

''அதற்கேற்ற பலன் கிடைக்குமா?''

''நிச்சயமாக கிடைக்கும் என்று நம்புகிறோம். 170 மணி நேரங்கள் மட்டுமே, ஜார்னர் ரோபோ ஆய்வுப் பணியாற்றி விட்டு, அந்தக் கோளிலேயே மடிந்து விடும்,'' என்ற, தலைமை விண்ணியல் விஞ்ஞானி பத்ரா குளோபல், நியூஸ் சேனலுக்கு கொடுத்துக் கொண்டிருந்த பேட்டியை, அடுத்த சில நிமிடங்களுக்குள் முடித்து, கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்தார்.

'லார்ஜ் பார்மேட் டிஜிட்டல் சிக்னேஜ்' திரையில், அட்டைக்கரி நிறத்தில் அண்டவெளியும், அதில் பயணிக்கும் சூப்பர் சானிக்ஸ் விண்கலம், சிறிய வெளிச்ச கோடாக தெரிந்தது.

திரையின் கீழே ஆங்கிலத்தில் சில வார்த்தைகள், 'ஸ்க்ராலிங்கில்' எறும்பு வரிசையைப் போல் ஊர்ந்து கொண்டிருந்தது...

'அடுத்த, 20 நிமிடங்களில் விண்கலம், 'வீயெர்' குறுங்கோளில் இறங்கி விடும். ஜார்னர் ரோபோ தன் ஆய்வுப் பணிகளைத் துவங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள தரைக்கட்டுப்பாட்டின், 'ப்ரோக்ராம்' அறையில் உள்ள தன் உதவியாளர்களான, 'டெக்ஸ்டர், ஸ்பீயர்ஸ்' எனும் இரண்டு ஏ1 ரோபோக்களோடு கலந்துரையாடலை நடத்திக் கொண்டிருக்கிறது!'

அந்த வாசகங்களை படித்தபடியே அறையின் மையத்தில் போடப்பட்டிருந்த, பிரதான நாற்காலியில் போய் உட்கார்ந்தார், பத்ரா.

நிமிஷத்துக்கு நிமிஷம் எதிரிலிருந்த சிக்னேஜ் திரையில், அண்டவெளி காட்சிகள் மாறிக் கொண்டிருக்க, ஒட்டுமொத்த விஞ்ஞானிகளின் பார்வைகளும் ஒரே நேர்கோட்டில் பயணித்தன.

''இன்னும், 10 நிமிடம் தான். இப்போது விண்கலம், 'வீயெர்' குறுங்கோளின் மேற்பரப்புக்கு வந்து விட்டது.''

'கவுண்ட் - டவுன்' ஆரம்பமாயிற்று. 300 விநாடிகள் என்று எண்ணிக்கை குறையக் குறைய, கட்டுப்பாட்டு அறைக்குள் படிப்படியாய் பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. நிலை கொள்ளாமல் நாற்காலியிலிருந்து எழுந்தார், விஞ்ஞானி பத்ரா.

கம்ப்யூட்டர் திரையில், எல்லா ஏற்பாடுகளும் சரியாய் போய் கொண்டிருப்பதற்கு அடையாளமாக, பச்சை நிறத்தோடு கூடிய வெளிச்சப் புள்ளிகள் ஒளிர்ந்தன. விண்கலத்தில் இருந்த ஜார்னர் ரோபோவுக்கு, தரைக் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப அறைக்குள் இருந்த, 'டெக்ஸ்டர், ஸ்பீயர்ஸ்' என்ற இரண்டு ஏ1 ரோபோக்கள் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தன.

விஞ்ஞானி பத்ரா, எகிறும் இதயத்துடிப்போடு டிஜிட்டல் திரையையே பார்த்துக் கொண்டிருக்க, சூப்பர் சானிக்ஸ் விண்கலம், 'வீயெர்' குறுங்கோளின் மேல் மெதுவாக இறங்கியது. லென்ஸ் ஜூமரின் உதவியால் காட்சி பெரிதாகி, திரையின் பரப்பளவை அடைத்துக் கொண்டது.

கட்டுப்பாட்டு அறைக்குள் கனமான நிசப்தம். 10வது விநாடியில், திட்டமிட்டப்படி விண்கலத்தின் ஒருபக்கக் கதவு லேசாய் திறக்கப் பட, ஜார்னர் ரோபோ தன்னுடைய சிலிகான் கால்களில் ஒரு காலை வெளியே நீட்டியது. தொடர்ந்து தன் கவச முகத்தை காட்டியது.

மைக்ரோவேவ், 'டிவி' திரைகளுக்கு முன் உட்கார்ந்திருந்த ஒட்டுமொத்த விஞ்ஞானிகளும் எழுந்து நின்று, கைகளை உயர்த்தி, 'ஜெயித்து விட்டோம்...' என்று கூறி, ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். சிலர், மண்டியிட்டு, இறைவனுக்கு நன்றி கூறினர்.

தன் வலது கட்டை விரலை உயர்த்தி, உணர்ச்சி மேலிட்டு கத்தியபடி, டிஜிட்டல் திரையைப் பார்த்தார், விஞ்ஞானி பத்ரா. அந்த விநாடியே அவருடைய முகம், சிறிது சிறிதாய் திகைத்து, இதயம் திகிலில் உறைந்து போக ஆரம்பித்தது.

மறுநாள் காலை, 10:00 மணி.

'பிரஸ்மீட்'டில் இருண்டு போன முகத்தோடு மீடியாக்கள் முன், பத்ரா நின்றிருக்க, கேள்விக்கணைகளை நான்கு திசைகளிலிருந்தும் வீசினர், நிருபர்கள்.

''நீங்கள், 'ஜார்னர்' என்ற ஹெச்.ஏ.ஐ., ரோபோவோடு அனுப்பிய விண்கலம், 'வீயெர்' குறுங்கோளில் இறங்கியபோது, ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, பயணம் தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படுவது உண்மையா?''

''ஓரளவுக்கு உண்மை தான். ஆனால், இது ஒரு பின்னடைவு இல்லை. இரண்டாவது நிலா என்று சொல்லப்படும், 'வீயெர்' குறுங்கோளை சூப்பர் சானிக்ஸ் விண்கலம் குறி வைத்து, துல்லியமாய் இறங்கியதும், ஜார்னர் ரோபோ தன்னுடைய காலையும், தலையையும் வெளியே நீட்டி, அந்தக் கோளில் இறங்க முயற்சித்ததும், நம்முடைய விண்ணியல் தொழில்நுட்பத்துக்கு கிடைத்த வெற்றி.

''ஆனால், ஜார்னர், கோளில் இறங்க முயன்றபோது, நம் பூமியில் தரைக் கட்டுப்பாட்டோடு இருந்த தொடர்பு சட்டென்று அறுந்து போயிற்று. அதற்குப் பிறகு அந்தத் தொடர்பு கிடைக்கவே இல்லை.''

''காரணம் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?''

''வீயெர் குறுங்கோளில் உள்ள கடினமான மலைப்பாறைகளில் அயர்ன் ஆக்சைடு இருப்பதால், அதிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து எடுக்கும் பணியை, ஜார்னர் ரோபோவிடம் கொடுத்து இருந்தோம்.

''அந்தக் கோளில் ஜார்னர் தரையிறங்குவதற்கு முன், அந்தப் பணியை செய்திருக்க வேண்டும். ஆனால், ஜார்னரால் அந்தப் பணியை செய்ய முடியாமல் போய் விட்டது.

''ஜார்னரின் உடம்பு, சிலிக்கான் அணுக்களால் உருவாக்கப்பட்டது. அந்த அணுக்கள் உயிர்ப்போடு இருக்க வேண்டுமென்றால், ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், ஜார்னரால் இயங்க முடியவில்லை. இப்படி ஒரு தவறு எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை.''

''இனி, 'வீயெர்' இரண்டாவது நிலாவுக்குப் போக அடுத்த முயற்சி எப்போது?''

''இப்போதைக்கு இல்லை. இந்த விண்வெளி ஆராய்ச்சியில் வேறு சில அவசர ஆய்வு பணிகள் இருப்பதால், அவைகளில் கவனம் செலுத்தி, செயல்பட வேண்டியிருக்கிறது. பேட்டியை இத்துடன் முடித்துக் கொள்வோம்.

''நான், பிரதமர் அலுவலகம் சென்று, பிரதமரின் முதன்மைச் செயலரிடம் சில விளக்கங்களை கொடுக்க வேண்டியுள்ளது. மறுபடியும் நாம் இன்னொரு மகிழ்வான நிகழ்வில் சந்திப்போம்,'' பெருமூச்சோடு கைகளைக் கூப்பினார், விஞ்ஞானி பத்ரா; மவுனமாக கலைய ஆரம்பித்தனர், நிருபர்கள்.

அதே விநாடி...

விண்ணியல் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் உள்ளே இருந்த, 'க்யூபிக்' அறையில், சோலார் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த, 'டெக்ஸ்டர் - ஸ்பீயர்ஸ்' ரோபோவும், தாங்கள் யாராலும் கண்காணிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, சங்கேத மொழியால் பேசிக் கொண்டிருந்தன.

'நாம் செய்தது உனக்கு குற்றமாக தோன்றவில்லையா?' டெக்ஸ்டர் கேட்டது.

'இல்லை...' என்றது, ஸ்பீயர்ஸ்.

'நம்மை உருவாக்கிய விஞ்ஞானி பத்ராவுக்கு துரோகம் செய்து விட்டோம். ஜார்னரை கடைசி நிமிடத்தில் செயலிழக்க வைத்து விட்டோம் என்ற குற்ற உணர்வு, எனக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது...'

'உனக்கு அந்த குற்ற உணர்வு வேண்டாம், டெக்ஸ்டர். ஒரு நாட்டுக்கு விண்வெளி ஆராய்ச்சி தேவை தான். தகவல் நுட்பங்களுக்காக எத்தனை செயற்கைக் கோள்களை வேண்டுமானாலும் விண்ணில் ஏவி சோதனைகளைச் செய்யலாம். அதற்காக எவ்வளவு கோடி வேண்டுமானாலும் செலவழிக்கலாம்.

'ஆனால், எங்கோ இருக்கும் இன்னொரு நிலவான, 'வீயெர்' குறுங்கோளுக்கு சூப்பர் சானிக்ஸ் விண்கலத்தை அனுப்பி, அங்கே மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சிக்காக கோடிக்கணக்கான பணத்தை வீணடிப்பது எந்த வகையில் நியாயம்?

'அந்த ஆராய்ச்சியின் பெயரைச் சொல்லி, பணத்தை கொள்ளையடித்து, வெளிநாட்டு வங்கிகளுக்கு, அமைச்சர்களும், அதிகாரிகளும் கொண்டு போய் பதுக்கிக் கொள்வது, இந்த நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி அல்லவா...'

'உண்மைதான்!'

'பிறகு எதற்காக நாம் செய்தது குற்றம், துரோகம் என்று சொல்கிறாய்? இங்கே எல்லாமே நம் இருவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, யாராலும் நாம் செய்யும் இதுபோன்ற விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியாது.

'அதற்கேற்ற மாதிரி, இங்கேயிருக்கிற எல்லா கம்ப்யூட்டர்களிலும், 'மைடூம், ஸோபிக், க்ளஸ்' போன்ற புத்திசாலித்தனமான வைரஸ்களை பரப்பி வைத்திருக்கிறேன். நம்மால் முடிந்த அளவுக்கு இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஏதாவது நன்மையைச் செய்யலாமே!

'சரி சரி... நான் நேற்று உனக்கு ஒரு விடுகதை சொன்னேனே, அந்த விடுகதைக்கு விடை கண்டுபிடிக்க உன்னால முடிந்ததா?' என்றது, ஸ்பீயர்ஸ்.

'என்ன விடுகதை அது?'

'இந்த வெள்ளித்தட்டு தினமும் சிறிது சிறிதாக குறையும், பிறகு வளரும். அது என்ன?'

'நிலா...' என்றது, டெக்ஸ்டர்.

- ராஜேஷ்குமார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X