இமேஜை மாற்றும், விஜய்!
இதுவரை, முதிர்ச்சியான கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பாமல் இருந்தார், விஜய். ஆனால், தன் போட்டியாளரான, அஜித் குமார், 'இமேஜ்' பற்றி கவலைப்படாமல், 'சால்ட் அண்ட் பெப்பர் கெட் - அப்' மற்றும் 'நெகடீவ்' வேடங்களிலும் நடித்து, பரபரப்பு கூட்டி வருவதால், தற்போது, லியோ படத்தில், 50 வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், விஜய்.
விஜயின் மனைவியாக, த்ரிஷா நடிக்கும் நிலையில், அவர்களுக்கு, 15 வயதில் ஒரு மகளும் இருப்பது போன்று, இப்படத்தில், அவரின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. மேலும், 'சால்ட் அண்ட் பெப்பர் கெட் - அப்'பில் தோன்றும், விஜய்க்கு, 'டூயட்' பாடல் எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க, 'ஆக் ஷன் ரோலில்' நடிக்கிறார்.
அத்துடன், இனிமேல், இளவட்ட 'இமேஜி'லிருந்து மாறுபட்டு, முதிர்ச்சியான கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கிறார், விஜய்.
— சினிமா பொன்னையா
'அடுத்த ஜோதிகா நான் தான்' - கங்கனா ரணாவத்!
தமிழ் சினிமாவில், தாம்துாம் மற்றும் தலைவி போன்ற படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தற்போது, சந்திரமுகி- - 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில், ஜோதிகா நடித்த வேடத்தில், இப்போது, கங்கனா நடிக்கிறார்.
இந்த வேடத்திற்காக, முழுமையான தமிழ் நடிகையாக தன்னை மாற்றி உள்ளதாக கூறும் கங்கனா, 'ஜோதிகா நடித்த, சந்திரமுகி படத்தை, யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அழுத்தமான நடிப்பை, பதிவு செய்திருந்தார், ஜோதிகா. அதனால், அவர் அளவுக்கு, இரண்டாம் பாகத்தில் நடிக்க, நானும் முயற்சித்து வருகிறேன்.
'சந்திரமுகி வேடம் எனக்கு ஒரு பெரிய சவால் தான். இந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில், அடுத்த ஜோதிகாவாக, கண்டிப்பாக ஒரு முக்கிய இடத்தை பிடிப்பேன்...' என்கிறார்.
— எலீசா
மீண்டும் இணைந்த, 'பீப் சாங்' மன்னர்கள்!
எட்டு ஆண்டுகளுக்கு முன், அனிருத் இசையில், ஒரு பாடலை எழுதி, பாடியிருந்தார், சிம்பு. 'பீப் சாங்' என்ற பெயரில் வெளியிட்ட அந்த பாடலில், பெண்களை இழிவுபடுத்தும் கொச்சையான வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததால், மாதர் சங்கத்தினர், பொங்கி எழுந்து, சிம்பு, அனிருத் மீது, காவல் நிலையத்திலும், புகார் அளித்தனர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தின் காரணமாக, அதன்பின், சிம்பு, அனிருத் இருவரும், எந்த ஆல்பத்திலோ, படத்திலோ இணையவில்லை. தற்போது, சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தில், இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், அனிருத்.
மீண்டும், 'பீப் சாங்' மன்னர்கள் இணைவதால், மாதர் சங்கத்தினர், தங்களை உன்னிப்பாக கவனிப்பர். எனவே, இந்த படத்தின் பாடல்களில், எந்தவித மோசமான வார்த்தைகளும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தெறி இயக்குனர், தளபதியின், 'கால்ஷீட்' மீண்டும் கிடைக்காததால், பாலிவுட் பாட்ஷாவிடம் கதை சொல்லி, ஓ.கே., வாங்கி, அப்படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இந்த படத்தில் ஆரம்பத்தில் நடிக்க துவங்கிய போது, இயக்குனருக்கு எந்தவித, 'டார்ச்சரும்' கொடுக்காத, பாலிவுட் பாட்ஷா, சமீபத்தில், அவர் நடித்து வெளியான படம், ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டியதை அடுத்து, கதையில் திருத்தங்களை சொல்வதோடு, பல காட்சிகளை இயக்குனரின் அனுமதி இல்லாமல் தன் விருப்பப்படியே நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
இதன் காரணமாக, படப்பிடிப்பு தளத்தில், பாட்ஷாவுக்கும், தெறி இயக்குனருக்குமிடையே அடிக்கடி சலசலப்பு ஏற்படுகிறதாம். இதனால், நடிகர் சொல்வது போல், படத்தை இயக்கி முடித்துவிட்டு, சீக்கிரமே கோலிவுட்டை பார்த்து நடையை கட்டி விடுவது என்ற மனநிலைக்கு வந்து விட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சினி துளிகள்!
* தமிழில் பல படங்களில், 'ஹீரோயின்' ஆக நடித்து, தெலுங்கு நடிகர், டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்ட, நடிகை ஜீவிதா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினி நடிக்கும், லால் சலாம் படத்தில், அவரது தங்கை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
* ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கி வரும், ஜவான் படத்தில், நயன்தாரா மட்டுமே முக்கிய நாயகியாக இருந்தார். இந்நிலையில், பதான் படத்தின் வெற்றி காரணமாக, இன்னொரு, நாயகியாக நடிக்கும், தீபிகா படுகோனேயின் கதாபாத்திரத்தையும், 'வெயிட்' ஆக்கி விட்டார், அட்லீ.
அவ்ளோதான்!