நல்லமுறையில் அரசாண்டு வந்த மன்னர் ஒருவருக்கு, தினமும் ஏதாவது ஒரு பிரச்னை முளைத்துக் கொண்டே இருந்தது. மனம் அலுத்துப் போன மன்னர், பக்கத்துக் காட்டிலிருந்த, தன் குருவிடம் போய், தன் பிரச்னைகளைச் சொல்லி, வழி காட்டுமாறு வேண்டினார்.
'அரசாங்கத்தை நிர்வாகம் செய்வது கஷ்டமாக இருந்தால், ராஜ்யத்தை உன் பிள்ளையிடம் ஒப்படைத்து, காட்டிற்கு இங்கே வந்து விடு. என்னைப் போல் நிம்மதியாக இருக்கலாம்...' என்றார், குரு.
'எப்படி குருநாதா... நான் அரச பதவியை விட்டு விலகினால், அரச காரியங்களை யார் கவனிப்பர்... நாடு குட்டிச்சுவராகி விடாதா... என் மகனும் சிறுவன், என்னாலேயே தாங்க முடியாத அரச பாரத்தை, அவனால் எப்படித் தாங்க முடியும்?' என்றார், மன்னர்.
'சரி... உன்னை விட திறமைசாலியாக நினைத்துத் தானே, என்னிடம் யோசனை கேட்கிறாய்... ஆகவே, உன் ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைத்து விடு. நான் கவனித்துக் கொள்கிறேன்...' என்றார், குரு.
'அப்பாடா, விட்டது வில்லங்கம். இனி, என் ராஜ்யம் உங்களுடையது...' என்று சத்தியம் செய்து, தன் ராஜ்யத்தைக் குருநாதரிடம் ஒப்படைத்தார், மன்னர்.
'சரி, இனிமேல் என்ன செய்யப் போகிறாய்...' என்று குருநாதர் கேட்க, 'அரண்மனை பொக்கிஷத்திலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து, எங்காவது போய் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று பார்க்கிறேன்...' என்றார், மன்னர்.
'என்ன பேசுகிறாய் நீ... இப்போது தான், அரசு முழுதும் என்னுடையதாயிற்றே. என் அனுமதி இல்லாமல், நீ எப்படி அரசாங்கப் பணத்தை எடுக்கலாம்...' என்றார், குரு.
திகைத்தார், மன்னர்.
'சீடனே... நீ ஏன் எங்காவது போய், ஏதாவது தொழில் செய்து பிழைக்க வேண்டும்? நீயோ அரசனாக இருந்து பழக்கப்பட்டவன். ஆகையால் எனக்குப் பதிலாக, -என் பிரதிநிதியாக- என் வேலைக்காரனாக இருந்து, அரசாங்க வேலைகளைக் கவனி! உனக்கு சம்பளம் தான் உண்டு. அரசாங்கத்தில் ஏற்படும் நல்லது கெட்டவைகளுக்கு நான் பொறுப்பு...' என்றார், குருநாதர்.
அதை ஏற்ற மன்னர், குருநாதரின் பிரதிநிதியாக இருந்து அரசாட்சி செலுத்தத் துவங்கினார்.
பழைய வேலைகள் தான், பிரச்னைகளும் இருந்தன. ஆச்சரியம்! மன்னர் முன் போல, சலிப்படையாமல், அமைதியாக, எளிமையாகப் பிரச்னைகளைக் கையாண்டார். சமாளிக்க முடியாத நிலை வந்தால், குருநாதரிடம் சொல்லி, அவர் சொன்னபடிச் செய்து வந்தார்.
ஒரு மாதம் ஆனது.
'புது வேலை எப்படி இருக்கிறது?' என்றார், குருநாதர்.
'என்ன குருநாதா கவலை, அரசு உங்களுடையது, நான் உங்கள் வேலைக்காரன் தானே... நான் ஏன் கவலைப்பட வேண்டும்?' என்றார், மன்னர்.
'மன்னா, முன்பு செய்த அதே வேலைகளைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறாய். அரசாங்கம் உன்னுடையது என்ற எண்ணம் இருந்தபோது, நீ அவதிப்பட்டாய். இப்போது அது உன்னுடையது அல்ல என்ற எண்ணம் வந்தபோது, அமைதியாகச் செயல்பட்டு நிம்மதியாக இருக்கிறாய்.
'இந்த உலகம், உனக்கு முன்னாலும் இருந்தது; உனக்குப் பின்னாலும் இருக்கப் போகிறது. நாம் அனைவரும், இறைவனின் வேலைக்காரர்கள் என்ற நினைவோடு செயல்பட்டால், இன்பமாக வாழலாம்...' என்று சொல்லி, அரசை மறுபடியும் மன்னரிடம் ஒப்படைத்தார், குருநாதர்.
பி. என். பரசுராமன்