அன்பு சகோதரிக்கு —
நான், 68 வயதாகும் பெண். கணவர் வயது: 73. எனக்கு திருமணமானபோது, ஜவுளிக் கடை ஒன்றில், விற்பனையாளராக இருந்தார், கணவர். அயராத உழைப்பாலும், நேர்மையாலும் உயர்ந்து, ஜவுளிக்கடை முதலாளியானார்.
எங்களுக்கு ஒரே மகன். அவனை பட்டப் படிப்பு படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்தோம். அவனுக்கு ஒரு மகன், மகள் பிறந்தனர். ஜவுளிக்கடையை அவனிடம் ஒப்படைத்தோம். எனக்கு வந்த மருமகளோ, ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டவளாக இருந்தாள்.
'சாதாரண தொழிலாளியாக இருந்து, ஜவுளிக்கடை முதலாளியாக ஆனார், உன் மாமனார். மகனும், சிக்கனமாக இருப்பவன் தான். எனவே, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்...' என்று ஒருமுறை, மருமகளுக்கு அறிவுரை கூறினேன். அதிலிருந்து, அவளுக்கு நான் எதிரியாகி விட்டேன்.
வரவுக்குள் செலவு செய்யாமல், அளவுக்கு மீறி செலவு செய்தாள், மருமகள்.
என் கணவர் கட்டிய வீட்டின் கீழ் பகுதியில் நாங்கள் குடியிருக்க, மாடியில், மகனும், மருமகளும் குடியிருந்தனர். பல லட்சம் செலவழித்து, ஆடம்பரமாக அதை புதுப்பித்து கட்ட வேண்டும் என்கிறாள், மருமகள்.
இப்போது தொழிலில் கிடைக்கும் லாபம் குறைவாக இருப்பதால், கொஞ்ச நாட்களுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம் என்று, மகன் மற்றும் மருமகளிடம் கூறினோம். ஆனால், என் மகனை கடன் வாங்க வைத்து, வீட்டை மாற்றி கட்ட வைத்தாள், மருமகள்.
இச்சமயத்தில், ஜவுளிக்கடையில் ஏற்பட்ட சிறு தீ விபத்தில், பலத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டது.
கடன் தொல்லை அதிகமாக, வீட்டையும், ஜவுளிக் கடையையும் விற்க வேண்டியதாகி விட்டது.
இப்போது, மகனும், மருமகளும் ஒரு வாடகை வீட்டிலும், நானும், கணவரும், இன்னொரு வாடகை வீட்டிலும் வசித்து வருகிறோம்.
கூரியர் நிறுவனத்தில் காசாளராக, குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு செல்கிறான், மகன்.
மளிகை கடை ஒன்றில் கணக்கு எழுதுகிறார், கணவர். முதலாளியாக இருந்தவரை இந்நிலையில் பார்க்க, வேதனையாக உள்ளது.
இவ்வளவுக்கு பிறகும், சிக்கனத்தை கற்றுக் கொள்ளவில்லை, மருமகள். பேரக் குழந்தைகளையும், ஆடம்பர வாழ்க்கைக்கே பழக்கி விட்டிருக்கிறாள். பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம், கடன் வாங்கி சமாளிக்கிறான், மகன்.
வாழ்ந்து கெட்ட அவமானம் ஒருபுறம், எதிர்காலம் குறித்த பயமும் அதிகரித்துள்ளது. மகனின் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்று, மனம் பதை பதைக்கிறது. எங்கள் காலத்துக்கு பின், அவன் எப்படி சமாளிக்க போகிறானோ?
குடும்பத்தை கரை சேர்க்கும் பொறுப்பு, என் மருமகளுக்கு வர, நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
நான் எழுதும் பதிலை உன் மருமகளின் கண்களில் படும்படி வை.
அன்பு மருமகளுக்கு,
உன் மாமனார், மாமியாருக்கு இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்திருந்தால், கடையும், வீடும் பல பாகங்களாக பிரிந்திருக்கும்.
உன் மாமனாரும் - மாமியாரும் வயது முதிர்ந்த பழுத்த பழங்கள். அவர்களின் அறிவுரைகளை கேட்பதில் உனக்கு என்ன சிரமம்... ஆடம்பரத்தால், கூடிய சீக்கிரம் வாழ்க்கை செல்லரித்து, மண்ணோடு மண்ணாகும்.
உனக்கு அறிவுரைகள், ஒவ்வாமை என, எனக்கு தெரியும். அதற்காக ஊதுகிற சங்கை ஓங்கி ஊதாமல் நான் இருக்கலாமா? கடிதத்தில் மாமனார், மாமியார் உன் மீது பெரிய குற்றசாட்டு ஒன்றும் வைக்கவில்லை. பெற்ற மகளாக இருந்து ஆடம்பர செலவுகள் செய்தால், அதே அறிவுரையைத் தான் கூறியிருப்பர்.
இனி நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* வீட்டு செலவை பாதியாகக் குறை. ஆடம்பரத்தை முழுவதும் தலை முழுகு
* தொலைதுார கல்வி இயக்கம் மூலம் மேற்கொண்டு படி. படித்து முடித்தால், நல்ல வேலை கிடைக்கும். அது வரை கிடைத்த வேலையில் போய் உட்கார். மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து, வங்கியில் போட்டு வை. ஒரு ஆண்டு முடிந்ததும் எதாவது ஒரு மனையை வாங்கிப் போடு
* எக்காரணத்தை முன்னிட்டும் உன் கணவரை கடன் வாங்க துாண்டாதே. வாங்கின கடனை மெது மெதுவாக அடைக்கப் பார்
* நீ, கணவர், மாமனார், மாமியார் மற்றும் உன் குழந்தைகள் அனைவரையும் ஒரே மாதிரியாக பாவி. அனைவரின் வாழ்வும், தாழ்வும் ஒருவரை ஒருவர் பின்னி பிணைந்துள்ளது என உணர். உன் ஒருத்தியின் மனமாற்றம் உன்னை சார்ந்திருக்கும் ஐந்து உயிர்களின் மாண்பையும் பாதுகாக்கும் அங்குசம்
* உன் மாமனார், மாமியார் உயிரோடு இருக்கும்போதே, வீட்டின் சரிவை தடுத்து நிறுத்து. இனி, நம் மகன் குடும்பம் தலை நிமிர்த்து நிற்கும் என, மாமனார், மாமியார் நம்பிக்கை பெறுவர்.
இந்த பகுதியை படிக்க, உன் மகனிடம் கொடு.
* மனைவி சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடாதே
* கொலை பட்டினி கிடந்தாலும் கடன் வாங்காதே
* தனித்தனி வாடகை வீட்டில் ஏன் குடியிருக்கிறீர்கள்... உன் பெற்றோரை உன்னுடன் அழைத்து கொள். ஒரு வீட்டு வாடகை மிச்சமாகும்
* மீண்டும் சொந்த வீடும், கடையும் கட்ட திட்டம் போட்டு உழை
* மனைவி- - பெற்றோருக்கு இடையே தகவல் தொடர்பை மேம்படுத்து.
கடைசி வரி, சகோதரி உனக்கு... வயது, 68 ஆகிறது. மகன், மருமகள் பற்றிய மனக்கவலைகளை சுமந்து நடைப்பிணம் ஆகாதே. யாரையும் சார்ந்து இவ்வுலகம் இல்லை. நாம் அனைவரும் வழிப்போக்கர்களே!
— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.