'கோடைக்காலம் வந்து விட்டதே... வெயில் கொளுத்துமே... எப்படி சமாளிப்பது...' என்று பதற வேண்டாம். கோடைக் காலத்திலும், நிறைய சாதகங்கள் உள்ளன. கோடை வெயிலை சமாளிக்க கற்றுக் கொண்டாலே, அதை பற்றிய, எதிர்மறை எண்ணங்கள் எழாது.
வெயிலை வரவேற்போம் வாருங்கள்.
* கோடை காலத்தில் வெம்மையைக் குறைப்பதற்காக, பழங்கள், நுங்கு, இளநீர், வெள்ளரி, காய்கறி சாலடுகள் மற்றும் பழ ரசங்களை சாப்பிடலாம். இதனால், வெப்பத்தை குறைத்த மாதிரியும் இருக்கும்; உடலுக்கு வேண்டிய சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொண்ட மாதிரியும் இருக்கும்
* உடலில் தேவையற்ற நச்சுக்களை, நுரையீரல், சிறுநீரகங்கள், குடல் மற்றும் கல்லீரல் ஆகியன வெளியேற்றுவதைப் போலவே, தோலும் வியர்வை மூலமாக வெளியேற்றுகிறது. வெப்பத்தின் சம நிலையைப் பேணுவதில், வியர்வைக்கு பெரும் பங்கு உண்டு. அதிக வியர்வை வெளியேறுவதால், 'ஸ்டீம் பாத்' எடுத்த பலன் கிடைக்கும்
* ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சி, சீரான ரத்த அழுத்தம் மற்றும் உடலின் சர்க்கரை அளவு, முறையான இன்சுலின் சுரப்பு, காச நோய் எதிர்ப்பு போன்றவற்றுக்கு, வைட்டமின் 'டி' மிக முக்கியமாக தேவைப்படுகிறது.
இந்த அத்தியாவசியமான, வைட்டமின் 'டி'யை, சூரிய ஒளியிலிருந்தே உற்பத்தி செய்ய முடியும், தோல் செல்கள். வெயிலில் கொஞ்ச நேரம் இருந்தாலே, விலையில்லா, வைட்டமின் 'டி' போதுமான அளவு கிடைத்து விடும்
* வெயில் நல்லது என்றதுமே, கண்மூடித்தனமாக, கண்ட நேரத்திலும் வெயிலில் போய் நின்றால், ஆபத்தில் முடியும். மாலை வெயில் தான் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக, மதியம், 2:00 மணிக்கு மேல் வரும் வெயிலில் தைரியமாக நடமாடலாம். இது, கோடைக் காலத்துக்கு மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருந்தும்
* மழைக் காலத்தில் கொஞ்சமாக வெயில் அடித்தால் கூட, வீட்டில் இருக்கும் மெத்தை, தலையணைகள், மேஜை, நாற்காலிகள் என, எல்லாவற்றையும் வெயிலில் காய வைப்பது வழக்கம். இதற்கு காரணம், பூஞ்சை, பூச்சிகள் போன்வற்றின் மூலமாக ஏற்படும் தொற்றுகளை அறவே ஒழிக்கும் ஆற்றல் வெயிலுக்கு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்களை வெயிலில் காய வைக்கத் தவறாதீர்கள். வெயிலை, இணையற்ற கிருமிநாசினியாக பயன்படுத்திக் கொள்ளலாமே
* மரபு சார்ந்த எரிசக்தி, நீர், அனல் மின்சாரம் என்று, எத்தனை இருந்தாலும், சூரிய மின்சாரம் நீண்ட கால பயன் அளிக்கக் கூடியது. வீட்டிலேயே சோலார் பேனல் அமைத்து, மின்சாரம் தயாரிக்கலாம்.
ஒருமுறை முதலீடு செய்தால், பல ஆண்டுகளுக்கு பயன் பெறலாம். இதற்கான செலவும் சிக்கனமானது தான். கோடையில் மட்டுமல்ல, ஆண்டில் பெரும்பாலான நாட்கள், சூரியனின் அருட்கொடை நமக்கு கிடைப்பதால், சூரிய மின்சாரத்தை தைரியமாக நம்பலாம்.
தொகுப்பு: 'சிட்டுக்குருவி'