திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2023
08:00

மார்ச் 23 - பகத்சிங் நினைவு தினம்!

மார்ச் 23, 1931 - லாகூர் மத்திய சிறைச்சாலையில், அன்று மாலை, ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப் போவது யாருக்கும் தெரியவில்லை.

பகத்சிங் வாழ்க்கையின் கடைசி, 12 மணி நேரம் இயல்பானதாக இல்லை.

கலகம் ஏதும் ஏற்படக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே, வழக்கத்துக்கு மாறாக அன்று மாலை, 4:00 மணிக்கே சிறைக் கைதிகள், தங்கள் அறைக்குள் அனுப்பப்பட்டனர்.

பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும், அன்று இரவு துாக்கிலிடப்படப் போவதாக, கைதிகளுக்கு முடி திருத்துபவர், ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொன்னார்.

பகத்சிங் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று, அவர் பயன்படுத்திய பேனா, சீப்பு போன்றவற்றை எடுத்து வந்தார், முடி திருத்துபவர். அதை எடுத்துக் கொள்வதற்காக கைதிகளுக்குள் போட்டா போட்டி நிலவியது. இறுதியில் சீட்டு குலுக்கிப் போட்டு, முடிவு செய்யப்பட்டது.

அறையிலிருந்து வெளியே செல்லும் பாதை வழியே, துாக்கில் இடப்படுபவர்கள் அழைத்து செல்லப்படுவர் என்பதால், அனைவரின் கவனமும் அங்கு குவிந்தது.

பகத்சிங்கிடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர், சரத்சிங், தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். அவரின் உதவியால் தான், லாகூரின் துவாரகதாஸ் நுாலகத்திலிருந்து பகத்சிங்கிற்கு புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தது.

புத்தகப் பிரியரான பகத்சிங், தன் பள்ளித் தோழர் ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடிதத்தில், கார்ல் லிப்னேக்கின், 'மிலிடரியிசம்' லெனினின், 'இடதுசாரி கம்யூனிசம்' மற்றும் அப்டன் சின்க்லேயரின், 'தி ஸ்பை' ஆகிய புத்தகங்களை கொடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

பகத்சிங்கை துாக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா சிறைக்கு வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்று பகத்சிங் காணப்பட்டதாக, பின்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மெஹ்தாவை வரவேற்று, 'ரெவல்யூஷனரி லெனின் புத்தகத்தை கொண்டு வரவில்லையா...' என்று கேட்டாராம், பகத்சிங். அந்த புத்தகத்தை, பகத்சிங்கிடம் கொடுத்ததும், அதை உடனே படிக்க துவங்கி விட்டாராம்.

'நாட்டிற்காக எதாவது செய்தி சொல்லுங்கள்...' என்று, கேட்டார், மெஹ்தா.

புத்தகத்திலிருந்து கண்ணை விலக்காமல், 'ஏகாதிபத்தியம் ஒழிக; இன்குலாப் ஜிந்தாபாத் - புரட்சி ஓங்குக...' என்றவர், தன் வழக்கில் அதிக அக்கறை செலுத்திய ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திரபோசிடம், தன் வணக்கத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பிறகு, ராஜ்குருவின் அறைக்கு சென்றார், மெஹ்தா. 'விரைவில் மீண்டும் சந்திப்போம்...' இதுதான், ராஜ்குருவின் கடைசி வார்த்தை.

மெஹ்தாவிடம் பேசிய சுக்தேவ், தன்னை துாக்கில் போட்ட பிறகு, சிறை அதிகாரியிடமிருந்து, தான் பயன்படுத்திய கேரம் போர்டை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.

மெஹ்தா சென்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு, 12 மணி நேரம் முன்னதாகவே, அதாவது, அடுத்த நாள் காலை, 6:00 மணிக்கு துாக்கில் போடுவதற்கு பதிலாக, அன்று இரவு, 7:00 மணிக்கே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மெஹ்தா கொடுத்துச் சென்ற புத்தகத்தின் சில பக்கங்களை மட்டுமே பகத்சிங்கால் படிக்க முடிந்தது.

மூன்று புரட்சியாளர்களை துாக்கிலிட, வெளியே அழைத்து வந்தனர். அப்போது, பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடினர்.

ஒவ்வொருவரின் எடையும் குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்ததை விட அதிகமாகி இருந்தது. இறுதிக் குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. கருப்பு உடை அணிவிக்கப்பட்டது. தங்களது முகத்தை மூட வேண்டாம் என்று மூவரும் கூறி விட்டனர்.

சிறைச்சாலையின் கடிகாரம், மாலை, 6:00 மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவிலிருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும், தேச பக்தி பாடலும் கேட்டது.

'இன்குலாப் ஜிந்தாபாத், ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ - புரட்சி ஓங்குக; இந்தியா விடுதலை பெற வேண்டும்...' என்ற முழக்கங்கள் எழுந்தன.

பகத்சிங் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் பதில் முழக்கங்களை எழுப்பினர். மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் துாக்கு கயிறு மாட்டப்பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக துாக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார், தண்டனை நிறைவேற்றியவர்.

இறுதியாக, அங்கிருந்த மருத்துவர்கள், லெப்டினென்ட் ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெப்டினென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி ஆகியோர், மூவரின் மரணத்தையும் உறுதி செய்தனர்.

இறுதிச் சடங்கை சிறைச்சாலைக்குள்ளேயே செய்து விடலாம் என்று முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம், இங்கு சிதை மூட்டப்பட்டு, புகை வெளி வந்ததுமே, சிறையை தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

எனவே, சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக, டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது. மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களை போல வீரர்களின் உடல், டிரக்கில் ஏற்றிச் செல்லப்பட்டது.

சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட முடிவு செய்யப்பட்ட போது, இரவு, 10:00 மணி ஆகிவிட்டது. இதற்குள் காவல்துறை கண்காணிப்பாளர், சுதர்ஷன் சிங், கசூர் கிராமத்திலிருந்து, ஜக்தீஷ் என்ற பூசாரியை அழைத்து வந்து விட்டார்.

சிதையூட்டப்பட்ட நிலையில், மக்களுக்கு தகவல் தெரிந்து விட்டது. மக்கள் தங்களை நோக்கி வருவதை கண்ட, பிரிட்டிஷ் சேனைகள், சடலங்களை அப்படியே விட்டு, தங்கள் வாகனங்களில் ஏறி தப்பி ஓடினர்.

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு என, மூவருக்கும் ஹிந்து மற்றும் சீக்கிய மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாக, அடுத்த நாள் காலை, அருகிலிருந்த மாவட்ட நீதிபதியின் கையொப்பத்துடன், லாகூரின் எல்லா பகுதிகளிலும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன. இந்த செய்தி, மக்களின் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 5 கி.மீ., தொலைவுக்கு பேரணி நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில், ஆண்கள், கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள், கருப்பு நிற உடைகளையும் அணிந்து, கையில் கருப்பு கொடி ஏந்தி, ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பகத்சிங்கின் குடும்பத்தினர், மூன்று மாவீரர்களின் எச்சங்களுடன் வந்ததால், ஊர்வலம், திடீரென நடு வழியில் நின்றது. மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகள் கரை கடந்தன. அனைவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் பொங்க, ஓலமிட்டனர்.

'வீரர்களின் உடல் பாதி எரிந்த நிலையில், திறந்தவெளியில் தரையில் இருந்தது...' என்று, பிரபல பத்திரிகையாளரான மவுலானா ஜபர் அலி கூறியதும், மக்கள் மேலும் கதறி அழுதனர்.

இது நடந்து, 16 ஆண்டுகளுக்கு பின், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இந்தியாவில் தன் ஆட்சியை முடித்துக் கொண்டு வெளியேறுவதற்கு, இந்த நாளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பது, அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
- நடுத்தெரு நாராயணன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
21-மார்ச்-202314:29:41 IST Report Abuse
.Dr.A.Joseph விடுதலைக்கு போராடியவன் இந்தியன், ஆங்கிலேயரிடம் அடிமை கூலி வாங்கி அவனை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தவன் இந்தியன், தூக்கிலிட்டவன் இந்தியன் .இதில் முதலில் வெளுக்க வேண்டியது யாரை? எதற்காக போராடுகிறார்கள் யாருக்காக போராடுகிறார்கள் என்பது தெரியாமல் அடிக்க நினைப்பவனை முதலில் வெளுத்தால் அதிகார வெறியர்களுக்கு புத்திவரும். ஸலாம் பகத்சிங் தோழர்.
Rate this:
K.Muthuraj - Sivakasi,இந்தியா
25-மார்ச்-202318:05:06 IST Report Abuse
K.Muthurajஉண்மையே. வந்தவனுக்கெல்லாம் கண்டவனுக்கெல்லாம் மக்களை அடிமையாய் இருக்க பழக்கப்படுத்திவிட்டனர் இங்கிருந்த அரசர்களும் சிற்றரசர்களும். ஆங்கிலேய ஆட்சி இருந்த இடங்களுக்கு மக்கள் சென்று வர எந்த தடையையும் ஆங்கிலேயர்கள் விதிக்கவில்லை. பின்பு தான் தெரிந்தது மேல் நாட்டினரின் சுதந்திர உணர்வும் அவர்களின் வாழ்க்கை தரமும். இன்று வரை இதைப்பற்றி நிறைய மக்களுக்கு தெரியவில்லை என்பதே சோகம். இப்பொழுதும் குடும்ப ஆட்சியாளர்களுக்கு ஸலாம் போட்டு அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X