'போவோமா, வேண்டாமா...' என்ற எதிர்கேள்வியை மனசிற்குள் கேட்டபோது, 'போயிட்டு வருவோம்...' என்ற பதிலுக்கே, அதிகமாய் ஆதரவு ஓட்டு விழ, கைப்பையை எடுத்து கிளம்பினாள், சாந்தா.
'பர்மிஷன்' போட்டு, 'கேப்'பில் ஏறிய நிமிஷம், மனம் நினைவுகளில் மூழ்கித் திளைத்தது.
கீர்த்தனாவை பெண் பார்க்கச் சென்றதும், அதன் பின், அவளோடு ஏற்பட்ட நெருக்கம், சிரித்த முகம், கனிந்த வார்த்தைகளுடன் அவள் காட்டிய வாத்சல்யமும், 'இவள் என் வீட்டு மருமகள்...' என்று மனசுக்குள் போட்டு வைத்த படமும், அந்த நிழல் படத்தை அவளே கிழித்து எரிந்து விட்டுப் போன ஒவ்வாமையும்...
இதெல்லாம் சகஜம், இயல்பாக நடப்பது தான். ஏனோ கீர்த்தனா விஷயத்தில் அது வெகுவாகவே வலித்தது. இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை, தருண். ஆனால், சாந்தாவால் அப்படி இயல்பாக கடந்து விட முடியவில்லை.
ஆத்மார்த்தமாக, ''எப்படி இருக்கீங்க ஆன்ட்டி?'' என்றாள், கீர்த்தனா.
''நல்லா இருக்கேன்,'' பதிலுக்கு அவள் நலத்தை விசாரிப்பதை தவிர்த்து, தன்னைத் தானே சிறுமையாக்கிக் கொண்டாள். பக்கத்து டேபிளிலிருந்து பார்வையை நகர்த்தாமல், ''எதுக்கு என்னை வரச் சொன்னே?'' என்றாள், சாந்தா.
வீரியம் குறையாத அதே புன்னகையுடன், ''நான் வரச் சொல்லல ஆன்ட்டி. உங்களை சந்திக்கணும்ன்னு தான் சொன்னேன்,'' என்றாள்.
''என்னை பொறுத்தவரை இரண்டும் ஒன்று தான். சரி என்ன விஷயம்?''
சட்டென்று கேட்ட கேள்வியில், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அமைதியாக அமர்ந்து இருந்தாள், கீர்த்தனா.
ஆறு மாதங்களுக்கு முன், புரோக்கர் கதிரேசன் மூலம், தன் மகனோடு கீர்த்தனாவை பெண் பார்க்க வந்தார், சாந்தா.
'சாந்தா, ஸ்கூல் டீச்சர், ஒரே பையன். நல்ல சம்பளத்துல பிரைவேட் கம்பெனியில் வேலையில் இருக்கான். கொட்டிவாக்கத்துல மூணு வீடு வாடகைக்கு விட்டுருக்காங்க. சல்லடை போட்டு சலிச்சு எடுத்தாலும், இப்படி ஒரு பையன் கிடைக்க மாட்டான்...'
எந்தக் கேள்வி கேட்டாலும், பார்வையால் அம்மாவிடம் சம்மதம் கேட்கும் தருணை, அப்போது, கீர்த்தனாவுக்கு பிடித்துத் தான் இருந்தது.
உயர்தர மருத்துவமனை ஒன்றில், பி.ஆர்.ஓ., ஆக இருந்தாள், கீர்த்தனா. இயல்பாக பழகும் அவள் குணநலன், ஒருபக்கம் சாந்தாவுக்கு ஆசுவாசமாக இருந்தது.
அவள் மருத்துவமனைக்கு அருகிலேயே, சாந்தா பணி செய்யும் பள்ளி இருந்ததால், இருவருக்குள்ளும் இனம் புரியாத அன்பும், நெருக்கமும் உண்டாகியது.
நிச்சய தேதி, திருமண தேதி என்று அடுத்தடுத்த நிலைகளுக்கு பேச்சு முன்னேறி கொண்டிருக்க, ஓரிரு முறை சாந்தாவின் வீட்டிற்கு வந்தவள், தருணோடு இயல்பாக பேச ஆரம்பித்தாள்.
அதன்பின் ஒருநாள், 'திருமணத்துக்கு தற்சமயம் தோதுப்படாது...' என்று, கீர்த்தனாவின் அப்பா சொன்னபோது, துளியும் வருந்தவில்லை, தருண்.
'நல்லதா போச்சு. நம் இரண்டு பேரையும் ஒருசேர, 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கிற ஒரு பொண்ணு கிடைக்காதும்மா. தேவையில்லாத தொல்லை. இப்போ நம் வாழ்க்கையில என்ன குறை?' என்று, இயல்பாக தருண் கடந்து போனதுதான், சாந்தாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
'கல்யாணத்துக்கு அவகாசம் கேட்கிறதே, இரண்டு தரப்பும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளத்தான். அந்த புரிதலில் முடிவு நிச்சயம் நல்லதாகத்தான் இருக்கும். புரியாத இணைவை விட, புரிஞ்சுட்டு பிரியறது ரொம்ப சவுகரியம்...' என்றார், புரோக்கர்.
நியாயம்தான், ஆனாலும் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.
''ஆன்ட்டி...'' மென்மையாக கீர்த்தனா கைகளைத் தொட்டபோது, நினைவு கலைந்து உணர்வு மீள, இத்தனை நேரமும் முடித்து வைத்திருந்த கோபத்தின் மூட்டை முடிச்சவிழ்ந்தது.
''சொல்லும்மா எதுக்கு என்னை பார்க்கணும்ன்னு சொன்னே... அதுக்கு முன், அத்தனை இயல்பா நகர்ந்துட்டிருந்த கல்யாண பேச்சை, எதனால நிறுத்தினே... என்னால யூகிக்க முடியும், இந்த முடிவை நீதான் எடுத்திருப்பேன்னு...
''வருத்தமே இல்லைன்னு, நான் பொய் சொல்ல மாட்டேன். உன்னை நிறைய பிடிச்சிருக்கு. நீ நிராகரிக்கற அளவுக்கு எங்களிடம் என்ன குறை இருந்தது,'' என, முடித்தாள்.
''நான் காரணம் சொல்லணும்ன்னா, நீங்க சில கேள்விகளுக்கு பதில் சொல்லணும். இந்த கேள்வியும், பதிலும் எனக்கு எந்த விதத்திலும் உபயோகம் இல்லாதது. ஆனால், நிச்சயம் உங்களுக்கு சில குறிப்புகள் கிடைக்கலாம்.''
புரியாத பார்வை பார்த்தாள், சாந்தா.
''உங்களைப் பத்தியும், உங்க பையனைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.''
''எல்லாம் சொல்லித்தானே பெண் கேட்டோம். தருண், எனக்கு ஒரே பையன். என் கணவர் இறந்தபோது, அவனுக்கு ஐந்து வயசு. அப்போ, என் மாமியார் என்னை படுத்தின கொடுமைகளை பக்கத்திலிருந்து பார்த்து, வளர்ந்தவன்.
''அதனாலேயோ என்னவோ இயல்பான பிள்ளைகள் மாதிரி இல்லாமல், என் மீதான அவன் அன்பு, எல்லைகளே இல்லாதது. அவனுடைய உலகமே நான் தான். சின்ன வயதிலிருந்து அவனுக்குன்னு பெரிதாய் நண்பர்கள் கிடையாது. அதனால், எந்த கெட்ட பழக்கமோ, ஒவ்வாத சகவாசமோ கிடையாது. ஆபிஸ் விட்டு வந்தால் வீடு. அம்மா தான் உலகம்.
''இந்த காலத்துல, இப்படியொரு பிள்ளை யாருக்காவது கிடைக்குமா... அவனை வேண்டாம்ன்னு சொன்னவங்க தான் வருத்தப்படணுமே தவிர, அவன் இல்லை,'' என, சாந்தா காட்டமாய் சொல்லி முடித்ததும், கைகளை கட்டி, அதே புன்னகையுடன் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள், கீர்த்தனா.
''நிச்சயமா இது பெருமையான விஷயம் தான். அதோடு சேர்த்து இது கவனிக்கப்பட வேண்டிய விஷயமும் கூட.''
''அது சரி!'' என்றாள், சாந்தா.
''அம்மாவை நேசிக்கிறது வேற. ஆனால், தன் அன்றாட தேவைகளுக்கு முடிவெடுக்க கூட, அம்மாவை தேடறது சரியான மனநிலை இல்லை. எதை எல்லாம் நீங்க இவ்வளவு நேரம் ப்ளஸ்னு சொல்லிட்டு இருந்தீங்களோ, அதேதான் அவருடைய மைனசும் கூட.''
''அதானே, உன்னை மாதிரியான பெண்களுக்கு, அம்மா மேல பாசமா இருந்தால் பிடிக்காதே...''
மேற்கொண்டு பேசுவதற்குள் மொபைல் போன் சிணுங்கியது. கீர்த்தனாவை முறைத்தபடி போனை கையில் எடுத்தாள்.
''தருண், வந்துடறேன். ஒரு சினேகிதியை பார்க்க வந்தேன். அரைமணியில நான் வீட்டுக்கு வந்துடுவேன். எனக்காக காத்திருக்க வேண்டாம், நீ காபி போட்டு சாப்பிடு... ஏதாவது வேலை இருந்தால் முடி. நான் வந்தபிறகு பேசிக்கலாம். எனக்கு எந்த சிரமமும் இல்லை,'' எனப் பேசி, மொபைலை பையில் போட்டு எழுந்து நின்றவளை, குரலால் வழி மறித்தாள், கீர்த்தனா.
''இதுதான் நான் சுட்டிகாட்ட வந்ததும்... உங்க பையனைச் சுற்றி நீங்க போட்டு வச்சிருக்க வேலி. உங்கள் இருவரைத் தவிர, அந்த வீட்டில் இன்னொருவர் வாழ ஏதுவானதாக இல்ல.
''தீய பழக்கங்கள் இல்லாமல் வாழ்வது, வெகு அழகானது தான். ஆனால், இயல்பா நாலு நண்பர்கள் கூட பழகறதும், தனக்கான கனவுகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் வச்சுக்கிறதும் அவசியமானது, ஆன்ட்டி.
''பெற்றவர்கள் முடிவெடுத்து சொல்ற பெண்ணை திருமணம் செய்துக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணுடனான வாழ்க்கையை எப்படி வடிவமைச்சுக்கணும்கிற சிந்தனையாவது இருக்கணும் இல்லையா?
''உங்க வீட்டுக்கு வந்தபோது, இயல்பா சில விஷயங்களை கவனிச்சேன். 'டிவி' பார்க்கிறதுல இருந்து, சாப்பிடறது வரைக்கும் தன் அன்றாடத் தேவைகளுக்கு முடிவெடுக்க கூட உங்களையே சார்ந்து இருக்கிறார். அது இயல்பா இல்லை.
''நான் மருத்துவமனையில வேலை செய்யிறதால சொல்றேன்... இது ஒரு வகையான மனநோய். இதை, 'ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ்'ன்னு சொல்லுவாங்க. தன்னை மறந்து இன்னொரு மனிதருக்காக வாழ்றது காலப்போக்கில் தன்னை மறந்து போக வைக்கும்...
''சாரி ஆன்ட்டி... இதை மேலோட்டமா பார்க்கும்போது, கோபம் வரத்தான் செய்யும். உங்க பையனை திருமணம் செய்து கொண்ட பின், நான் இதை சொல்லி இருந்தால், அது பிரிவினைக்கான காரணமா தோணிடும். அதனால தான், விலகி நிற்கும்போது மனுஷியா நின்று இதைச் சொல்றேன்...
''அம்மாவின் மீது கொண்ட பேரன்பு, கொண்டாடப்பட வேண்டியது தான். ஆனால், கண்ணாடியில் அவர் முகம் பார்க்கும்போது உங்கள் முகம் தெரிந்தால், அது கவனிக்கப்பட வேண்டியது, ஆன்ட்டி.
''எங்க பாட்டி சொல்லுவாங்க, 'குழந்தைகளை துாக்கி வைத்தே பழக்கம் செய்யாதீங்க, அவர்கள் வளர்ச்சி தடைபடும்'ன்னு. அது எத்தனை உண்மைன்னு இப்போ புரியுது.
''நீங்கதான் உலகம்ன்னு நம்பறவருக்கு, உங்களைத் தாண்டிய உலகம் இருக்குன்னு காட்டுங்க. அவருக்கான எல்லா முடிவுகளையும் நீங்களே எடுக்காம, அவரை எடுக்கச் சொல்லி கை விடுங்க. நல்லவனா வாழ்றது மட்டும் போதாது, சரியானவனா வாழணும்கிற நிஜத்தை, நீங்க தான் அவருக்கு புரிய வைக்கணும்.
''எல்லாத்துக்கும் மேல, உங்க வீட்டில் ஆரோக்கியமான இடைவெளியை ஏற்படுத்துங்க. அப்போ தான் இன்னொரு ஜீவன் அந்த வீட்டில் இளைப்பாற முடியும்,'' அதே புன்முறுவலுடன் முடித்தாள்.
இத்தனை நாள் இல்லாத ஒரு உணர்வை, உணர்ந்தது போல் சாந்தாவிற்கு இருந்தது.
நா தழுதழுக்க, ''கீர்த்தனா...'' என்றாள்.
''வருத்தப்படாதீங்க ஆன்ட்டி. அளவில் பொருந்தாத உடைகளை திருத்தம் செய்யிற மாதிரி தான் மிகையான உணர்வுகளும். சரி பண்ணிட முடியும், நான் கிளம்பறேன். அடுத்த வாரம், 'இன்விடேஷ'னோட உங்களை சந்திக்கிறேன். நீங்களும், உங்க மகன் திருமண அழைப்போடு என்னை விரைவில் சந்திக்க வருவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு,'' என, மாற்றுப் பாதை ஒன்றைக் காட்டினாள், கீர்த்தனா.
எழுந்து நின்று கை நீட்டிய கீர்த்தனாவை, தெளிந்த மனதோடு தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டாள், சாந்தா.
எஸ். பர்வின் பானு