மார்ச் 30 - ஸ்ரீராமநவமி
ராமபிரானின் மகிமை பாரதமெங்கும் புகழ் பெற்றது. ஆனால், அவரைப் பெற்றவர்கள் மற்றும் தாத்தா, பாட்டியின் வரலாறு மிகவும் சுவையானது. அந்த வரலாறை ராமநவமி நன்னாளில் தெரிந்து கொள்வோம்.
ராமனின் தந்தை தசரதர். தசரதரின் தந்தை அஜன்; தாய் இந்துமதி. இருவரும் நகமும், சதையும் போல் வாழ்ந்தனர். ஒருமுறை அவர்கள், உல்லாசமாக வெளியே சென்றனர்.
அப்போது, வானில் தேவகானம் இசைத்தபடி சென்றார், நாரதர். அவரது தலையில் சூடியிருந்த ஒரு பூ உதிர்ந்து, இந்துமதியின் தலையில் விழுந்தது. அந்தக்கணமே இந்துமதி மயங்கி விழுந்து, இறந்து விட்டாள்.
மனைவி மீது அதீத அன்பு வைத்திருந்த அஜன், அழுது புலம்பினார். ஒரு பூ தலையில் விழுந்து, யாராவது மரணிப்பாரா என்ற சந்தேகம், அவருக்குள் ஏற்பட்டது.
அவரது துக்கத்தைக் கண்டு மனமிரங்கிய நாரதர், 'அஜனே, கலங்காதே. மனிதர்களால் கணிக்க முடியாத ஒரு செயல், மரணம் தான். அதுவே, இந்துமதிக்கும் நிகழ்ந்தது. முற்பிறப்பில், இவள் ஒரு தேவகன்னியாக இருந்தாள். அப்போது அவளது பெயர், ஹரிணி.
'திரணபிந்து என்ற முனிவர், தவமிருந்த போது, அவரது மன வலிமையை சோதிக்க, ஹரிணியை அனுப்பி மயக்கச் சொன்னான், இந்திரன். பெண்ணாசையே இல்லாத முனிவர், அவளை மானிடப் பிறவியாக பிறக்க சபித்தார்.
'அவள் அழுது புலம்பி, விமோசனம் கேட்கவே, 'எப்போது, உன் தலையில் வானிலிருந்து ஒரு பூ விழுகிறதோ, அன்று பழைய நிலை அடைவாய்...' என்றார். இப்போது, பூ விழுந்தது; அவளும் இறந்து விட்டாள். மனிதரோ, தேவரோ, அவரவர் செய்த வினைக்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும்...' என்றார்.
ஆனாலும், இந்துமதியை இழந்த கவலையிலேயே அஜனின் உயிரும் போய் விட்டது.
இதையடுத்து, ஆட்சி பொறுப்பேற்றார், தசரதர். அவரிடம் ஒரு துாதனை அனுப்பி, தனக்கு கப்பம் கட்ட சொன்னான், இலங்கை மன்னன் ராவணன்.
கோபமடைந்த தசரதர், அயோத்தியில் இருந்தே அம்புகளைத் தொடுத்து, ராவணனின் அரண்மனைக்கு, 'சீல்' வைத்து விட்டார். யாரும் உள்ளிருந்து வெளியே வர முடியவில்லை.
தன் தோல்விக்காக, ராவணன் வெட்கப்பட்ட போது, அரண்மனையை சுற்றியிருந்த அம்புகள் அகன்றன.
உடனே அவன், பிரம்மாவை நோக்கி தவமிருந்து, 'தசரதரே இவ்வளவு பலம் வாய்ந்தவர் என்றால், அவருக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னும் பலம் வாய்ந்தவர்களாக இருப்பர். எனவே, அவருக்கு குழந்தைகள் பிறக்கக் கூடாது...' என, வரம் பெற்றான்.
இதன்பின், தசரதருக்கும், கோசலைக்கும் திருமணம் நிச்சயமாவதை, தன் மாயசக்தியின் மூலம் அறிந்தான், ராவணன். கோசலையைக் கடத்தி, ஒரு பெட்டியில் வைத்து, கடலில் வீசி விட்டான்.
அந்தக் கடல் பகுதிக்கு தற்செயலாக சென்றார், தசரதரின் அமைச்சரான சுமந்திரர். அலையில் மிதந்த பெட்டியை எடுத்து, உள்ளிருந்த கோசலையை மீட்டு, தசரதருக்கு திருமணம் செய்து வைத்தார்.
ராவணன் பெற்ற வரத்தால் தான், தசரதருக்கு குழந்தையில்லை. ராம சகோதரர்களின் பிறப்பு, ஒரு யாகத்தின் மூலம் நடக்க வேண்டியதாயிற்று.
ராமனின் தாத்தா, பாட்டி பற்றிய வித்தியாசமான தகவல்களை, ராமநவமி காலத்தில் அறிந்து கொள்வோம்.
தி. செல்லப்பா