மளிகைக் கடைக்காரரின் மனிதநேயம்!
எங்கள் பகுதியிலுள்ள, ஒரு மளிகைக்கடையில் தான், நான் உட்பட பலரும் பொருட்கள் வாங்குவது வழக்கம். வாங்கும் பொருட்களின் பட்டியலை, வாடிக்கையாளர்கள் எழுதி தந்தாலோ அல்லது வாயால் சொன்னாலோ, கடை முகப்பில் வரிசையாக அமர்ந்திருக்கும் பெண்கள், கம்ப்யூட்டரில், 'பில்' போட்டு தருவர்.
அந்த, 'பில்'லை எடுத்து போய் காசாளரிடம் கொடுத்து, தொகையைக் கட்டி காத்திருக்க வேண்டும். கடைக்குள் பணிபுரியும் ஊழியர்கள், 'பில்'லில் உள்ள பெயரை அழைத்து, பொருட்களை சரி பார்த்த பின், நம்மிடம் கொடுத்து விடுவர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கம்ப்யூட்டரில், 'பில்' போடும் பெண்கள் அனைவருமே, நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள். மனிதாபிமானத்தோடு, அந்த வேலைவாய்ப்பை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார், மளிகைக்கடை முதலாளி.
அதேபோல், கடைக்குள் பொருட்களை எடுத்து வைக்கும் அனைவருமே, காது கேளாத மாற்றுத்திறனாளிகள். மாற்றுத் திறனாளிகளும், கவுரவமாக வாழ, வழி ஏற்படுத்தித் தந்த அந்த மளிகைக்கடைக்காரரை, மனதார வாழ்த்தினேன்!
-பொ.தினேஷ்குமார், சென்னை.
வெள்ளை அறிக்கை அனுப்புங்கள்!
வெளிநாட்டில் பணிபுரியும் மகன், சமீபத்தில், என், 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தான். அதை மனைவிக்கு, 'ஷேர்' செய்தேன். அவளும் படித்து விட்டு குதுாகலமானாள். அப்படி என்ன செய்தி அது?
அவன் வெளிநாட்டுக்கு புறப்படும் முன், 'ஆண்டுக்கு ஒருமுறை, உன் பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை அனுப்பி வை. அந்த ஓராண்டில், உன் மொத்த சம்பளம் எவ்வளவு, வீட்டு வாடகை உள்ளிட்ட அனைத்து செலவுகளும் போக பற்றாக்குறை ஏற்பட்டு, கடன் ஏதாவது வாங்கியிருக்கிறாயா என்ற விபரங்களைத் தெரியப்படுத்து...' என்றேன்.
பரவாயில்லை. அவன் தன் சம்பளப் பணத்தை சிக்கனமாக செலவு செய்து, 25 சதவீதம், வங்கியில் சேமித்து வைத்திருந்தான். ஒருவேளை, வரவுக்கு மீறிய செலவு செய்து, கடனாளி ஆகிருந்தால், பெற்றவர்களை பிரிந்து வெளிநாட்டிற்கு சென்றதற்கு பலன் இல்லாமல் போயிருக்கும்.
'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழிக்கேற்ப, வெளிநாடு செல்வதே திரவியத்திற்காக தானே... தேடிய திரவியத்தை கடலில் கரைத்த பெருங்காயமாய் ஆக்கிவிடாமல், சிப்பிக்குள் முத்து மாதிரி பாதுகாத்து, பிறந்த மண்ணிற்கு அதை கொண்டு வந்து சேர்ப்பது தானே, நல்ல பிள்ளைக்கு அழகு.
எனவே, வெளிநாட்டுக்கு பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் அனைவரும், ஆண்டுக்கு ஒருமுறை, வெள்ளை அறிக்கை அனுப்புமாறு கூறுங்கள். வீடும், நாடும் வளம் பெறும்.
கே. ஜெகதீசன், கோவை.
வடமாநில தொழிலாளரின் தெளிவு!
சமீபத்தில், நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். நண்பருடைய குடியிருப்பில், ஆண்டு விழா நிகழ்ந்து கொண்டிருந்தது. நண்பரின் அழைப்பை ஏற்று, அவ்விழாவுக்கு நானும் சென்றேன்.
அக்குடியிருப்பில் பல்வேறு பணிகளை செய்து வரும், வடமாநில தொழிலாளர் குடும்பத்து சிறுவர்கள் சிலர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திருக்குறள், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் கவிதைகள் என, தெளிவான தமிழ் உச்சரிப்போடு ஒப்பித்து, பலரது பாராட்டுகளையும் பெற்றனர்.
நிகழ்ச்சி முடிந்தபின், அத்தொழிலாளர்களிடம், இதுகுறித்து வினவினேன். அவர்களும், சிறிது கூட திக்கித் திணறாமல், தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பில், 'பிழைக்க வந்த இடத்தில், எங்களை வாழ வைப்போரின் மொழியை கற்றுக்கொள்ளாமல், எங்கள் மொழியை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால், நாங்கள் முன்னேற முடியுமா? அதேபோல, மொழியை வைத்து ஆதாயம் தேட, நாங்கள் ஒன்றும் அரசியல்வாதிகள் இல்லை.
'எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தாய்மொழி மற்றும் எங்களை வாழ வைக்கும் மொழி, இரண்டுமே உயர்வு தான்... 'அதனால் தான், தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நாங்கள், தமிழை கற்றுக் கொண்டதுடன், எங்கள் பிள்ளைகளையும், தமிழ் வழி பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறோம்...' என்றனர். அவர்களின் கருத்தை ஆமோதித்து, அவர்களை பாராட்டி விட்டு வந்தேன்!
-வெ.பாலமுருகன், திருச்சி.