இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் எழுதி இயக்கிய, சித்தி படத்தில், எம்.ஆர்.ராதாவின் இரண்டாம் தாரமாக, பெறாத பல குழந்தைகளின் தாயாக நடித்தார், பத்மினி. அந்தக் குழந்தைகளில் நாகேஷும் ஒருவர்.
ஒரு காட்சியில் பத்மினி, அவரை அடிக்க வேண்டும். முதலில் ஒத்திகையின் போது, சாதாரணமாக அடித்தார், பத்மினி. உடனே நாகேஷ், 'கொஞ்சம் அழுத்தமாக அடியுங்கள்...' என்று சொல்லி விட்டார்.
பிறகு கேட்க வேண்டுமா? நாகேஷ் பாடு அதோகதி தான். அதன் பின் எந்த காட்சியில் பத்மினியோடு நடித்தாலும் சற்று தள்ளியே நிற்பார், நாகேஷ்.
'அந்த அம்மா அடித்தால் அவ்வளவு தான்...' என்று சிரிப்பார், நாகேஷ்.
ஏ.பி.நாகராஜனின் திருவருட்செல்வர்; கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில், கண் கண்ட தெய்வம்;ஏ.சி.திருலோக சந்தர் இயக்கத்தில், சிவாஜி, கே.ஆர்.விஜயா, பத்மினி நடித்த, இரு மலர்கள் ஆகியவை, மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
திருவருட்செல்வர் படத்தில் இடம்பெற்ற மூன்று கதைகளில், ஒன்றில் பத்மினி நடித்தார். 'மன்னவன் வந்தானடி தோழி...' என்ற பாடலுக்கு, அவர் நடனம் ஆடினார். இந்தப் பாட்டு ஒன்பது நிமிடங்கள் வரும், மிக நீளமான பாட்டு.
அந்த நடனத்தை மிகச் சிறப்பாக அமைத்திருந்தார், டான்ஸ் மாஸ்டர் பி.எஸ்.கோபால கிருஷ்ணன். அதாவது, நடனத்தின் பின்னணியில் ஒன்பது சிலைகளும், ஒன்பது விதமான ஆடைகளில் இருக்கும். ஒவ்வொரு சிலையை போலவே, பத்மினியும் உடை அணிந்து நடனமாடுவார்.
எல்லாவற்றையும் சிறப்பாக செய்த பத்மினி, ஒன்பதாவது சிலையின் நடனத்தில் சிறு தவறு செய்து விட்டார். இரவு, 10:00 மணி ஆனதால், 'நாளை வைத்துக் கொள்ளலாம்...' என்றார், இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.
'நான் ஒரே மூடில் நடித்து முடித்து விடுகிறேன்...' என்று சொல்லி, நடனமாடி முடித்தார், பத்மினி. பாடல் காட்சி சிறப்பாக அமைந்தது. உடனே தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாருக்கு, 108 தேங்காய் உடைத்தார், பத்மினி.
பத்மினி நடித்த முதல் தெலுங்கு படம், திருகுபாடு, 1950ல் வெளியானது. பிரபல இயக்குனர் பி.புல்லையா (நடிகை சாந்தகுமாரியின் கணவர்) இயக்கினார். இது, இரு சகோதரிகளின் கதை. இருவரில் ஒருவராக பத்மினி நடித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின், தயாரிப்பாளர் ஸ்ரீ ராமுலு நாயுடு, பத்மினியை வைத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் எடுத்த படம், பொன்னி. இது, தமிழ், மலையாளத்தில் அதே பெயரிலும், தெலுங்கில், ஒக்க தல்லி பில்லலு என்ற பெயரிலும் வெளியானது.
அதே ஸ்ரீராமுலு நாயுடுவின், மரகதம் எனும் படத்தில், பத்மினியின் அப்பாவாக நடித்தவர், வீணை எஸ்.பாலசந்தர்.
கதைப்படி, கடலில் விழுந்து மயக்கம் அடைந்த மகள் பத்மினியை, அப்பாவாக நடித்த வீணை எஸ்.பாலசந்தர் துாக்கிக் கொண்டு கரைக்கு வருவது போல ஒரு காட்சி.
இந்தக் காட்சியில் பத்மினியை துாக்கி வந்த, ஒல்லிக்குச்சியான, வீணை பாலசந்தரால், தொடர்ந்து சுமந்து வர முடியவில்லை. எனவே, தடால் என்று, கேமிரா முன் பத்மினியை கீழே போட்டு விட்டார். யூனிட்டே திகைத்து போனது.
பத்மினிக்கு முதுகு பக்கம் அடி. அதற்காக பத்மினியிடம் பலமுறை மன்னிப்பு கேட்டார், வீணை எஸ்.பாலசந்தர்.
இந்தச் சம்பவத்தை பத்மினி மறந்து விட்டாலும், வீணை எஸ்.பாலசந்தர் மறக்கவில்லை. அதற்கு ஈடு செய்யும் விதமாக, பத்மினி திருமணத்தின் போது, வீணையை மீட்டுவதற்கான செயற்கை நகம் இரண்டை, தங்கத்தால் செய்து பரிசளித்தார்.
வீணை வாசிப்பதிலும் பயிற்சி பெற்றவர், பத்மினி. அவைகளை தன் இறுதி காலம் வரை பத்திரமாக வைத்திருந்தார், பத்மினி.
சிறந்த நடிகைக்கான விருது கிடைத்த மலையாள படம்...
— தொடரும்.
'தேவர் பிலிம்ஸ்'சில், பத்மினி நடித்த ஒரே படம், பெண் தெய்வம். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார், ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் சுட்டித்தனமான செயல்களும், துறுதுறுப்பும், பத்மினியை கவர்ந்தது. ஸ்ரீதேவி, சினிமாவில் பிரமாதமாக ஜொலிப்பாள் என்று, பத்மினி சொன்னது பிற்காலத்தில் உண்மையானது.
ஜெய்சங்கரோடு பத்மினி நடித்த ஒரே படம், எதிர்காலம். அதில், அவருக்கு பெண் ரவுடி வேடம். ரிக் ஷா ஓட்டுவார், சிலம்புச் சண்டை செய்வார். இவருக்கு ஜோடி, ஜெமினி கணேசன்.
- சபீதா ஜோசப்