பா - கே
அன்று, அலுவலகத்தில், உதவி ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் இடையே, பித்துக்குளித்தனமும், மன நோயும் ஒன்றா அல்லது வெவ்வேறானதா என்பது பற்றி, சீரியசாக விவாதம் நடந்து கொண்டிருந்தது.
உடனே, அங்கிருந்த லென்ஸ் மாமா, வேகாத வெயிலில் ஜிப்பா மேல், கோட் அணிந்து வந்திருக்கும் நாராயணனை காட்டி, 'இதுதான் பித்துக்குளித்தனம்...' என்றார்.
'அட, சும்மாயிருப்பா. இது, என் மாப்பிள்ளை, டில்லி போன போது, மோடி அணிவாரே அது போன்று ஒரு கோட் வாங்கி வந்து, 'பிரசன்ட்' செய்தது...' என்றவர் தொடர்ந்தார்:
அது போகட்டும்... மனிதர்களில் சிலர், ரொம்ப வித்தியாசமா நடந்துக்குவாங்க. மத்தவங்களுக்கு அது ரொம்ப ஆச்சரியமா கூட இருக்கும். இவங்களைப் பார்த்து நாம, பித்துக்குளி என்போம். ஆனால், உளவியல் இவங்களை, 'எக்ஸ்சென்ட்ரிக்ஸ்'ன்னு சொல்லும்.
இவங்களை, 'மன நோயாளிகள்'ன்னு தவறா புரிஞ்சுக்கப்படாது. அவங்க வேற, இவங்க வேற.
'எக்ஸ்சென்ட்ரிக்ஸ்' பத்தின சில விபரங்களை, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தை சேர்ந்த டாக்டர் டேவிட் விக்ஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?
டேவிட்டும், அவரது உதவியாளர் கேட் வுட்டும், இங்கிலாந்து முழுவதும் மூன்று ஆண்டுகள் சுற்றி ஆய்வு நடத்தினர்.
நான் சொன்னது போல், ஒரு, 'மாதிரி'யா இருக்கிற ஆட்கள் பலரை சந்திச்சு பேசினாங்க. இது மாதிரி ஒரு ஆய்வு நடக்கிறது, அதுதான் முதல் முறை.
நாம இவங்களை பார்த்து பித்துக்குளிங்கறோம். 'எக்ஸ்சென்ட்ரிக்ஸ்'ங்கறோம். கிண்டல் கூட பண்றோம். ஆனா, அவங்களோட அறிவு ரொம்பவும் தெளிவானது என்கிறார், டேவிட்.
அவங்க உடல் நலமும் ரொம்ப நல்லா இருக்கு, மகிழ்ச்சியும் அதிகம், ஆயுளும் அதிகம்.
இந்த உலகம் பிறந்ததிலிருந்தே, இப்படிப்பட்ட வித்தியாசமான ஆசாமிகளும் பிறந்திருக்காங்க.
செல்வந்தர் ஒருவர், தன்னோட நாய்க்கு லட்சக்கணக்குல பணம் செலவு பண்ணி, கல்யாணம் பண்ணி வச்சிருக்கார். ஒரு கோடீஸ்வரர், தான் வளர்த்த பூனைகளுக்கு, தன் சொத்து முழுவதையும் எழுதி வச்சுருக்கார். பல பேர், அவங்க வளர்த்த செல்ல பிராணிகளுக்கு பளிங்கு கல்லால் சமாதி கட்டி வச்சுருக்காங்க.
சில பேர், அவங்களுக்கு பிடித்தமான பிரபலம் எப்படி தலை முடி, தாடி வச்சுக்கிறாரோ, டிரஸ் எப்படி அணிகிறாரோ அதே மாதிரி தங்களை மாற்றிக் கொள்கின்றனர்.
மலைக் குகையில் போய் குடியிருக்கிறது போன்ற வினோதமான செயல்களை பின்பற்றுகின்றனர்.
இன்னும் பலருக்கு, வசதியில் எந்த குறையும் இருக்காது. வீடு, கார், பணம் எல்லாம் தாராளமா இருக்கும். அவ்வளவு இருந்தாலும், யாராவது ஒரு நண்பர் வீட்டு விசேஷத்திற்கோ அல்லது கடைக்கு போனாலோ, அவங்க ரொம்பவும் மரியாதையா வரவேற்று வேண்டியதை செய்து கொடுப்பாங்க.
ஆனா, இவரு, அவங்களுக்கு தெரியாம ஏதாவது ஒரு பொருளை திருடி பாக்கெட்ல போட்டுக்கிட்டு வந்துடுவார். அப்படி திருடி வந்தா தான் அவருக்கு திருப்தி!
இவங்களை ஆய்வு செய்து கடைசியா, 'பொதுவா, இவங்க அதி புத்திசாலிகளா இருக்காங்க. ஒருமைப்பட்ட மனம், கருமமே கண்ணான பண்பு, தனிமையை நாடற மனப்பான்மை எல்லாம், இவங்களுக்கு உண்டு.
'அவங்கள்ல பல பேர், பெற்றோருக்கு முதல் குழந்தையா அல்லது ஒரே குழந்தையா இருப்பாங்க! இது மாதிரியானவர்களில் பெண்கள் ஒரு பங்குன்னா, ஆண்கள் ரெண்டு பங்கு!
'இவங்கள்லாம் ஆக்கப்பூர்வமான செயல் புரிகிறவங்களா, அடுத்தவங்ககிட்ட அன்பு காட்டறவங்களா, உற்சாகமூட்டறவங்களா இருக்காங்க...' என்று கூறியுள்ளார், டாக்டர் டேவிட்.
- இப்படி நாராயணன் கூறி முடித்ததும், அதுவரை காரசாரமாக நடந்து வந்த விவாதம் முடிவுக்கு வந்தது.
இதுபற்றி வாசகர்களின் கருத்து என்னவோ!
ப
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமி பற்றிய புத்தகம் ஒன்றில் படித்தது:
'கோவலன்' நாடகம், மதுரையில நடந்தது. அதுல ஒரு முக்கியமான கட்டம்.
கண்ணகிக்கிட்ட சிலம்பை வாங்கிக்கிட்டு, அதை விற்கிறதுக்கு மதுரை நகருக்கு புறப்படுகிறான், கோவலன்.
அப்போது, கண்ணகி பாடற மாதிரி ஒரு நாடக பாடல்.
'மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு மன்னா போகாதீர் இன்று!' என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டு.
மேடையில், கண்ணகியாக நடித்தவர் பாடிய உடனே கூட்டத்தில் சலசலப்பு.
'நம் ஊர்லயே வந்து, நமக்கு முன்னாடியே நின்னுகிட்டு, 'மா பாவியோர் கூடி வாழும் மதுரை'ன்னு சொல்றாங்களே... என்ன தைரியம்? அழைத்து வா அந்த நாடக ஆசிரியரை...' என்று கூச்சல் போட்டனர், மக்கள்.
வேற வழியில்லை. மெதுவாக மேடைக்கு வந்தார், நாடக ஆசிரியர்.
நான்கு பக்கத்திலிருந்தும் கேள்விக்கனைகள். மக்களைப் பார்த்து, 'கொஞ்சம் அமைதியா இருங்க...'ன்னு சொல்லிட்டு, தன்னுடைய விளக்கத்தை சொல்ல ஆரம்பித்தார், நாடக ஆசிரியர்:
'மா' - அப்படின்னு சொன்னா, திருமகளாகிய லட்சுமி என்று அர்த்தம்.
'பா' - என்றால், கலைமகளாகிய சரஸ்வதி.
'வி' - என்றால், மலை மகளாகிய பார்வதி.
மாபாவியோர் என்றால், திருமகளும், கலைமகளும், மலைமகளும் ஆகிய மூவரும் என்று அர்த்தம்.
இந்த மூன்று பேரும் வாழ்கிற மதுரை, புனிதம் நிறைந்தது; சகல செல்வங்களும் நிறைந்தது. அப்படிப்பட்ட இந்த ஊரில், நான் அணிந்து கொள்ளும் இந்தச் சாதாரண சிலம்பை யார் வாங்கிக் கொள்வர் என்ற எண்ணத்தோடு தான், கண்ணகி அப்படிக் கூறினாள்.
ஆகவே, மதுரையை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. பெருமைப்படுத்த நினைச்சு தான் அப்படி எழுதினேன் என, விளக்கம் கொடுத்தார், நாடக ஆசிரியர்.
இதை கேட்டதும், எல்லாரும் சமாதானம் ஆயிட்டாங்க.
இப்படி விளக்கம் கொடுத்த அந்த நாடக ஆசிரியர் யார் தெரியுமா?
தமிழ் நாடக உலகின் முதல் ஆசான், சங்கரதாஸ் சுவாமிகள் தான்.
சங்கரதாஸ் சுவாமிகள், கல்யாணமே பண்ணிக்கல. தமிழ் நாடக கலைக்கு தன்னையே அர்ப்பணம் செய்தவர். அவர், நாடக ஆசிரியர் மட்டுமல்ல, மேடை நாடக இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என, பன்முகம் கொண்டவர்.
ஒருமுறை, 'சாவித்திரி' என்ற நாடகத்துல, இவரு, எமதர்மனா வேஷம் போட்டு நடிச்சிருக்கார்.
நாடகம் பார்த்துக்கிட்டிருந்த கருவுற்ற ஒரு பெண்மணிக்கு, பயத்தில், அங்கேயே குழந்தை பிறந்துட்டுதாம்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அவரு இந்த வேஷம் போடும் போது, ஜனங்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்!
நாடக உலகம், தனி தான் என்று நினைத்துக் கொண்டேன்!