வி. பரமேஸ்வரன், நெல்லை: பெரியோர், சிறியோர் என்று சொல்கின்றனரே... அவர் எவர்?
செய்ய இயலாத அரிய செயல்களை செய்பவர்களை, பெரியோர் என்றும், அத்தகைய செயல்களை செய்ய இயலாதவர்களை, சிறியோர் என்றும் கூறுவர்.
பி. மோகன்ராஜு, சென்னை: லென்ஸ் மாமா, உ.பா., அருந்தியபின், பேசும் ஆங்கிலத்தில், இலக்கண பிழை இருந்ததுண்டா?
அவர், உ.பா., இல்லாமல் பேசும்போதே, அமெரிக்கன் இங்கிலீஷில் தான் பேசுவார். உ.பா.,வுக்கு பின், ரொம்ப இனிமையாக, அமெரிக்கன் இங்கிலீஷில் பேசுவார். இலக்கண பிழை ஏதும் கிடையாது!
* தே. மாதவராஜ், கோவை: நாட்டில் நடக்கும் அன்றாட பிரச்னைகள் பற்றி அறிக்கை வெளியிடுகிறாரே, விஜயகாந்த்... பின் ஏன் வெளியே வர மறுக்கிறார்?
வழக்கம்போல் அவருக்கு பேச்சு, அறிக்கைகளை எழுதிக் கொடுப்பவர்களின் செயலிலேயே பின்பற்றுகிறார். அவருக்கு, உடம்புக்கு முடியவில்லை. அதனால் தான், வெளியே வரவில்லை!
ஆர். அமிர்தபாலன், குஞ்சன்விளை, குமரி: தேசிய அளவில், எதிர்க்கட்சிகளை, ஓரணியில் திரட்டும், தி.மு.க.,வின் நோக்கம் பலிக்குமா?
நிச்சயம் பலிக்கப் போவதில்லை. ஏற்கனவே, மேற்கு வங்க முதல்வர் மம்தா, தான் தனியாக நிற்க போவதாக சொல்லி விட்டாரே... அத்துடன், எதிர்க்கட்சிகளாக உள்ள சில மாநில முதல்வர்களும், பிரதமர் கனவில் உள்ளனரே!
* ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்: தாம் அரசியலுக்கு வராமல் போனதற்கு, 'கொரோனா'வையும், உடல் நலத்தையும் காரணம் சொல்கிறாரே, ரஜினிகாந்த்...
ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை சமீபத்தில் சென்று பார்த்து, ஸ்டாலினை புகழ்ந்து பேட்டி அளித்தார். இப்போது, தமது அடுத்த படத்திலும் நடித்துக் கொண்டுள்ளார். உடல் நலம் சரியாகி விட்டது தானே... இப்போது, கட்சி ஆரம்பித்தால் என்ன? அவருக்கு, எங்கிருந்தோ ஒரு, 'பிரஷர்...' கட்சி ஆரம்பிக்கக் கூடாது என...
சி. கண்ணன். வத்தலக்குண்டு: இலங்கை கடற்படையினர், அடிக்கடி நம் மீனவர்களை, கைது செய்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது என, இம்சை கொடுத்து வருகின்றனரே... இதற்கு விடிவு காலமே கிடையாதா?
ஒரே தீர்வு தான் உண்டு. நம் மீனவர்கள், எல்லை தாண்டக் கூடாது. ஏன், நம் நாட்டிலேயே, தமிழக மீனவர்கள், குஜராத் மாநிலத்தில் பிடித்த மீன்களையே பறிமுதல் செய்துள்ளனரே!
எ. முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த, ஈ.வெ.ரா.,வின் பேரன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ராகு காலம் முடிந்த பிறகு தானே, பதவி ஏற்றுள்ளார்?
தன் தாத்தாவின் கடவுள் எதிர்ப்பை புரிந்து கொண்டார் போலும். அதனால், இவ்வாறு நடந்து கொள்கிறார். இதே போல தானே, ஹிந்து கோவில்களாக சென்று வழிபடுகிறார், ஸ்டாலினின் மனைவி துர்கா!