சதாசிவத்திடம், ''இந்தாங்க காபி,'' என நீட்டினாள், காமாட்சி அம்மாள்.
''குமாரிடம் மாத்திரைகள் வாங்க சொல்லிட்டியா, காமு?'' என கேட்டார், சதாசிவம்.
''நேத்து ராத்திரியே சொல்லிட்டேன். இன்று வாங்கிட்டு வரேன்னு சொன்னான்,'' என்றாள், காமாட்சி.
சதாசிவம் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ராமகிருஷ்ணன், இளையவன், குமார்.
மூத்தவனுக்கு, படிப்பு வராததால், காலேஜ் முழுமையாக முடிக்கவில்லை. உள்ளூரில் சிறிய மளிகை கடை நடத்தி வருகிறான்.
இளையவன், டிகிரி முடித்து, உள்ளூரில், கார் ஷோரூமில் வேலை. இருவருக்குமே திருமணமாகி பெரியவனுக்கு, ஒரு ஆணும். இளையவனுக்கு, ஒரு பெண்ணும் உள்ளனர். ஓரளவுக்கு சுமூகமாக சென்று கொண்டிருந்தது, குடும்பம்.
சதாசிவம், சாந்த சொரூபி; காமாட்சி, தடாலடி. மனதில் பட்டதை சட்டென சொல்லி விடுவாள். தைரியமும், தன்னம்பிக்கையும் உடையவள். காமாட்சியின் துணிச்சலை கண்டு சதாசிவம், பயந்து, வியந்ததும் உண்டு.
சதாசிவம், சிக்கனக்காரர்; அதே வேளையில் கஞ்சத்தனம் கிடையாது; சேமிக்கும் பழக்கம் உண்டு. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதால், பென்ஷன் கிடையாது. ஆனால், பி.எப்., தொகை வந்தது.
காமாட்சி சேர்த்து வைத்திருந்த கொஞ்ச பணத்துடன், பி.எப்., தொகையையும் சேர்த்து, வங்கியில் டிபாசிட் செய்திருந்தார். சதாசிவத்திற்கு உடலில் பல பிரச்னைகள். ஒவ்வொரு மாதமும் மருத்துவச் செலவுக்கு, சேமிப்பிலிருந்து கிடைக்கும் வட்டி பணத்தை பயன்படுத்திக் கொள்வார்.
மாலை 6:00 மணி. காலையில் கொடுத்து வைத்திருந்த பூவை வாங்கிக் கொண்டு, ''நான் அம்மன் கோவிலுக்கு போயிட்டு, அப்படியே என் தோழி சித்ராவை பார்த்துட்டு வரேன்...'' என்று சொல்லி, கிளம்பினாள், காமாட்சி.
கோவிலுக்கு போய் விட்டு, சித்ரா இல்லாததால், சீக்கிரமே வீடு திரும்பி விட்டாள்.
இரவு, 8:00 மணிக்கு வீடு திரும்பிய குமார், கையில் ஸ்வீட் பாக்கெட்டுடன், மிகவும் சந்தோஷத்தில் இருந்தான். காமாட்சியிடம் மாத்திரையை கொடுத்தான். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இரவு, 9:00 மணி.
அனைவரும் சாப்பிடும்போது தான், ''அப்பா, மதுரையில் துவங்கப் போகும் ஷோரூமில், சேல்ஸ் மேனேஜர் புரமோஷனுடன் கூடிய டிரான்ஸ்பர் எனக்கு கிடைத்துள்ளது. வரும், 25-ம் தேதி அங்கு, 'ஜாயின்' பண்ணணும். இங்குள்ளதை விட அங்கு சம்பளம் அதிகம்,'' என்றான், குமார்.
வீட்டில் அனைவருக்கும் சந்தோஷம். கடையை பூட்டி விட்டு வந்த ராமகிருஷ்ணனிடமும், விஷயத்தை கூறினர். பேரப் பிள்ளைகளோடு மகிழ்ச்சியுடன் இனிப்பு சாப்பிட்டனர்.
அதற்கடுத்த மூன்று நாட்கள், வீட்டில் அமைதி. அண்ணனும், தம்பியும், தங்களது மனைவியரை பார்த்துக் கொண்டனரே தவிர, ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியான அந்த சூழ்நிலையை புரிந்து கொண்டாள், காமாட்சி.
''காமு, வீட்ல என்ன நடக்குது?'' என்றார், சதாசிவம்.
''பொறுங்கள், பூதம் வெளியே வரும்,'' என்றாள், காமாட்சி.
''பூதமா?'' ஒன்றும் புரியவில்லை, சதாசிவத்திற்கு.
ஓடிக் கொண்டிருக்கும் பிரச்னை இது தான்...
அம்மா - அப்பாவை யார் பார்த்துக் கொள்வது? ஒருவரால் மட்டும் இருவரையும் கவனிக்க முடியாது. ஆகவே, அப்பாவை ஒருவரும், அம்மாவை ஒருவரும் பார்த்துக் கொள்வதாக பிளான். ஆனால், யாரை யார் பார்த்துக் கொள்வது என்பது தான் வாக்குவாதம்.
அன்று காலை, ''சித்ரா வீடு வரை போகிறேன். வர கொஞ்சம், 'லேட்' ஆகும்,'' என்று சொல்லிப் போனாள், காமாட்சி.
''எதற்கு காமு?'' என கேட்டார், சதாசிவம்.
''சும்மா தான்,'' என்றாள், காமாட்சி.
இதற்கிடையே, குமாருக்கும், ராமகிருஷ்ணனுக்கும் வீட்டில் பனிப்போர்.
இருவரையும் பார்த்துக் கொள்ள மகன்களுக்கு மனது இல்லை. இருவருக்குமே அம்மாவை பராமரிப்பதில் தான் விருப்பம். ஏனென்றால், அம்மாவிற்கு மருத்துவ செலவு கிடையாது. சற்று படபட என பேசுவார். துணிவு உள்ளவர். நல்ல ஆலோசனை தருபவர். அவருக்கு கோவில் ஒன்று தான் பிரதானம்.
பூ வாங்கி, தன் கையால் கட்டிக் கொண்டு போய், சாமிக்கு போட்டு கும்பிட்டு வருவதில், அவ்வளவு சந்தோஷம். மற்றபடி எதற்கும் ஆசைப்பட மாட்டாள்.
ஆகவே, அம்மாவை தன்னுடன் வைத்துக் கொண்டால் செலவு குறைவு என்ற ஒரு மட்டமான யோசனை இருவருக்கும். மேலும், அம்மா தன்னுடன் இருந்தால், மனைவியருக்கு உதவியாக இருப்பார் என்ற எண்ணம்.
ஆனால், அப்பாவுக்கு ஒவ்வொரு மாதமும், டாக்டர், 'செக் - அப்' மற்றும் அடிக்கடி ரத்தப் பரிசோதனை என, குறைந்தபட்சம், 2,000 ரூபாய் செலவாகும். அதுவுமின்றி, அவர் ஒரு சாப்பாட்டு பிரியர் என்பதால், எதாவது வாங்கி வரச் சொல்வார்.
படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால், தினமும் பேப்பர் மற்றும் சில வார இதழ்கள் வாங்கி வரவேண்டும். அவரை திருப்திப்படுத்துவது பெரிய கஷ்டம்.
அதனால் தான் அப்பாவை அங்கே, இங்கே தள்ளிவிடும் எண்ணத்தில் பந்தாடிக் கொண்டிருந்தனர்.
காலையில் வெளியே சென்ற காமாட்சி, மாலை, 5:00 மணி வரை வீடு திரும்பவில்லை. சற்று கவலையாக இருந்தார், சதாசிவம்.
பெரிய மருமகளிடம், ''சித்ரா வீட்டுக்கு போன் செய்து, காமு ஏன் இன்னும் வரவில்லை என்று கேள்,'' என்றார்.
''வருவார்கள் வருவார்கள்... அவர்கள் என்ன சின்ன பிள்ளையா?'' என்று அலட்சியமாக சொல்லிப் போனாள்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில், அனைவரும் சாப்பிடும் போது பூகம்பம் மெதுவாக ஆரம்பித்தது.
''முடிவா என்ன சொல்ற குமார்?'' ஆரம்பித்தான், பெரியவன்.
''எத்தனை முறை தான் சொல்வது... நான் போகிற இடம் மதுரை. என்னால் இருவரையும் அழைத்து கொண்டு போக முடியாது. நம்மூரை விட அங்கு வீட்டு வாடகை, பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் அதிகம். இரண்டு மடங்கு செலவாகும். முடிந்தால் நீ பார்த்துக் கொள்,'' என்றான், குமார்.
''குமார்... உனக்கு இப்போது சம்பளமும் அதிகம். அதனால், உன்னால் முடியும். என்னால் இருவரையும் எப்படி பார்க்க முடியும். தற்போது, கடையில் அவ்வளவா வியாபாரமும் இல்லை. என் பிள்ளையும், 6ம் வகுப்பு போகிறான். அவனுக்கும் படிப்பு செலவு கூடத்தான் ஆகும். அதனால், வேறு ஏதாவது தொழில் பார்க்கலாமா என்று யோசிக்கிறேன்,'' என்றான்.
''சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா?''
இப்படியே வாக்குவாதம் மாறி மாறி போனது.
''இப்படி செய்வோம், வேணும்ன்னா அத்தைய நாங்க பார்த்துக்கிறோம். மாமாவ நீங்க கூட்டிட்டு போங்க,'' என, புதிய அணுகுண்டு போட்டாள், மூத்த மருமகள்.
''ஏன், அத்தையை நாங்க கூட்டிட்டு போறோம். மாமாவை நீங்க பார்த்துக்கோங்க,'' என்றாள், இளையவள்.
அம்மா இல்லாமல், ஒரு நிமிடம் கூட, அப்பா இருக்க மாட்டார் என்பது தெரிந்தும், சுயநலத்திற்காக பொறுப்பை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தனர்.
மருமகள்கள் இருவரும் கோரஸாக, 'அப்படியானால் இருவரையும் ஒரு இல்லத்தில் சேர்த்து விடுவோம்...' என்றனர்.
''என்னது இல்லமா?'' பதறினார், சதாசிவம்.
எந்த சஞ்சலமும் இன்றி அமைதியாக, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், காமாட்சி.
அப்போது பெரிய மருமகள் குறுக்கிட்டு, ''ஏன் நமக்குள்ள பேசிட்டு, அவரிடமே கேட்டு விடுங்கள். அவர்களின் முடிவு என்ன... தனித் தனியே நம்மோடு இருக்காங்களா, இல்லை...'' என்று சொல்லும்போதே, கையை உயர்த்தி, ''போதும் நிறுத்துங்கள்...'' என்று, உரத்த குரலில் சத்தமிட்டாள், காமாட்சி; சதாசிவம் உட்பட அனைவரும் ஆடிப்போயினர்.
''இத்தனை வயதுக்கு பின் அவரையும், என்னையும் பிரித்து... இல்லைன்னா முதியோர் இல்லத்தில் விட பார்க்கிறீர்களா... அவர் எப்படிடா தனிமையில் இருப்பார்... தனக்கு கிடைத்த சொற்ப சம்பளத்தில் தன் தேவையை சுருக்கி, உங்களை எந்த குறையும் இல்லாமல் தானே வளர்த்தார்.
''தனக்கென ஏதாவது ஆடம்பரமா செலவு செய்திருக்கிறாரா... மனசாட்சி இருக்காடா உங்களுக்கு... டேய், அவர் ஒரு குழந்தைடா... குடிக்கிற தண்ணீரிலிருந்து சாப்பிடுகிற மாத்திரை வரைக்கும் நான் தான்டா அவருக்கு எடுத்துக் கொடுக்கணும். இப்ப, அவர் எப்படி போனாலும் உங்களுக்கு பிரச்னை இல்லை, அப்படித்தானே...'' என்று பொரிந்தாள்.
''இல்லம்மா, எங்க சூழ்நிலை...'' என்று ஆரம்பித்த பெரியவனிடம், ''போங்கடா, நீங்களும் உங்கள் சூழ்நிலையும். என் புருஷன நானே பார்த்துக்கிறேன்,'' என்றாள்.
''காமு என்ன பேசற,'' பதற்றத்தில் அலறினார், சதாசிவம்.
''ஆமாங்க, இவங்க யாரும் நம்மள பார்க்க வேண்டாம். ஒரு இல்லத்தில் உங்களை விட்டுட்டு, நானும் இவனுங்க பராமரிப்பில் இருக்க விரும்பல. நான் அன்னைக்கு சித்ரா வீட்டுக்கு ஏன் போனேன் தெரியுமா?
''இவனுங்க இப்படி ஏதாவது முடிவு எடுப்பாங்கன்னு எனக்கு தெரியும். அதனால, சித்ராவுக்கு சொந்தமான காம்பவுண்டில் ஒரு சின்ன வீடு பேசியுள்ளேன். வாடகை வேண்டாம்ன்னு தான் சொன்னா, நான் கொஞ்சமாவது வாடகை தருவதாக சொல்லி பேசி வச்சிருக்கேன்.
''அதே மாதிரி, கோவிலுக்கு முன்னாடி பூ விற்றுக் கொண்டிருந்த கற்பகத்துக்கு உடம்புக்கு முடியல, வியாபாரத்தை நிறுத்தப் போறா. அதனால, நான் அங்க உட்கார்ந்து அவளை போலவே பூ வியாபாரம் பார்க்க முடிவு பண்ணிட்டேன்.
''அவளும், 'நீங்க பண்ணுங்கம்மா...'ன்னு சொல்லிட்டா. குமாரின் நண்பன் அந்தோணி கடையில் பூ கேட்டிருக்கேன். அவனும் முன்பணம் இல்லாமல் கொடுத்து உதவுறேன்னு சொல்லியிருக்கான். நிச்சயமா வியாபாரம் நல்லா இருக்கும். உங்களுக்கு வர்ற வட்டிப் பணம், பூக்கடையில் கிடைக்கும் வருமானம், இது போதும் நம் செலவுக்கு.''
''அப்பாவுக்கு மருந்து செலவெல்லாம் இருக்கும்மா... கோபப்படாம பொறுமையா கேளு...'' என்றான், குமார்.
கோபமும், ஆவேசமும் சற்றும் தணியாத காமாட்சி அம்மாள், ''போங்கடா உங்க வேலையை பார்த்துக்கிட்டு... உங்க யாரையும் நம்பி இல்லடா... நம்ம ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு மாசத்துக்கு மொத்தமா மாத்திரையை இலவசமாக வாங்கி விடுவேன்.
''எப்ப அவரையும், என்னையும், நீங்க பிரிச்சு பார்த்துக்கணும்ன்னு மட்டமா யோசிச்சீங்களோ... இனியும் உங்களோடு ஒரு நிமிஷம் இருக்க நானும் விரும்பல... எங்களை நாங்களே பார்த்துக்கிறோம். நீங்க, உங்க இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாம்,'' என்று ஆணித்தரமாக, மன உறுதியுடன் சொன்னாள், காமாட்சி.
வழக்கம் போல, இப்போதும் ஒன்றும் சொல்லவில்லை, சதாசிவம்.
க. மோகனசுந்தரம்