கமலின், ரூ.100 கோடி படத்தில், சிம்பு!
கடந்த, 1978-ல், கமல் நடிப்பில் வெளியான படம், சிகப்பு ரோஜாக்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில், சிம்பு நடிக்க, பாரதிராஜாவின் மகன், மனோஜ் இயக்க இருந்தார். ஆனால், அது கைவிடப்பட்டது.
தற்போது, சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை, தன், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப் போகிறார், கமலஹாசன். இந்த படத்தில், இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார், சிம்பு.
அந்த வகையில், தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற இளவட்ட நடிகர்களை வைத்தும், தன் பேனரில் படங்கள் தயாரிக்க துவங்கி இருக்கிறார், கமலஹாசன்.
— சினிமா பொன்னையா
மீண்டும் தமிழ் படத்தில், பூஜா ஹெக்டே!
விஜயின், பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த, மும்பை நடிகை, பூஜா ஹெக்டே, அந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் நம்பர்- ஒன் நாயகி ஆகி விடுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படத்தின் தோல்வி காரணமாக, அதன் பின், யாரும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை.
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிக்கும், சங்கமித்ரா படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார், பூஜா ஹெக்டே. சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம், மெகா பட்ஜெட்டில் உருவாகிறது.
பூஜாவை, இப்படத்தில் நடிக்க வைத்தால், தெலுங்கு, ஹிந்தியில் அவரது மார்க்கெட்டை வைத்து பெரிய அளவில் வியாபாரம் செய்து விடலாம் என்ற நோக்கத்தில் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அதோடு, இந்த படத்தில், சங்கமித்ரா என்ற கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார், பூஜா ஹெக்டே.
— எலீசா
'ரூட்'டை மாற்றிய, நயன்தாரா!
முன்பெல்லாம், திருமணத்திற்கு பிறகு, நடிகையரை, சினிமா துறையினர் ஓரங்கட்டி விடுவர். ஆனால், தற்போது அந்த நிலை மாறி வருகிறது.
குறிப்பாக, நயன்தாராவுக்கு திருமணமான பிறகு, முன் வரிசை, 'ஹீரோ'கள், அவரை கண்டு கொள்ளவில்லை. என்றாலும், ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ் போன்ற இரண்டாம் தட்டு, 'ஹீரோ'கள், அவருக்கு வாய்ப்பளித்து வருகின்றனர். அதோடு, தமிழ் சினிமாவில், அவருக்கென பெரிய, 'இமேஜ்' இருப்பதால், தன் கதாபாத்திரத்தை, 'டம்மி' பண்ணாமல் ஓரளவு வலுவான வேடமாக கொடுக்குமாறு இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார், நயன்தாரா.
அதுமட்டுமல்லாமல், 'திருமணம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி, 'கிளாமருக்கு' தடை போடவில்லை. தேவையான, 'கிளாமரை' வெளிப்படுத்தி நடிப்பதற்கு, இப்போதும் தயாராக இருக்கிறேன்...' என்று, உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
மாநாடு வில்லனின் மார்க்கெட் தற்போது எகிறி விட்டதை அடுத்து, படத்துக்கு படம், 'ஹீரோ'கள் ரேஞ்சுக்கு சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில், மார்க்கெட் மந்தமாக இருந்தபோது, குறைவான சம்பளம் பேசி, அவரை ஒரு படத்தில் நடிக்க வைக்க, 'அட்வான்ஸ்' கொடுத்திருந்த தயாரிப்பாளர், இப்போது, முன்பு பேசிய, அதே சம்பளத்தில் நடித்து தருமாறு, மாநாடு வில்லனிடம் கூறியுள்ளார்.
ஆனால், அவரோ, 'நீங்கள், 'அட்வான்ஸ்' கொடுக்கும் போது, என் மார்க்கெட் வீழ்ச்சியில் இருந்தது. இப்போது எகிறி நிற்கிறது. அதனால், மீண்டும், உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்றால், தற்போது நான் வாங்கும் சம்பளத்தை கொடுத்தே ஆக வேண்டும்...' என்று, உறுதியாக கூறி விட்டாராம்.
இதையடுத்து, மாநாடு வில்லனுக்கு, தான் முன்பு போட்ட, 'அக்ரிமென்ட்'டை கையில் வைத்துக் கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்தில், 'செக்' வைக்கப் போவதாக சொல்லி, மிரட்டல் விடுத்துள்ளார், தயாரிப்பாளர்.
இதன் காரணமாக, 'பிரமாண்ட இயக்குனரின் படத்தில் ஒப்பந்தமாகி, பின்னர் வெளியேறிய, புயல் காமெடியனுக்கு, 'செக்' வைத்தது போன்று, நமக்கும், 'செக்' வைத்து விடுவரோ...' என்று, பீதியில் இருக்கிறார், மாநாடு வில்லன்.
சினி துளிகள்!
* வில்லன் மார்க்கெட் சூடு பிடித்தபோதும், அவ்வப்போது ஒரு படத்தில், 'ஹீரோ'வாக நடிப்பதிலும், ஆர்வம் காட்டி வருகிறார், எஸ்.ஜே.சூர்யா.
* சாணிக் காயிதம், பீஸ்ட், நானே வருவேன், பகாசுரன் போன்ற படங்களில் நடித்துள்ள, இயக்குனர் செல்வராகவன், தற்போது, மார்க் ஆன்டனி படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
* ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த, ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர், ஜூனியர் என்.டி.ஆரின், 30-வது படத்தின் மூலம், தெலுங்கில் அறிமுகமாகிறார்.
அவ்ளோதான்!