கங்கைக் கரையில் நின்று கொண்டிருந்த யாக்ஞவல்கிய முனிவரின் கால்களில், ஆகாயத்திலிருந்து ஒரு பெண் எலி வந்து விழுந்தது. முனிவர் நிமிர்ந்து பார்க்க, மேலே ஒரு கழுகு பறந்து கொண்டிருந்தது.
'எலியைக் கால்களால் பிடித்து போயிருக்கிறது, கழுகு. எப்படியோ தவறி இங்கே விழுந்து விட்டது. நல்லவேளை...' என, நினைத்தபடியே, குனிந்து எலியைப் பார்த்தார். அதன் மேல் அங்கங்கே சில ரத்தத்துளிகள் தெரிந்தன.
இரக்கப்பட்ட முனிவர், தவ சக்தியால் அந்தப் பெண் எலியை, ஒரு பெண் குழந்தையாக மாற்றி, தன் மனைவியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார்.
நல்லமுறையில் வளர்க்கப்பட்ட அவளுக்கு, திருமணப் பருவம் வந்தது.
'நாம் வளர்த்து வரும் இப்பெண்ணை யாராவது தேவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்...' என்று தீர்மானித்த முனிவர், தன் சக்தியால் சூரிய பகவானை வரவழைத்து மகளுக்குக் காட்டி, 'இவரை மணக்க உனக்குச் சம்மதமா?' என, கேட்டார்.
'ஊஹும்... இவர் வெப்பத்தை என்னால் தாங்க முடியாது. இவரை விடப் பெரியவராகப் பாருங்கள்...' என்றாள், மகள்.
சரி... சூரியனை மறைக்கும் கருமேகத்தை அழைத்துக் காட்டி, 'இவனை மணக்கிறாயா?' என்றார்.
'ஐய... கருப்பா இருக்கார். வேண்டாம் இவர்...' என்று அதையும் மறுத்தாள், மகள்.
அப்படியென்றால், இந்தக் கருமேகத்தையே கலைக்கும் வாயு பகவானை அழைத்துக் காட்டிக் கேட்க, 'இவரும் சரிப்பட்டு வர மாட்டார். சுற்றிக் கொண்டே இருக்கும் இவரை மணக்க எனக்கு விருப்பமில்லை...' என்றாள்.
அடுத்ததாக, வாயு பகவானாலும் அசைக்க முடியாத மலையை அழைத்துக் காட்டி, 'இவரை மணக்க சம்மதமா?' என்றார்.
'ஜடம் மாதிரி, இருந்த இடத்தை விட்டு அசையாத தன்மை படைத்த இந்த மலையும் தேவையில்லை...' என்று, அதையும் மறுத்தாள், மகள்.
மலையின் அதிஷ்டானத் தேவதையிடம், 'உன்னைவிடப் பெரியவர் யாராவது இருக்கின்றனரா?' எனக் கேட்டார், முனிவர்.
'என்னை விடப் பெரியது, ஓர் ஆண் எலி. அது, குடையும் குடைச்சல் எனக்கு தான் தெரியும்...' என்றது, தேவதை.
மலையைக் குடையும் அந்த எலியை அழைத்துக் காட்டி, 'இந்த எலியை மணந்து கொள்கிறாயா?' எனக் கேட்டார், முனிவர்.
'அப்பா... எனக்கு இவரைத் தான் மிகவும் பிடித்திருக்கிறது. ஆகையால், என்னை எலியாக்கி, இவருக்கே மணம் செய்து வையுங்கள்...' என்றாள்.
சிரித்தபடி அவ்வாறே செய்தார், முனிவர்.
அவரால் வளர்க்கப்பட்டவள் மறுபடியும் எலியாக மாறி, வேறோர் எலியை மணந்து கொண்டாள்.
தெய்வமே வந்து நின்றாலும், ஏதாவது குற்றம் சொல்லி தவிர்த்து, தன் பிறவி குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு, சொல்லப்படும் கதை இது.
பி. என். பரசுராமன்