முட்டாள் தினத்தை இதுவரை
சொந்தம் கொண்டாடி யாரும்
சுய விருப்பம் காட்டியதில்லை...
ஆனாலும், உலகில்
செழித்த வரலாறு படைத்து
ஜெயக்கொடி நாட்டி வருகிறது!
பூரண புத்திசாலி எனும்
பெரும் பெருமை
மானுடப் படைப்பில் இல்லை
அதிபுத்திசாலிக்கும் இங்கே
அங்குல அளவேனும்
அடிமுட்டாள் தனம் உண்டு உண்டு!
முட்டாளென்று உணரும்போதே
மனிதன்
புத்திசாலி ஆகிறான்...
பிறரை முட்டாளாக்க
முயலும்போது
அடி முட்டாளாகிறான்!
ஆண்டில் ஒருநாள் முட்டாள் ஆவது
ஆனந்த பரவசம்...
ஆண்டு முழுவதும் அவதாரம் எடுப்பது
ஆறறிவின் அதல பாதாளம்!
அனைத்தும் ஒன்றென்ற
அத்வைதப் பார்வையில்
அறிவாளிக்கும், அடி முட்டாளுக்கும்
அர்த்தமே இல்லை என்பது
ஆன்மிக ஞானத்தின் ஆச்சரியம்!
அன்றாட வாழ்வில்
அறிவுக்கும், அன்புக்கும்
அந்நிய துாரம்...
அறிவியல் விதியில்
முட்டாள் தனத்துக்கும்
முழுமையான அன்புக்கும்
இடைவெளியே இல்லா நெருக்கம்!
ஏமாற்றுவதும்
ஏமாற்றப்படுவதும்
இன்ப சுரபியாய் இயங்குவது
உலகின்
எட்டாவது அதிசயம் அல்லவா?
ஆகவே நண்பர்களே...
ஏப்ரல் முதல் நாளன்று
ஏமாந்தால் அது
அவமானம் இல்லை
ஆகாய உயரத்து
அக்மார்க் அன்பின் முத்திரை!
நெல்லை குரலோன், பொட்டல்புதுார்,
தென்காசி