அன்பு சகோதரிக்கு —
வயது: 50, இல்லத்தரசி; பட்டப் படிப்பு படித்துள்ளேன். கணவர் வயது: 56; மத்திய அரசு பணியில் உள்ளார். எனக்கு திருமணமாகும் போது வயது: 24.
எங்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தது. இனி, குழந்தை பிறக்காது என்று, ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தோம். அந்த குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது, எனக்கு பெண் குழந்தை பிறக்க, மிகவும் சந்தோஷமடைந்தோம்.
இரு குழந்தைகளையும், இரு கண்கள் போல், பாராட்டி, சீராட்டி வளர்க்கிறோம். பெரியவள் படிப்பில் சுமார். ஆனால், இசை, பரதம் என்று, பல கலைகளில் ஆர்வம் உள்ளவள். அவளது ஆர்வத்தை அறிந்து, அவள் விரும்பிய கலைகளை கற்க பயிற்சி வகுப்புக்கு அனுப்புகிறோம்.
இளைய மகள், படிப்பில் படு சுட்டி. ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவள். பள்ளியில் பல பரிசுகள் பெற்று வருகிறாள்.
இருவரும், பாசமாகத்தான் இருந்தனர். உறவினரோ அல்லது தெரு வாசிகளில் யாரோ, பெரியவள், ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து வந்தவள் என்று, இளையவளிடம் போட்டுக் கொடுத்துள்ளனர்.
உரிய வயது வரும்போது, நாங்களே அவளிடம் உண்மையை கூற நினைத்திருந்தோம். இந்நிலையில், விஷயம் அறிந்த இளைய மகள், மூத்தவளிடம் பேசுவதைத் தவிர்க்கிறாள். இருவருக்குள் ஏதாவது சண்டை வந்தால், 'நீ, அனாதைதானே...' என்று கத்தி, அவளை வீட்டை விட்டு அனுப்பிவிடுமாறு, எங்களிடம் சண்டை போடுகிறாள்.
எவ்வளவு சமாதானம் செய்தாலும், அக்காவுடன் முன்பு போல் பேச மறுக்கிறாள். இரண்டு நாட்களுக்கு அமைதியாக இருப்பாள்; மூன்றாம் நாள், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுவதைப் போல் மாறி விடுகிறாள்.
மூத்தவளுக்கு, புது டிரஸ் எடுக்கக் கூடாது, புதிதாக புத்தக பை, கிளிப், நகை எதுவும் வாங்கக் கூடாது என்று, அடம் பிடிக்கிறாள். 'அதை எடுத்து வா, இதை எடுத்து வை...' என்று, மூத்தவளை அதிகாரம் செய்து, வேலைக்காரி போல் நடத்த ஆரம்பித்துள்ளாள்.
தன் தங்கைக்காகவும், எங்களுக்காகவும் எல்லாவற்றையும் சகித்து வளைய வரும், மூத்த மகளை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
இப்பிரச்னையை எப்படி கையாள்வது என்று புரியாமல் தவிக்கிறோம், சகோதரி. நல்ல ஆலோசனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
தத்தெடுக்கும் பெற்றோருக்கு, சுயமாய் குழந்தை பிறந்து விட்டால், தத்தெடுத்த குழந்தையை காலில் இட்டு நசுக்குவதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் நீ, தத்து குழந்தைக்கும், உயிரியல் குழந்தைக்கும் சமமான முக்கியத்துவம் தருவது பாராட்டப்பட வேண்டியது.
நீ, உன் உயிரியல் மகளை தனியே அழைத்து பேசு.
'மகளே! தத்து என்பது விருப்பத்துக்கு சட்டையை மாற்றிக் கொள்ளும் விஷயம் இல்லை. ஹிந்துக்களின் தத்து பிள்ளைகளுக்கு சொத்துரிமை உண்டு. கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர், தம் தத்துக் குழந்தைகளுக்கு ஒரு காப்பாளராக மட்டுமே இருக்க முடியும்.
'ஒரு இஸ்லாமியர், ஹிந்து குழந்தையை அல்லது ஒரு ஹிந்து, இஸ்லாமியர் குழந்தையை தத்தெடுப்பது செல்லாது. ஒரு குழந்தையை பெற்றோர் தத்தெடுக்கும் போது, தத்தெடுக்கும் பெற்றோரின் மருத்துவ உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை, வாழ்க்கைச் சூழல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து, அறிக்கை அளிக்கும், ஒரு குழு. அந்த அறிக்கையை நீதிமன்றம் ஆய்வு செய்து, தத்துக்கான அனுமதியை வழங்கும்.
'தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கை முறை, 18 வயது வரை கண்காணிக்கப்படும். இடையில் பிரச்னை ஏற்பட்டால், குழந்தையை திரும்ப பெற்றுக் கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உண்டு.
'ஒரு குழந்தையை தத்தெடுக்க, 25 பெற்றோர் காத்திருக்கின்றனர். நுாற்றுக்கு, 98 சதவீத பேர், பெண் குழந்தைகளை தத்தெடுக்கவே விரும்புகின்றனர்.
'நீ வருவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே மூத்தவள், எங்கள் வாழ்வில் வந்து விட்டாள். டன் கணக்கில் பாசத்தை எங்கள் மீது பொழிந்து, எங்களிடமிருந்து டன் கணக்கில் பாசத்தை பெற்றாள்.
'ஒரு தாயாகவும், தந்தையாகவும் அவளால் தான் மகிழ்ச்சி அடைந்தோம். அவளது பாசமே என் கர்ப்பபை கதவுகளை உனக்காக திறந்து விட்டது.
'நம்பிக்கைதானம்மா வாழ்க்கை. பெற்றால் மட்டும் பிள்ளையல்ல, வளர்த்தாலும் பிள்ளை தான். நீ பிறந்தவுடன், உன் அன்பில் நனைந்து, எங்கள் அன்பில் உன்னை நனைத்தோம். உறவினர்கள், நண்பர்கள் பேசுவதை நம்பி, குடும்பத்தின் அமைதியை சீர் குலைத்து விடாதே. ஆறு பெண்கள் உள்ள வீட்டில், கடைக்குட்டியாக பிறந்திருந்தால் என்ன செய்வாய்?
'மூத்தவள் வலது கண் என்றால், நீ, எங்களின் இடது கண். அவளை, நீ தொடர்ந்து இழித்து பழித்து புறக்கணித்து வந்தால், எங்கள் சொத்து முழுவதையும், மூத்தவள் மீது எழுதி விடுவோம்.
'இவ்வுலகில் நாம் அனைவருமே வழிபோக்கர்கள் தான். துருக்கி பூகம்பத்தை பார். 33 வீட்டுக்கு சொந்தக்காரன் ஒரே நொடியில் நடுத்தெருவுக்கு வந்து விட்டான்.
'உன் அக்கா அனாதை அல்ல; கடவுளின் செல்லக் குழந்தை. அவளுடன் கைகோர்த்து அக்காள் -- தங்கை உறவுக்கு மகிமை சேர்...' என, கூறு.
நிச்சயமாய் மனம் மாறி விடுவாள், உன் இளைய மகள். தேவைப்பட்டால், அவளை மனநல ஆலோசகரிடம் அழைத்து போய், தகுந்த ஆலோசனை வழங்கு.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.