பேரா.ம.செ.ரபிசிங் எழுதிய, 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தமிழ்த் தொண்டு' நுாலிலிருந்து:
சென்னையில் நடந்த கம்பன் விழாவில், நீதியரசர் மு.மு.இஸ்மாயில், தலைவர். இதற்கு, எம்.ஜி.ஆரும் அழைக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், பல கம்ப ராமாயண அறிஞர்கள் முன்னிலையில், மிகவும் சிறப்பாக பேசினார், எம்.ஜி.ஆர்.,
திகைத்த நீதியரசர், 'கம்ப ராமாயணத்தில் ஆளுமையும், கவிதைகளை நினைவில் வைத்துப் பேசும் திறனும் எப்படி பெற்றீர்கள்...' என, கேட்டார்.
'நான் சிறுவனாக இருக்கும் போது, 'சம்பூர்ண ராமாயணம்' என்ற நாடகத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது, கம்ப ராமாயணத்தை படித்துத் தெளிந்த காரணத்தால், இப்போது என்னால் தெளிவாக பேச முடிந்தது...' என்றார், எம்.ஜி.ஆர்.,
உடனே, தமிழறிஞர்கள் கை தட்டினர்.
மற்றொரு கம்பன் விழாவில், நீதியரசர் தலைமை தாங்க, எம்.ஜி.ஆர்., பங்கு கொண்டார்.
கம்பன் விழாவில் நடைபெற்ற பல்வேறு இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அரங்கில் இருந்தனர். அவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அந்த விழா மேடையில் பேசிய ஒருவர், 'நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி மற்றும் உவகை எனும், எட்டு மெய்ப்பாடுகளோடு, சம நிலை என்பதையும் சேர்த்து, மெய்ப்பாடுகள் மொத்தம் ஒன்பது...' என்று பேசினார்.
அடுத்து பேசிய எம்.ஜி.ஆர்., அந்த மாணவர் பேசிய பதிவை சுட்டிக்காட்டி, 'மெய்ப்பாடு மொத்தம் எட்டு தான். தமிழ் மரபுக்கு தொடர்பில்லாத சமநிலை என்பது, வட மாநிலத்தினருடையது...' என்றார்.
கூட்டம் முடிந்ததும், 'இது உங்களுக்கு எப்படித் தெரியும்...' என்று கேட்டார், நீதியரசர்.
'தொல்காப்பியம் படித்திருக்கிறேன்...' என, எம்.ஜி.ஆர்., பதிலளிக்க, அருகில் இருந்தவர்கள் திகைத்தனர்.
கண்ணதாசனை அரசவை கவிஞராக, எம்.ஜி.ஆர்., நியமித்தபோது, கண்ணதாசன் கூறியது, மறக்க முடியாத வார்த்தை...
'ஜனங்களின் மனோபாவத்தைக் கணிப்பதில், எப்போதுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார். நான் மதுரை வீரனையோ, மன்னாதி மன்னனையோ, ராஜா தேசிங்கையோ, நாடோடி மன்னனையோ சந்திக்கவில்லை. மக்களின் விசுவாசத்துக்கு பாத்திரமான, மகா மனிதனை சந்தித்தேன்...' என, 'சந்தித்தேன் சிந்தித்தேன்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார், கண்ணதாசன்.
காலம் சென்ற, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மகராஜன் எழுதிய,'ஆடத் தெரியாத கடவுள்' நுாலிலிருந்து:
பல ஆண்டுகளுக்கு முன், வழக்கறிஞர் நார்ட்டன் என்பவர், நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டிருந்த போது, வெள்ளைக்கார நீதிபதி குறட்டை விட்டு துாங்கிக் கொண்டிருந்தார்.
வழக்கறிஞரோ மிகவும் புத்திசாலி. நீதிபதியை உறக்கத்திலிருந்து எழுப்பவும் வேண்டும். அதேசமயம், நீதிபதியை அவமதித்த குற்றத்துக்கு ஆளாகவும் கூடாது. இந்த இக்கட்டான நிலையில், நார்ட்டனுக்கு ஒரு யுக்தி தோன்றியது.
நீதிமன்றத்தில், பங்கா இழுத்துக் கொண்டிருந்த ஒரு முதியவர், துாக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவரைப் பார்த்து, 'இப்படி கோர்ட்டில் துாங்குவதற்கு, ஐகோர்ட் ஜட்ஜா நீ...' என, சத்தமாக கேட்டார்.
இந்த சத்தத்தில் பதறி எழுந்த நீதிபதி, நார்ட்டனை பார்த்து, 'ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள்...' என்று கேட்டார்.
'இல்லை பிரபு. இந்த பங்காகாரன் அசந்து துாங்கி விட்டான். அவனை திட்டினேன். வேறொன்றுமில்லை...' எனக் கூற, அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
அந்த சிரிப்பில், நீதிபதியும் சேர்ந்து கொண்டார்.
- நடுத்தெரு நாராயணன்