கீழேயுள்ள குறிப்புகளைக் கொண்டு, தமிழுக்கும் தேசத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, மெக்காலே கல்விக்கொள்கையைக் கடுமையாக எதிர்த்த இந்தத் தேசப்பற்றாளர் யார் என்று கண்டுபிடிக்கவும்.
'என் தந்தை என்னை ஆங்கிலப் பள்ளியில், கல்வி பயில அனுப்பினார். ஒரு சிங்கக் குட்டியிடம் புல்லை சாப்பிடச் சொல்வது போல், என் தந்தை, என் விருப்பத்துக்கு மாறாக ஆங்கிலத்தைக் கற்க வைத்தார். ஆங்கிலம் பயில்பவர்கள், ஆங்கிலேயரிடம் அடிமை சேவகம் செய்ய விரும்புபவர்கள். அடிமை நாய் போல் திரிந்து, ஒற்று (ஒற்றர்) வேலை செய்பவர்கள். எப்படியேனும் வயிற்றுக்குச் சோறு கிடைத்தால் போதும் என்று நினைக்கும் பேடிகள்.
மனதில் சூதுவாது தெரியாமல் எனக்கு ஏதோ நல்லது செய்வதாக எண்ணிக்கொண்டு, கொடும் விலங்குகள் வாழும் பாழும் குகைக்குள், என் தந்தை என்னைத் தள்ளிவிட்டார். அதனால் என் சுதந்திரத்தை இழந்து, பயம் மிகுந்து, அறிவு தெளிவற்று உடல் துரும்பாய் மாறி அலைந்தேன். நல்ல பலன் என்பது எள்ளளவும் எனக்குக் கிடைக்கவில்லை. இதை நான் நாற்பதாயிரம் கோயில்களுக்கு வந்து சத்தியம் செய்து சொல்லத் தயாராக இருக்கிறேன்.
இந்த ஆங்கிலக் கல்வி கற்கும் மாணவர்கள், நம் நாட்டு காளிதாசன் பராசக்தியின் வரம்பெற்று காப்பியம் எழுதியதையோ, வானசாஸ்திரத்தில் சிறந்த பாஸ்கராச்சார்யா பற்றியோ, பாணினி வடமொழிக்கு இலக்கணம் கண்டதையோ அறியமாட்டார்கள். சிலப்பதிகாரம், திருக்குறள் பற்றியோ, சேர, சோழ, பாண்டியர்கள் அறநெறி பிறழாமல் நாட்டை ஆட்சி செய்தது பற்றியோ ஆங்கிலக் கல்வி பயிலும் மாணவர்கள் அறிய மாட்டார்கள். நாடு அடிமைப்பட்டுக் கிடக்கும் சிறுமையையும் அறிய மாட்டார்கள்.
தமிழ் நாட்டில் தமிழ்மொழியை பிரதானமாக நாட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது 'தேசியம்' என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை.'
விடை: சுப்பிரமணிய பாரதியார்