தமிழில் ஒரே முறையிலான ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகளாக ந, ண, ன ஆகியவை இருக்கின்றன. இம்மூன்று எழுத்துகளையும் சிறு வேறுபாடுகள் தோன்றுமாறு ஒலிக்க வேண்டும். வாய்க்காற்றும் மூக்கொலியும் சேர்ந்து, மென்மையாக ஒலிக்கையில், இவ்வெழுத்துகள் நல்ல ஒலிப்பில் வெளிப்படும்.
'ந' என்பதை, மூக்கில் பாதிக் காற்றும் வாயில் பாதிக் காற்றும் வெளிப்பட ஒலித்தால் போதும். 'ண' என்பதை இன்னும் சிறிது மென்மை கூட்டி ஒலிக்கலாம். 'ன' என்பதை, எந்த அழுத்தந்திருத்தமும் செய்யாமல் இயல்பாகச் சொல்லலாம்.
இவ்வெழுத்துகள் எந்தெந்தச் சொற்களில் எவ்வாறு பயிலும் என்பதற்கும் எளிய குறிப்புகள் உண்டு. அவற்றை மனத்தில் இறுத்தினால் இவ்வெழுத்து களிடையே தோன்றும் பிழைகளைத் தவிர்க்கலாம்.
'ந' வரிசை எழுத்துகள் எப்போதும் சொல்லுக்கு முதலெழுத்தாகத்தான் தோன்றும். 'ண', 'ன' ஆகிய இரண்டு எழுத்துகளும் சொல்லுக்கு முதலெழுத்தாவ தில்லை. 'ந' வரிசை எழுத்துகள் சொல் நடுவில் தோன்ற வேண்டுமானாலும் அங்கே ஏதேனும் சொற்சேர்க்கை நிகழ்ந்திருக்கும். எந்நாடு, அந்நகரம், முந்நூறு, செய்ந்நன்றி, மெய்ந்நிகர் என்னும்போது, சொல்லுக்கு நடுவில் வரலாம். இவற்றில் நாடு, நகரம், நூறு, நன்றி, நிகர் என்னும் 'ந' எழுத்தில் தொடங்கும் சொற்களின் சேர்க்கையும் நிகழும். 'ந' வரிசை எழுத்துகள் சொல்லுக்குக் கடைசி எழுத்தாவது அரிது. வெரிந் (முதுகு) போன்ற சில சொற்களே உள்ளன.
'ண' வரிசை எழுத்துகள் சொல்லுக்கு நடுவிலும் கடைசியிலும் தோன்றும். இவை தோன்றும் சொற்களில் இரண்டெழுத்துச் சொற்களே மிகுதி. மூன்றெழுத்துச் சொற்கள் அரண், முரண், பரண் என வரும். இரண்டெழுத்துச் சொற்களில் 'ண்' என்ற மெய் தோன்றும்போது, உகர ஈறு பெறுவதும் உண்டு. கண் => கண்ணு. மண் => மண்ணு.
'ன' வரிசை எழுத்துகளும் சொல்லுக்கு நடுவிலும் கடைசியிலும் வரும். இயல்பாக ஒலித்தால் போதும். இவ்வெழுத்து வரிசைதான் இம்மூன்றில் மிகுபயன்பாடு கொண்டவை. என, என், உன், தன், தின் என்பன போன்ற இரண்டெழுத்துச் சொற்கள் உள்ளன. இரண்டெழுத்து களுக்கும் மேற்பட்ட சொற்களில் இவை நன்கு தோன்றுகின்றன. பாருங்கள், 'தோன்றுகின்றன' என்ற சொல்லிலேயே மூன்று இடங்களில் பயின்று வருகிறது. ஒரு சொல்லின் கடைசி எழுத்தாகவும் 'ன்' என்ற மெய் மிகுந்து வரும்.
இம்மூன்று எழுத்துகளைப் பற்றிய வேறுபடுத்தல்களில் நாம் அறிந்திருக்க வேண்டியவை இவையே.
- மகுடேசுவரன்