செங்கல்பட்டு மாவட்டம், ஆத்துார், ராமகிருஷ்ணா மாணவர் குருகுல பள்ளியில், 1950ல், 10 வகுப்பு படித்தபோது தங்கும் இடம், உணவு, கல்வி எல்லாம் இலவசம். சமையல் தவிர, வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும். கடும் கட்டுப்பாடுகள் உண்டு.
உறவினர் இல்லாதோர் மட்டுமே விடுமுறை நாட்களில், விடுதியில் தங்க அனுமதி உண்டு. என் தந்தை அங்கு பணியாற்றியதால் எனக்கு மட்டும் விதிவிலக்கு. அந்த ஆண்டு இறுதி விடுமுறையில், 10 பேர் விடுதியில் தங்கியிருந்தோம்.
அன்று கவலையுடன் காணப்பட்டார் சமையல்காரர். காரணம் கேட்ட போது, 'அம்மாவுக்கு உடம்பு சரியில்லை... ஊருக்கு போனால், இங்கு சமையலை யார் கவனிப்பார்...' என்றார். உடனே, 'இது என்ன பிரமாதம்... நான் செய்கிறேன்...' என சவடால் விட்டேன். அதை நம்பி, உடனே புறப்பட்டு விட்டார்.
மறுநாள், என்னை அழைத்து சமைக்க சொன்னார் தலைமை ஆசிரியர் ரங்க ஐயங்கார். சமையல் அறைக்குள் நுழைந்ததும் தலை சுற்றியது. தின்ன மட்டுமே தெரிந்த நான், எள், கடுகு வித்தியாசம் தெரியாமல் தவித்தேன். பின் துணிச்சலை வரவழைத்து செயல்பட்டேன்.
தரையில், அகழிபோல் பள்ளமாக இருந்தது அடுப்பு. அதில், விறகை போட்டு பற்ற வைத்தேன்.
அண்டாவில் தண்ணீர் நிரப்பி, இரண்டு படி அரிசி போட்டேன். இரண்டு மணி நேரம் கொதித்த பின்னும் சாதம் வரவில்லை; கஞ்சி போல் அலம்பிக்கொண்டு இருந்தது.
புரியாமல் தவித்தபோது, 'சமையல் அறையில் உனக்கு என்ன வேலை; யாருக்காக இவ்வளவு கஞ்சி...' என்ற குரல் கேட்டது. எதிரே அப்பா நின்றிருந்தார். அழுதவாறே நடந்ததை கூறினேன்.
ஆறுதல் படுத்தி, அந்த கஞ்சியில் மோர் விட்டு, கடுகு, இஞ்சி, கருவேப்பிலை தாளித்து, 'மராட்டிய பகாளா பாத்' என பெயர் சூட்டி பரிமாறினார். அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. சமையல்காரர் திரும்பியதும், என் சமையல் பற்றி புகழ்ந்தார் தலைமை ஆசிரியர். பின், பிடிவாதமாக முயன்று சமையல் கற்று, சுவைமிக்க உணவு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றேன்.
தற்போது, என் வயது, 87; எப்போதும் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என, அந்த சம்பவத்தில் இருந்து கற்றுக்கொண்டேன்.
- கே.எஸ்.ராஜன், சென்னை.