குரு ஒருவரின் மகள் பேரழகியாக இருந்தாள்; அவளை திருமணம் செய்ய, பலர் போட்டியிட்டனர். அவர்களிடம், 'என் மகளை திருமணம் செய்து தருகிறேன்; ஆனால், நான் கேட்க போகும் இரண்டு கேள்விக்கு, தக்க பதில் உரைக்க வேண்டும்...' என்றார் குரு.
கேள்வியை எதிர்பார்த்திருந்தனர் போட்டியாளர்கள்.
உலகிலே இனிமையான ஒரு பொருளை எடுத்து வரக் கூறினார் குரு.
மறு நாள் -
ஆளுக்கொரு பொருளை எடுத்து வந்து காத்திருந்தனர். அதில், ஒருவன் தேன் எடுத்து வந்திருந்தான்; இனிமை வாய்ந்த பொருளோடு முதன்மை சீடனும் அங்கு நின்றிருந்தான்.
வரிசையில் நின்ற சீடனைப் பார்த்து, 'நீயுமா... போட்டியில் கலந்துள்ளாய்...' என்று ஆச்சரியமாக கேட்டார் குரு.
'ஆமாம் குருவே... உங்கள் மகளை விரும்புகிறேன்...'
'இனிமை வாய்ந்த பொருளாக நீ எடுத்து வந்திருப்பதை காட்டு...' என்றார் குரு.
கையில் வைத்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்; அதற்குள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் குரு.
'இதை எதற்கு எடுத்து வந்தாய்...'
'மனிதர்களின் நாவை விடவும், உலகில் இனிய பொருள் உண்டா... அதனால் தான், குறியீடாக ஆட்டின் நாக்கை எடுத்து வந்தேன். நாவின் மூலம் வெளிப்படும், இனிய சொல்லை, வருத்தத்தில் இருப்பவன் கேட்டதும் மகிழ்கிறான்... நோயாளியாக இருப்பவனுக்கு கனிந்த சொற்கள் மன உறுதியை தரும்...'
'என் முதல் கேள்வியில், வெற்றியடைந்தாய் வாழ்த்துகள்...'
'குருவே... அடுத்த கேள்வி என்ன என்பதை உரைப்பீராக...'
'உலகிலேயே கசப்பான ஒரு பொருளை எடுத்து வா...'
கசப்பு பொருள் என்றதும், வேப்பங்காய், எட்டிக் காய் என கொத்து கொத்தாக எடுத்து வந்து காத்திருந்தனர் போட்டியாளர்கள்.
குடிலுக்குள் குரு நுழைந்ததும், கூட்டத்தில் நின்ற சீடன் வணங்கி, கையில் இருந்த பெட்டியை திறந்து காட்டினான்.
கோபம் அடைந்த குரு, 'என்னை முட்டாள் என கருதி விட்டாயோ... கசப்பான பொருளை எடுத்து வா என்றால், திரும்பவும் நாவை காட்டுகிறாயே...' என முகம் சுளித்தார்.
'போட்டியாளர் கையில் இருக்கும் வேப்பங்காய், கசப்புமிக்கது. ஆனால் எவர் மனதையும் அது கசக்க வைக்கவில்லை; என் பெட்டிக்குள் இருப்பதை பார்த்து வெறுப்பாகி சொல்லால் இடித்துரைத்தீர். இப்போது கூறுங்கள், நாவு தானே கசப்பான பொருள்....'
சீடனின் அறிவை கண்டு வியந்த குரு, மகளை அவனுக்கே மணம் முடித்து கொடுத்தார்.
குழந்தைகளே... நாவில் இருந்து உதிரும் சொல், வெல்லவும் செய்யும். அதேசமயம் கொல்லவும் துாண்டும் என்பதை அறியுங்கள்!
வி.சி.கிருஷ்ணரத்னம்