கையெழுத்து!
கள்ள ரூபாய் நோட்டுகள் அதிகம் நடமாடிய காலம். இதைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு எச்சரிக்கை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன்படி, 100 ரூபாய் நோட்டு கொடுத்து பொருள் வாங்குபவர், அதில் அவரது கையெழுத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.
ஒருநாள், தன் காருக்கு பெட்ரோல் நிரப்பினார் ஒரு முதியவர். அதற்கு கட்டணமாக, 100 ரூபாய் நோட்டை கொடுத்தார். பணிவான குரலில், அரசின் உத்தரவை விளக்கி கையெழுத்து போட்டு தரும்படி கேட்டார், பெட்ரோல் பங்க் ஊழியர்.
புன்முறுவலுடன் நிறைவேற்றினார் முதியவர். அதை வாங்கியதும் அதிர்ந்து, 'ஐயா... ரூபாய் கொடுப்பவர் கையெழுத்தைத் தான் இட வேண்டும். நீங்கள் நோட்டில் உள்ள கையெழுத்தையே காப்பியடித்துள்ளீர்...' என சுட்டிக்காட்டினார் ஊழியர்.
நிதானமாக, 'தம்பி, இந்த ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்ட போது, நான் தான் அதன் கவர்னராக இருந்தேன். அந்த கையெழுத்தும், இதுவும் ஒன்றுதான். இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன்...' என்றார். ஆச்சர்யத்துடன் அவரை வணங்கினார் அந்த ஊழியர்.
அந்த கையெழுத்துக்குரியவர் ஹெச்.வி.ஆர்.ஐயங்கார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறாவது கவர்னராக, மார்ச், 1957 முதல் பிப்ரவரி, 1962 வரை பதவி வகித்தார்.
இவரது பதவி காலத்தில் தான் இந்திய நாணய முறையில், அணா, பைசா என்ற நடைமுறை ஒழிக்கப்பட்டது. இப்போதுள்ள, காசு என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இவரது சேவையை பாராட்டி இந்திய அரசு, பத்ம விபூசன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ஓய்வு பெற்ற பின் பொருளியல் மற்றும் வங்கிப் பொருளியல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வந்தார். அவை நுாலாக பதிப்பிக்கப்பட்டுள்ளன.
எலி வேலைவாய்ப்பு!
அமெரிக்கா, நியூயார்க் நகரில் எலி தொல்லை அதிகரித்துள்ளது. அங்கு, 2 கோடி எலிகள் வசிப்பதாக கூறப்படுகிறது. வீடு, ரெஸ்டாரண்ட், சூப்பர் மார்க்கெட், நட்சத்திர ஓட்டல் என எங்கும் தொல்லை தாங்க முடியவில்லை. அதை ஒழித்து கட்ட நியூயார்க் நகர நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்தது; எதுவும் பலன் தரவில்லை. புகார்கள் குவிந்து வருகின்றன.
இதனால், புதிய திட்டம் ஒன்றை நியூயார்க் மேயர் உருவாக்கியுள்ளார். அதன்படி, 'எலிகளை கொன்று அப்புறப்படுத்த ஆட்கள் தேவை' என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சேர தகுதி குறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
எலி பிடிக்கும் வேலையில் சேர...
* பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
* எலிகளை துரத்தி பிடிக்க நல்ல உடல் திறனும், பணியை நேர்த்தியாக முடிக்கும் ஆற்றலும் உள்ளவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு, ஆண்டு சம்பளமாக, 1.3 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எலி பிடிக்க இவ்வளவு சம்பளமா என வியக்க வேண்டாம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.