கோள், நட்சத்திரம் என, வான் இயக்கத்தை ஆராய்கிறது விண்வெளி ஆய்வு மையம். உலகம் முழுதும் பல நாடுகளிலும் இவை உள்ளன. தமிழகத்தில், வேலுார் மாவட்டம், ஜவ்வாது மலை, காவலுாரில் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி இங்குதான் உள்ளது. இது, 2.34 மீட்டர் விட்டம் உடையது. ஆசியாவிலே மிகப் பெரியது. விண்வெளி ஆய்வில் இந்தியாவில் முன்னோடி விஞ்ஞானி வைணு பாப்பு பெயரே, இந்த மையத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியருக்கு விண்வெளி ஆய்வு மீதான ஆர்வத்தை துாண்ட புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. அந்தவகையில், இதுபோல் சிறிய மையங்களை பள்ளிகளில் உருவாக்கி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், மேல உளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறிய வானியல் ஆய்வகம் அமைப்பட்டுள்ளது. இதில், உயர் தொழில்நுட்ப தொலைநோக்கி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கோள்களின் இயக்கத்தை துல்லியமாக கண்டறிய முடியும். விண்வெளி ஆய்வுக்கு உதவும், 28க்கும் மேற்பட்ட கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன.
சூரிய மண்டலத்தின் அமைப்பு, கோள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த விபரங்களும் வைக்கப்பட்டுள்ளன. விண்வெளி ஆய்வில் சாதித்த விஞ்ஞானிகள் வரலாறு மற்றும் விண்வெளி சார்ந்த புத்தகங்களும் இடம்பெற்று உள்ளன. இவற்றை படிப்பதுடன் தொலைநோக்கியில் விண்வெளி நிகழ்வுகளை நேரடியாக பார்க்கும் வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.
வான் இயற்பியல் பற்றி மிக எளிமையாக புரிந்து கொள்ள இந்த சிறு மையம் உதவுகிறது.
- என்.சுந்தரராஜன்