அன்று ஞாயிற்றுக்கிழமை -
சீனுவின் பெற்றோர் சிவப்பு நிற, 'ரெயின் கோட்' ஒன்றை, புதியதாய் வாங்கி வந்தனர்.
''அம்மா... இப்போதே அதை அணிந்துக் கொள்ளலாமா...''
ஆர்வத்துடன் கேட்டான் சீனு.
''மழை வரும் போது போட்டுக் கொள்ளலாம்...'' என்றாள் அம்மா.
மறுநாள் -
இளம்வெயில் பார்த்து, ''இன்று மழை வருமா...'' என்றான் சீனு.
''இன்று மழை வராது; இப்போது நீ, 'ரெயின் கோட்' அணிந்தால் நகைப்புக்குரியாதாகி விடும்...'' என அறிவூட்டினாள் அம்மா.
மறுநாள் காலை -
வானம் நீல நிறமாக இருந்தது. அதைக் கண்டு ஏக்கத்துடன், ''என் ஆசை எப்போது நிறைவேறும்...'' என்றான் சீனு.
''இன்றும் நிறைவேறாது செல்லமே... ஏனென்றால், வெண்மேகம்தான் வானில் தெரிகிறது...'' என்றாள் அம்மா.
அன்று, வெயில் சுட்டெரித்தது; வெப்பமாய் தகித்தது சூரியன். வியர்வை மழையில் குளித்தனர் மக்கள்.
மறுநாள், ''ஏனம்மா மழை பெய்ய மாட்டேங்குது...'' என சலித்தான் சீனு.
''இன்றும் மழை பொழிய வாய்ப்பில்லை...''
சமாதானப்படுத்திய அம்மா, வானிலை நிலவரத்தை எடுத்துக்கூறினாள்.
வியாழக்கிழமை -
பெற்றோருடன் சுற்றுலா புறப்பட்ட சீனு, ''இப்போதாவது, ரெயின் கோட்டை எடுத்துக் கொள்கிறேன் அம்மா; போகும் இடத்தில் மழை வந்தால் அணிந்து கொள்கிறேன்...'' என்றான்.
''மேகங்கள் கூட்டமாய் இல்லை. அதனால் இன்று மழை வர வாய்ப்பு இல்லை...'' என்றாள் அம்மா.
வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதைக் கண்டு உற்சாகமடைந்த சீனு, ''இன்றாவது, ரெயின் கோட் அணியும் வாய்ப்பு கிட்டுமா...'' என்றான்.
''இல்லை... கருமேகங்கள் கலைந்தே செல்கின்றன; மழை வர வாய்ப்பு இல்லை...'' என்றாள் அம்மா.
சனிக்கிழமை அதிகாலை உறங்கிக் கொண்டிருந்தான் சீனு. இடியோசை கேட்டு விழித்தான்.
படுக்கையில் இருந்தபடி, ''மழையாமா பெய்கிறது...'' என்று ஆர்வத்துடன் கேட்டான்.
''ஆமாம்... வெளியே சென்று பார்...'' என்றாள் அம்மா.
கொட்டிய துளிகளை கண்டு, ''ஆஹா மழை...'' என ராகம் பாடியபடி குதித்து ஓடினான். ஆடியபடி மழையில் நனைய துவங்கினான். மனதில் மகிழ்ச்சி கரை புரண்டது.
''உன் ரெயின் கோட்டை அணிய மறந்து விட்டாய் சீனு...''
நினைவூட்டினாள் அம்மா.
''பள்ளி செல்லும் போது அணிந்து கொள்கிறேன்...''
குதுாகலம் குறையாமல், மழைத் துளிகளை ரசித்துக்கொண்டிருந்தான் சீனு.
செல்லங்களே... எந்த செயலும் நிறைவேற காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டும்.
எஸ்.பிரபுராஜா