அன்பு ஆன்டிக்கு...
என் வயது, 12; பிரபல பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவன். எனக்கு தள்ளுவண்டியில், பல வண்ணங்களில் விற்கும், சர்பத் குடிக்க ஆசை.
அதை வாங்கி தர கேட்டால், 'அசுத்தமான தண்ணில போட்டிருப்பாங்க. குடிச்சா வயிற்றுபோக்கு வந்திரும். இது போன்ற உணவுகளை தவிர்க்கணும்...' என்பார் அம்மா.
மொத்தத்தில், இது போல் விற்கும் சர்பத்கள் குடிக்க தகுதியற்றவையா... அதை பற்றி முழுமையாக தகவல் தாருங்கள். என் சந்தேகத்தை தீருங்கள் ஆன்டி...
இப்படிக்கு,
எம்.பராந்தகன்.
அன்பு மகனே...
நீ, 'சர்பத்' என்று குறிப்பிட்டிருப்பது உருது சொல். ஹிந்தி மொழியிலும் இந்த வார்த்தை உண்டு.
சர்க்கரை சேர்ப்பதால், தண்ணீரை விட, கெட்டியான நிலை உடைய ஆல்கஹால் இல்லாத, சிரப் சம்பந்தப்பட்ட பானமே சர்பத் எனப்படும்.
சர்பத் வகைகளை முழு சுகாதாரத்துடன் தயாரிக்கலாம். சொர்க்கத்திற்கு சென்றால், முதலில் கொடுத்து உபசரிக்கும் பானம் சர்பத்.
சர்பத் குடித்தால், நாக்குக்கு, 'க்ளைடாஸ்கோப்' சுகானுபவத்தை வாரி வழங்கும். எனக்கு தெரிந்த சர்பத் வகைகளை பட்டியலிடுகிறேன். வாசித்து உற்சாகம் பெறு.
அவை, அவல் எலுமிச்சை சர்பத், பழக்கலவை சர்பத், மாம்பழ குலுக்கி சர்பத், வெள்ளரி மோர் சர்பத், சப்ஜா விதை சர்பத், ரோஜா இதழ் சர்பத், கேரட் சர்பத், முலாம் பழ சர்பத், ஜிகர்தண்டா சர்பத், தர்பூசணி பழத் துண்டு கலந்த முஹப்பத்கா சர்பத்...
கறுப்பு திராட்சை சர்பத், நெல்லிக்காய் சர்பத், ஒட்டாமான் சர்பத், புதினா இலை சர்பத், கன்னியாகுமரி நுங்கு சர்பத், இளநீர் சர்பத், ஆவாரம் பூ சர்பத், செம்பருத்தி சர்பத், மட்டிபழம் சர்பத், ஆரஞ்சு குலுக்கி சர்பத், பப்பாளி பழ சர்பத்...
அகர் அகர் சர்பத், சாத்துக்குடி சியா சர்பத், கற்றாழை சர்பத், வில்வப்பழ சர்பத், நன்னாரி வேர் சர்பத், மாதுளம் பழ சர்பத்.
கடைகளில் வாங்கி குடித்தால் தானே வயிற்று போக்கை பற்றி கவலைப்பட வேண்டும். நாமே தயாரித்தால் பயமில்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கிய நன்னாரி துாள், கடல் பாசி, பாதாம் பிசின், குளிர்பால், ஜஸ்கட்டிகள் கலந்து, உன் அம்மாவே, தித்திப்பான சர்பத் தயாரிக்கலாம். அதை பருகி, வெயிலின் உக்கிரத்தை குறைக்கலாம்.
கோடைகாலத்தை சர்பத்துகளால் தாக்கி, தாகத்தை தணி செல்லமே!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.