மணலிபட்டு பள்ளியில், 4ம் வகுப்பில் சேர்ந்திருந்தான் அறிவழகன். பெயருக்கு ஏற்றாற் போல், அறிவும், திறமையும் உடையவனாக திகழ்ந்தான். கண்டிப்பு, ஒழுக்கத்துடனும் வளர்த்தனர் பெற்றோர். படிப்புக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்திருந்தனர்.
பள்ளி அருகே சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவு பொருட்களை சிலர் விற்றுக் கொண்டிருந்தனர். பகட்டு வண்ணத்தால் ஈர்க்கும் மிட்டாய்கள் இருந்தன. பாலிதீன் பையில் அடைத்த பல வண்ண மிட்டாய்களை கூவி விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர்.
வகுப்பு இடைவேளையில் கவர்ச்சியாக தெரிந்தவற்றை வாங்கி தின்றனர் மாணவர்கள்.
அறிவழகனுக்கும் அந்த மிட்டாய்களை சாப்பிட விருப்பம் ஏற்பட்டது. நண்பனுடன் சென்று, பஞ்சு மிட்டாய் வாங்கி தின்றான். நாவில் இனிப்பு சுவை பெருக, ''அண்ணா... நாளையும் மிட்டாய் எடுத்து வருவீரா...'' என விற்றவரிடம் கேட்டான்.
''இங்கு, தொடர்ந்து கடை போட முடியாது. வேண்டுமென்றால், இப்போதே வாங்கி வைத்துக் கொள். பள்ளி அருகே மிட்டாய் விற்பதை ஆசிரியர்கள் கண்டிப்பர்...'' என்றார் வியாபாரி.
மேலும் சில மிட்டாய்கள் வாங்கி, சட்டை பையில் திணித்துக் கொண்டான் அறிவழகன். அப்போது, பள்ளியில் அழைப்பு மணி ஒலித்தது. அவசரமாக புறப்பட்டான்.
வகுப்புக்கு சென்றவன் பையில் இருந்த மிட்டாய்களை கவனித்து விட்டார் ஆசிரியர்.
அன்று உடல் நலம் பற்றி நடத்திய பாடத்தில், ''பஞ்சு மிட்டாய் முழுக்க சர்க்கரையில், சுகாதாரமற்ற சூழலில் தயாராகிறது. அதில் முழுமையாக சத்து கிடையாது...
''பிளாஸ்டிக் பையில் அடைத்திருப்பதால் கெடுதல் தரும். சாப்பிட்டால் ஆரோக்கியம் கெடும். சுகாதாரமற்ற பகுதிகளில் உணவு பொருட்கள் வாங்க கூடாது...'' என்றார்.
அது அறிவுரையாக அறிவழகன் காதில் விழுந்தது. விழிப்புணர்வு பெற்றான். சுகாதாரமற்ற மிட்டாயை குப்பையில் வீசினான்.
குழந்தைகளே... உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சுகாதாரமற்ற தின்பண்டங்களை சாப்பிடக் கூடாது!
எம்.நடராஜன்