இந்தியாவில், சனி பகவானுக்கு தனிக்கோவில்கள் இருப்பது மிகவும் குறைவு.
தமிழகத்தில், சனி பகவானுக்கு முக்கியத்துவம் தரும் சிவாலயங்கள் ஒரு சில உள்ளன. ஆனால், சனீஸ்வரரை மூலவராக கொண்ட மலைக்கோவில், மத்திய பிரதேச மாநிலம், மொரினா அருகே, ஐதி கிராமத்திலுள்ள மலையில் உள்ளது. மொரினா மாவட்ட தலைநகராக விளங்குகிறது.
தாந்த்ரீகம் எனப்படும் சக்தி மிக்க மந்திரத்துடன் தொடர்புடைய கோவில் இது.
சில கோவில்களில் சுவாமியின் முன்போ, பின்பக்கமோ ஸ்ரீசக்ரம் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகை கோவில்களுக்கு சக்தி அதிகம். தாந்த்ரீகம் எனும் விதிப்படி இவை அமைக்கப்படும். பீஜ மந்திரம் எனப்படும் மூல மந்திரம் கூறி, இவற்றுக்கு பூஜை செய்வர். இவ்வகை கோவிலே ஐதி சனீஸ்வரர் கோவில்.
ஒரு சமயம், தன் தாயை அவமதித்த பெரியம்மா உஷாவை, காலால் மிதித்து விட்டார், சனி பகவான். இதன் காரணமாக ஏற்பட்ட சாபத்தால், அவரது கால் ஊனமானது. தன் செயலுக்கு வருந்தி அவர், சிவனை வேண்டி தவம் மேற்கொண்டார்.
தவம் செய்ய அவர் தேர்ந்தெடுத்த இடம் தான், ஐதி மலை. இதை சனி பர்வதம் என்கின்றனர். பர்வதம் என்றால், மலை.
இந்த புராண பின்னணியின் அடிப்படையில், அவருக்கு ஐதியில் கோவில் எழுப்பப்பட்டது. இந்த மலை திரேதாயுகம் காலத்தில் இருந்தே இங்கு இருப்பதாக தகவல்.
பழமை வாய்ந்த இந்த மலையில், சனி பகவான் தவமிருந்த வரலாறைக் கேள்விப்பட்ட மன்னன் விக்கிரமாதித்தன், இங்கு, அவருக்கு கோவில் எழுப்பினான். இந்த கோவில் மிகவும் பழுதுபட்ட சமயத்தில், குவாலியர் மகாராஜா தவுலத்ராவ் சிந்தியா திருப்பணி செய்து, புதுப்பித்தார்.
இந்தக் கோவில் ஐதியில் அமைந்திருந்தாலும், குவாலியர் சனி மந்திர் என்று சொன்னால் தான், இங்குள்ள மக்களுக்கு புரிகிறது.
இந்தக் கோவிலில் சனி ஜெயந்தி உற்சவம் முக்கியம். தை அமாவாசையன்று, சனி பகவான் பிறந்ததாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். எனவே, அன்று, பரிக்ரமா எனப்படும் கிரிவலம் வந்து, சனீஸ்வரரை வழிபடுகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொள்வர்.
இந்தக் கோவிலில், குப்த கங்கை தாரா எனப்படும் தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்து நீர் மிகவும் புனிதம் வாய்ந்தது என்றும், சனீஸ்வரரால் ஏற்படும் தோஷங்களை நீக்கவல்லது என்றும் நம்பப்படுகிறது.
கடினமான பாறைகளைக் கொண்டுள்ள பகுதியாக இருந்தாலும், இந்த தீர்த்தத்தில் கோடையிலும் தண்ணீர் வற்றுவதில்லை.
இந்தக் கோவிலின் அருகில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. சனியால் ஏற்படும் தோஷங்களை இந்த ஆஞ்சநேயர் தீர்த்து வைப்பதாக கூறுகின்றனர், பக்தர்கள்.
சென்னை சென்ட்ரலிலிருந்து குவாலியருக்கு ரயில்கள் உள்ளன. துாரம், 1,874 கி.மீ., குவாலியரிலிருந்து ஐதி சனி பகவான் கோவில், 35 கி.மீ., துாரத்தில் உள்ளது.
தி. செல்லப்பா