பிரச்னைகளை சமாளித்து பழகுங்கள்!
நண்பர் ஒருவரின் மகளுக்கு, வயது, 23. அந்த வயதுக்கு மீறிய, குண்டான உடல் தோற்றம் கொண்டவள். அண்மையில் அவளுக்கு திருமணம் நடந்து, புகுந்த வீட்டிற்கு சென்றாள்.
அங்கு சென்ற ஒரே மாதத்தில், கணவரின் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும், குண்டான உடல் தோற்றத்தை பற்றி, அவள் காதுபடவே கேலி பேசியுள்ளனர். அந்த வேதனையை தாங்க முடியாததால், பிறந்த வீட்டுக்கே வந்து விடுவதாக கூறி, தன் அப்பாவிடம் போனில் பேசி, கண்கலங்கியிருக்கிறாள்.
அதைக்கேட்டு நண்பர் மனம் புழுங்கினாலும், அதை மகளிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆறுதலான, தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசி, அவளை தேற்றியுள்ளார்.
மகளுக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும். அந்தத் திறமையை பயன்படுத்தி, சிறப்பான ஓவியங்களை வரைந்து, கண்காட்சி நடத்தும்படி ஆலோசனை கூறியுள்ளார். மேலும், முறைப்படி சங்கீதம் பயின்றவளை, பாட்டு வகுப்பு ஆரம்பிக்கும்படியும் அறிவுறுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், உடல்நலம் பாதிக்காத வகையில், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி செயலில் இறங்கியவள், வெகு விரைவிலேயே கேலி பேசியவர்களே, மூக்கின் மேல் விரல் வைக்கும்படி செய்து விட்டாள்.
வாசகர்களே... எந்தவொரு பிரச்னையைக் கண்டும் அஞ்சாதீர்கள்; அதை சமாளித்து பழகுங்கள். அது தான் வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல உதவும்!
- வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
மதி தரும் மதிப்பெண்கள்!
அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர், முக வாட்டத்துடன் காணப்பட்டார்.
காரணம் வினவியபோது, 'என் மகன், பிளஸ் 2வில், 50 சதம் மட்டுமே வாங்கியிருக்கிறான். இந்த மதிப்பெண்ணை வைத்து, என்ன படிப்பு படிக்க முடியும். 'நீயெல்லாம் வாழ்க்கையில் எங்கே உருப்படப் போகிறாய் என, திட்டியதுடன், நான்கு அடியும் அடித்து விட்டேன்...' என்று வேதனையுடன் தெரிவித்தார்.
அவரிடம், '50 பேர் வரை பணிபுரியும் இந்நிறுவனத்தில் உங்களுக்கு சம்பளம் எவ்வளவு...' எனக் கேட்டேன். 'முப்பதாயிரம் ரூபாய்...' என்றார்.
'நிறுவனத்தின் மேலாளருக்கும் உங்களுடைய வயது தான். ஆனால், அவர் மட்டும் மாதம், லட்ச ரூபாய் வாங்குகிறாரே... ஏன் உங்களால் அவரைப் போல் வாங்க இயலவில்லை.
'உங்கள் மனைவி, ஒருநாளாவது இதை சுட்டிக்காட்டி, 'இந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு நாமெல்லாம் எங்கே மற்ற உறவினர்களை போல் வீடு, வாசல், வாகனம் மற்றும் நகை நட்டுகளை வாங்கி பெருமையாய் வாழப் போகிறோம்...' என, உங்களை பார்த்து கேட்டிருப்பாரா...
'அப்படி கேட்டால், உங்கள் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும். மதிப்பெண்ணோ, சம்பளமோ அது அவரவர் அறிவு மற்றும் திறமைக்கு ஏற்றபடி தான் கிடைக்கும். மன நிறைவுடன் அதை ஏற்பது தான் வாழ்க்கை...' என, விளக்கியதும் தெளிவானார்.
மகனின் தகுதிக்கேற்ற படிப்பில் சேர்ப்பதாக கூறி சென்றார்.
மனிதனுக்கு, ஆசைகளை அதிகமாய் வழங்கிய இயற்கை, அறிவு மற்றும் திறமையை அளவாகத்தானே வழங்கி உள்ளது.
— கே. ஜெகதீசன், கோவை.
முன்னெச்சரிக்கை முத்தம்மா!
சமீபத்தில் என் தோழியை காண, அவள் வீட்டிற்கு போயிருந்தேன். என்னை காத்திருக்கும்படி சைகை காட்டி, தன் நான்கு வயது பேத்தியிடம் ஏதோ சீரியசாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
பேத்தியிடம் பேசி முடித்து வந்தபின், என்னவென்று விசாரித்தேன்.
'என் பேத்திக்கு, தொண்டையில் ஏதோ பிரச்னை இருப்பதால், மாலையில், அவளை மருத்துவரிடம் அழைத்துப் போகிறோம். அங்கு போனதும், அவள் பயந்து விடக்கூடாது என்பதால், டாக்டர் என்னவெல்லாம் கேட்பார், எப்படி பரிசோதிப்பார், அதற்கு எப்படி பதில் சொல்லி ஒத்துழைக்க வேண்டும் என்பதை விளக்கி, அவளை மனதளவில் தயார் செய்தேன்.
'இதற்கு முன்பும் இப்படித்தான் தயார் செய்து சென்றோம். டாக்டரும், அதிக சிரமம் இல்லாமல், விரைவாக செயல்பட முடிந்தது.
'மேலும், உறவினர் வீடு, வெளியூர் பயணம், சுற்றுலா என்று எங்கு செல்வதாக இருந்தாலும், உறவு முறை மற்றும் அங்குள்ள சுற்றுப்புற சூழல் குறித்து முன்கூட்டியே விளக்கி, அவளை தயார்படுத்துவோம்.
'இதனால் அவளும், புதிய இடம், புதிய ஆட்கள் என்ற பயமின்றி கலந்து கொள்கிறாள். எங்கள் பயணம் பதட்டமின்றி இனிதே முடிகிறது...' என்றாள்.
தோழியை பாராட்டி மகிழ்ந்ததுடன், நானும் அவளது பாணியை கடைப்பிடிக்க தீர்மானித்தேன்.
— என். கண்மணி, சென்னை.