திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!
'புளிய மாநகர் பாய்ஸ் கம்பெனி' அறிமுக வாசகங்களாக, 'படாடோப, பயங்கர, ஆர்ப்பாட்ட, அலங்கார மாஸ்டர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிக்கும், 'வீர அபிமன்யு' நாடகம் - கண் கவரும் உடை அலங்காரம், கலர் லைட்டுகள், டர்னிங் சீன்கள் - காணத் தவறாதீர்கள்...' என, விளம்பரப்படுத்தி, என்னை அறிமுகப்படுத்தியது.
தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தேன். அப்போதே நன்றாக தமிழ் பேசுகிறவன் என்று என்னை உற்சாகப்படுத்துவர்.
மலேஷிய நாட்டுக்கு, கப்பலில் புறப்பட்டு போய், ஆறு மாதங்கள் நாடகங்கள் நடத்தத் திட்டமிட்டது, நாடகக் குழு. அதற்கான தீவிர ஏற்பாடுகளும் தயாராகின.
இந்த விபரம் அறிந்த என் அப்பா, 'இவனை மீண்டும் படிக்க வைத்து, பெரிய அரசாங்க அதிகாரியாக எதிர்காலத்தில் காண இருக்கிறேன்...' என சொல்லி, அங்கிருந்து என்னை அழைத்து வந்து விட்டார்.
அச்சமயம், மதுரை, பெரியகுளத்தில் தங்கி, அந்த பகுதியில் கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்தார், அப்பா. எங்கள் குடும்பமும் அங்கே தான் இருந்தது. அதே ஊரில் என் படிப்பை தொடர்ந்திருக்க முடியும்.
நான் கவனத்துடன், நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக, வத்தலக்குண்டு என்ற ஊரில், ஏ.எம்.சி.சி., என்ற உயர்நிலை பள்ளியில், 6ம் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார், அப்பா.
அது, அமெரிக்க நாட்டு உதவியுடன் நடத்தப்படும், கிறிஸ்தவப் பள்ளி. அங்கேயே சாப்பாடு, தங்கும் வசதி எல்லாம் உண்டு. வாரம் ஒருமுறை, பகல் உணவுக்கு பிறகு, என்னை பெரியகுளம் வீட்டுக்கு அழைத்துச் செல்வார், அப்பா. பிறகு, திங்கட் கிழமை காலையில் பஸ் ஏற்றி, வத்தலக்குண்டு பள்ளிக்கு அனுப்பி வைப்பார். படிப்பில் கெட்டிக்காரன் என, பெயர் பெற்றேன்.
இங்கே தான் ஒரு திருப்பம்:
வத்தலக்குண்டில், டென்ட் சினிமா கொட்டகை ஒன்று இருந்தது. அங்கு, எம்.கே.தியாகராஜ பாகவதர், அஸ்வத்தமா ஆகியோர் நடித்த, சிந்தாமணி என்ற சினிமாவை, எங்கள் விடுதி வார்டன் பார்த்து வந்திருந்தார். அவர், ஒரு கலைப் பித்தர்; கவிஞரும் கூட.
அந்தப் படக்கதையை, பள்ளி மாணவர்களை வைத்து, நாடகமாக நடத்திப் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்து, வேலையையும் துவங்கினார். அந்த தியேட்டர் முதலாளியிடம் சொல்லி, தினசரி, நான் உட்பட இன்னும் சில மாணவர்கள், மாலை நேரங்களில், அந்தப் படத்தை தொடர்ந்து பார்க்க ஏற்பாடு செய்தார்.
'படத்தில், பாகவதர் நடித்த கதாநாயகன் வேடத்தை, நீதான் ஏற்று நடிக்கப் போகிறாய், கவனமாக பார்த்துக் கொள்...' என்றார், என்னிடம்.
'சிந்தாமணி' நாடகத்தை நடத்தியே தீருவது என, முடிவெடுத்த வார்டன், யார் யாருக்கு என்ன வேடம் என்பதையும், மற்ற மாணவர்களுக்கும் சொல்லி விட்டார்.
குறிப்பாக, நான் படத்தைப் பார்த்து, பாகவதர் போல் பாடல், வசனம், நடிப்பு மற்றும் அங்க அசைவுகளை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொண்டேன்.
பிறகு, எங்கள் நாடக ஒத்திகை தொடர்ந்து நடந்தது. நாடகமும் தயாராகி விட்டது.
இதுபோன்று, பல பள்ளிகளைச் சேர்ந்தோரின் நாடகப் போட்டி, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் நடைபெற்றது. எங்கள், 'சிந்தாமணி' நாடக நிகழ்ச்சிக்கு, சர்.பி.டி.ராஜன் தலைமை வகித்தார்.
'சிந்தாமணி' நாடகத்துக்கு, பெரிய வரவேற்பு இருந்தது. எங்கள் பள்ளிக்கே, நாடகத்துக்கான முதல் பரிசும், நடிப்பிற்காக எனக்கு முதல் பரிசும் கிடைத்தன.
மறுபடியும் படிப்பைத் தொடர்ந்தேன்.
'சிந்தாமணி' நாடகத்தில், என்னை நடிக்க வைத்த வார்டனின் மூளை, என் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறது.
ஒருநாள் என்னை அழைத்து, 'தம்பி ராஜேந்திரா... உனக்கு அழகான தோற்றம் அமைந்திருக்கிறது. தமிழ் வசனங்களை சரியான உச்சரிப்புடன் கச்சிதமாக பேசுகிறாய். உன் குரல் வளம் எவருக்கும் இல்லாத சொத்து. இசை ஞானமும் உனக்கு இருக்கிறது. உனக்காக, சினிமா உலகம், சிறப்பான வரவேற்பளிக்கக் காத்திருக்கிறது. அதற்கான வழியை சொல்கிறேன் கேள்...
'மதுரையில், டி.கே.எஸ்., சகோதரர்களின், 'பால ஷண்முகானந்த சபா' என்ற, நாடகக் குழு நடந்து வருகிறது. அங்கு போனால், உன்னை நிச்சயம் சேர்த்துக் கொள்வர்...' என்றார்.
படிப்பு, நடிப்பு இதில் ஒரு எழுத்தையா மாற்றச் சொல்கிறார்; என் தலையெழுத்தை அல்லவா மாற்ற சொல்கிறார் என, குழம்பினேன்.
என் குழப்பத்தை நீக்கி, மதுரைக்கு போகும் பஸ்சில், எனக்கு, அரை டிக்கெட் வாங்கிக் கொடுத்து, செலவுக்கு, கையில் கொஞ்சம் சில்லரை கொடுத்து, வழியனுப்பி வைத்தார், வார்டன்.
மற்றவர்களோடு என்னையும் சுமந்து சென்ற பஸ், நேராக மதுரையை நோக்கி போய் கொண்டிருந்தது. தினமும் போய் வரும் பஸ் தான் அது. ஆனால், நான்... புதிய பயணம் துவங்கி விட்டேன்.
வாழ்க்கையில், சிறு வயதில் படிப்பு. பிறகு, புளியம்பட்டி நாடக குழுவில் நடிப்பு, மீண்டும் படிப்பு, மறுபடியும் நடிப்பு. ஆனால், இனிமேல் நான் படிக்க முடியாது. நடிக்கப் போகிறேன்.
மதுரை போனவுடன், டி.கே.எஸ்., நாடக குழுவின் வாசல் கதவு திறந்திருக்கும். சொர்க்க வாசல் கதவுகள் போல, என்னை வரவேற்று வாய்ப்பளிப்பர்.
டி.ஆர்.மகாலிங்கம் மாதிரி, நானும் சிறு வயதிலேயே சினிமாவில் நடித்து விடுவேன். நான் நடித்த படத்தை, ஊரார் பார்ப்பர். ஏன், நான் நடித்த சினிமாவை நானே பார்க்கப் போகிறேன் என, பலவாறு கற்பனை செய்தபடி, போய் கொண்டிருந்தேன்.
மதுரையில் என்ன நடந்தது?
- தொடரும்.எஸ்.எஸ்.ராஜேந்திரன்