பா - கே - ப
'மணி... முன்பொரு முறை, கேள்வி - பதில் பகுதியில், கனவு பற்றிய கேள்விக்கு, இரவில் காணும் கனவு காலை விழித்தவுடன் மறந்து விடும் என்று பதில் கூறியிருந்தீரே... கனவு பற்றி அருமையான ஆராய்ச்சி கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கிறது, படித்து பார்...' என, ஆங்கில இதழ் ஒன்றை என்னிடம் தந்தார், உதவி ஆசிரியை.
அதில் -
ஒருத்தருக்கு இப்ப, 60 வயசு ஆகுதுன்னு வச்சுக்கங்க. அவரு இதுவரைக்கும், 20 ஆண்டுகள் துாங்கிக் கழிச்சிருப்பார். அந்த, 20 ஆண்டுகள்லேயும், ஐந்து ஆண்டுகள் கனவு கண்டே கழிச்சிருப்பார்.
ஒரு மனிதன், தன் வாழ்நாளில், மூணுல ஒரு பங்கை துாங்கிக் கழிச்சிடறான். அப்படி துாங்கற நேரத்துலயும், நாலுல ஒரு பங்கு நேரத்தை கனவு காண்றதில கழிச்சிடறான், என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
ஒருத்தர் துாங்கிக்கிட்டிருக்கார். இப்ப அவரு கனவு கண்டுக்கிட்டிருக்காரா இல்லையாங்கிறதை எப்படி கண்டு பிடிக்கிறது?
கடந்த, 1950க்கு முன்பெல்லாம் இதைக் கண்டுபிடிக்கிறதுக்கு நமக்கு எந்த வழியும் தெரியாமதான் இருந்தது. அதுக்கு பிறகு தான், இதுக்கு ஒரு வழியை கண்டுபிடிச்சார், ஆய்வாளர் ஒருவர்.
அதாவது, துாங்கறவர் கண்களை கவனிச்சுப் பார்க்கணும். அதுல ஒரு அசைவு ஏற்படும். இந்த அசைவை மின்சார கருவிகள் மூலமாக பதிவு செய்தார்.
அதுலயிருந்து என்ன தெரிய வருதுன்னா, கனவு கண்டுக்கிட்டிருக்கிற ஒருவரின் கண்கள், வேகமா அசையும். கனவு காணாமல் துாங்கறவரின் கண்கள், மெதுவாத்தான் அசையும்.
அவரு இதோட விடல. துாங்கிறவரோட இதயத் துடிப்பு, சுவாச வேகம், மூளை மின் அலைகள் இதையெல்லாம் கூட பதிவு பண்ணினார்.
விழிப்பு நிலையில வெளிப்படுகிற மூளை மின் அலைகளுக்கும், துாக்க நிலையில வெளிப்படுகிற மூளை மின் அலைகளுக்கும் வித்தியாசம் இருந்தது.
அதே மாதிரி கனவு காணும் நிலையிலயும், கனவு காணாத நிலையிலயும், அது வேற வேற மாதிரியாக இருந்தது.
'கனவு காணும்போது, சுவாசம், இதயத்துடிப்பு மற்றும் கண்ணசைவு அதிகரிக்கும். மூளை மின் அலைகள், விரைவான கண்ணசைவு இது ரெண்டுக்கும் முக்கிய பங்கு உண்டு...' என, கண்டுபிடிச்சார், இன்னொரு ஆய்வாளரான வில்லியம் சி.டிமென்ட்.
ஹான்ஸ்பர்ஜர்ன்னு ஒருத்தர், ஜெர்மனியைச் சேர்ந்த உளவியல் நிபுணர். மூளையில் தோன்றும் மின்னழுத்த வேறுபாடுகளை பதிவு செய்யலாம் என, கண்டுபிடிச்சார். அந்தத் தத்துவத்தின் அடிப்படையில தான், மூளை மின் அலை வரைவி என்ற கருவி உருவாக்கப்பட்டது.
ஆல்பிரட் மாரி, என்ற ஆராய்ச்சியாளர், உதவிக்கு சிலரை வச்சுக்கிட்டு,அவரு தன்னையே கனவு பரிசோதனைக்கு உட்படுத்திக்கிட்டார்.
அவர் துாங்கும்போது, அவரின் மூக்குக்கிட்ட சென்ட் பாட்டில் காட்டப்பட்டது.
உடனே, எகிப்தின் தலைநகர் கெய்ரோவுல இருக்கிற ஒரு வாசனைப் பொருள் விற்பனை கடையில நின்னுக்கிட்டிருக்கிற மாதிரி அவரு கனவு கண்டாராம்.
அவர் முகத்துல சிவப்பு நிற ஒளி விழற மாதிரி பண்ணியிருக்காங்க. அப்போது, அவருடைய கனவுல புயலும், இடியும், மின்னலும் வந்ததாம்.
பெரும்பாலான கனவுகள், தினசரி நடவடிக்கைகள் சம்பந்தமாத்தான் இருக்கும்.
நம் வலுவான உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள், தீராத ஏக்கங்கள், பயம்... இதுகளோட பிரதிபலிப்புகளைத் தான், நாம் கனவுகளாகக் காண்கிறோம்.
- இப்படி கனவு பற்றி, பல விஷயங்களை உள்ளடக்கி இருந்தது, அக்கட்டுரை.
வாசகர்களே... உங்களுக்கு எந்த மாதிரி கனவு வரும்.
ப
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மணியன், உலகின் பல நாடுகளுக்கு சென்று, நிறைய பயணக் கட்டுரைகள் எழுதியவர்.
அவர், பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது, நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு இது:
பிரான்ஸ் தலைநகர், பாரீசுக்கு போயிருந்த போது, முதல் நாள் இரவு, ஒரு ஊர்லேர்ந்து ரயிலில் புறப்பட்டு, மறுநாள் காலை இன்னொரு ஊருக்கு போய் சேரணும். அதுக்காக ரயில் ஏறினார்.
டிரஸ் எல்லாம் மாற்றி துாங்கப் போற சமயத்துல, ஒரு தட்டுல ரெண்டு, 'பிளம் கேக்'கை வச்சு நீட்டினார், ரயில் பணியாளர் ஒருவர். இவரும் வாங்கி சாப்பிட்டார்.
கொஞ்ச நேரத்துல காபியும் கொண்டு வந்து கொடுத்தார். அதையும் வாங்கி குடித்தார். அதுக்கப்புறம் அந்த ஆளை பார்த்து, 'கொஞ்சம் தண்ணீர் கொடுக்க முடியுமா?' என, கேட்டார், மணியன்.
ஒரு பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துட்டு போயிட்டார், பணியாள்.
இவர் போர்வையை இழுத்து போர்த்திக்கிட்டு படுத்து, மறுநாள் காலை எழுந்தார். இப்பவும் அருமையான காபியும், 'கேக்'கும் கொண்டு வந்து கொடுத்தனர். அதையும் வாங்கி சாப்பிட்டார், மணியன்.
பாரீஸ் நகரத்திலிருந்து, 1,000 கி.மீ.,க்கு அப்பால் இருந்த மாண்ட் பெலியேர்ங்கிற ஊரில் ரயில் நின்றது.
பெட்டியை எடுத்துக்கிட்டு இறங்க தயாரானார், மணியன். அப்போ, ரொம்ப பணிவா வந்து, இவரிடம் ஒரு, 'பில்'லை கொடுத்தாராம், பணியாள்.
நம் ஊர் கணக்குல, 10.50 ரூபாய் என, அந்த, 'பில்' இருந்ததாம்.
அதை வாங்கிப் பார்த்துட்டு, 'எதுக்கு இந்த பில்... ராத்திரி காபி, கேக் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தீங்களே அதுக்கா...' என, கேட்டிருக்கார், மணியன்.
'இல்ல சார்... கேக், காபியெல்லாம் இலவசம். அதுக்கு காசு கிடையாது. நீங்க கேட்டீங்களே குடிக்கிறதுக்கு தண்ணீர்... அந்த ஒரு பாட்டில் தண்ணீருக்கு தான் இந்த பில்...' என்றாராம்.
அதிர்ச்சி அடைந்த மணியன், 'பில்' தொகையை செலுத்திவிட்டு வந்துள்ளார்.
சரி, இப்ப இந்தியாவுக்கு வருவோம். அப்படியே, 'உல்டா'வா நடந்திருக்கும் தானே!
அது போகட்டும்... இந்தியாவுக்கு ரயில் வந்த வரலாறை கொஞ்சம் தெரிந்துக் கொள்வோமே!
நம் நாட்டில், முதல் ரயில் பாதை திறந்து விடப்பட்ட நாள், ஏப்., 16, 1853.
அதை நினைவு கூர்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து, 16ம் தேதி வரைக்கும் ரயில்வே வாரம் கொண்டாடுகிறோம்.
முதல் லோகோமோட்டிவ் இன்ஜினை வெற்றிகரமாக உருவாக்கியவர், ஜார்ஜ் ஸ்டெப்ஷன். அதன் விளைவு தான், இன்று நாம் உல்லாசமாக ரயிலில் பயணம் பண்ணிக்கிட்டிருக்கோம்.
இந்தியாவில் ரயில் ஓடறதுக்கு மூல காரணமாக இருந்தவர்,அப்போதைய கவர்னர் ஜெனரலான, லார்ட் டல்ஹவுசி.