ஜே. சூர்யா, திருநெல்வேலி: மின்னஞ்சலில் அனுப்பும் தமாஷை, அஞ்சல் அட்டையிலும் எழுதி அனுப்பினால், ஏதாவது ஒன்று தேர்வாக வாய்ப்பு உள்ளதா?
உங்கள் கேள்வியை, பொறுப்பாசிரியர் பார்வைக்கு கொண்டு சென்றேன்...
'ஒரே தமாஷை திரும்பத் திரும்ப மின்னஞ்சலில் அனுப்புவதும், மின்னஞ்சலில் அனுப்பிய தமாஷையே மீண்டும் அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்புவதும், நேர விரயம். படித்தவுடன் சிரிக்க வைக்கும், சொந்த கற்பனை தமாஷ்களை எழுதி அனுப்பச் சொல் மணி...' என்கிறார், பொ.ஆ.,
* எஸ். வைத்தியநாதன், மதுரை: 'எதற்கும் அஞ்சாத, மே.வங்க முதல்வர், மம்தா பானர்ஜியை பிரதமராக்க வேண்டும்...' என்று, பா.ஜ.,வின் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளாரே...
பா.ஜ., ஆட்சியில், இவருக்கு, அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை; கட்சியில் முக்கிய பொறுப்பும் கொடுக்கவில்லை. அதனால், மம்தா கட்சியில் இணைந்து விடலாம் என, முடிவெடுத்து விட்டாரோ என்னவோ!
வி. வைத்தியநாதன், சென்னை: பிரதமர் வேட்பாளர் யார் என்று, இன்னமும் எதிர்க்கட்சிகளால் சொல்ல முடியவில்லையே... என்ன காரணம்?
அவர்களின் ஒற்றுமை இது தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
ப. நிர்மலாதேவி, ஈரோடு: சிக்கனமாக இருக்கும் என்னை, 'கஞ்சி' என்கின்றனரே, என் தோழிகள்...
பணத்தின் அருமையை அவர்கள் உணரவில்லை. சேமிப்பு எதுவும் செய்யாமல் இருக்கின்றனர். வயது முதிர்ந்து, சம்பாத்தியம் எதுவும் இல்லாமல் போகும் காலகட்டத்தில், அவசர பணத் தேவைக்கு யாரையாவது அணுகினால், சொந்த பந்தங்கள் கூட, கை விரித்து விடுவர். நீங்கள், 'கஞ்சி'யாகவே இருங்கள்!
தி. மகாராஜன், சின்னமனுார்: ரம்ஜான் விருந்தை நீங்கள் தவற விடுவதில்லை தானே...
உண்மை தான். ஒவ்வொரு ரம்ஜானின் போதும், நண்பர்கள் ஆரூன் மற்றும் மீரான் இருவரும், 100 பிளேட் மட்டன் பிரியாணி, சிக்கன், முட்டை என, அனுப்பி விடுவர். நமது அலுவலகத்தினர் சாப்பிடுவர். எனக்கு தனியாக அனுப்பி வைக்கும், மட்டன் சேர்க்காத பிரியாணியை நான் சாப்பிடுவேன்!
ஜி. வெங்கட்ராமன், பாண்டி: மறைந்த, சினிமா டைரக்டர், சிரிப்பு நடிகர் மனோபாலா பற்றி சில வரிகள்...
நான், தியேட்டர்களுக்கு செல்வதில்லை. அதனால், அவர் டைரக்ட் செய்த படங்களை பார்த்ததில்லை. நான் பார்க்கும், 'டிவி சேனல்கள்' இரண்டு தான். அவை, சிரிப்பொலி மற்றும் ஆதித்யா தான். அதில், கவுண்டமணி -செந்தில் மற்றும் வடிவேலு தமாஷ்களுக்கு அடுத்து, மனோபாலா நடித்த நகைச்சுவை காட்சிகளை விரும்பி பார்ப்பேன்!
* லெ.நா. சிவக்குமார், சென்னை: விலை சற்றே ஏற்றப்பட்டதால், நமது நாளிதழின் சர்க்குலேஷன் சலனம் அடைந்துள்ளதா?
சந்தோஷமான சலனம் அடைந்துள்ளது. அனைத்து பதிப்புகளும் சேர்த்து, 18 ஆயிரம் பிரதிகள் அதிகரித்துள்ளன. வாசக முதலாளிகளுக்கு, 'தேங்க்ஸ்!'
கே. ரவி, சென்னை: என் உறவினர், சிறுகதை எழுத ஆசைப்படுகிறார். அவருக்கு, உங்கள் ஆலோசனை என்ன?
சிறுகதையின் முடிவு தான், வாசகர்களுக்கு சந்தோஷத்தை தரும். அதனால், முடிவை முதலில் யோசிக்க சொல்லுங்கள். அத்துடன், சிறுகதையில், நான்கு, 'கேரக்டர்'களுக்கு மேல் வராமல் எழுதச் சொல்லுங்கள்!