சம்பளம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2023
08:00

'டிவி' பார்த்துக் கொண்டிருந்தாள், சாதனா.

அலாரம் அடித்த உடன், பரபரப்போடு எழுந்து, சுற்றிலும் பார்த்து, கலைந்துக் கிடந்த சோபா விரிப்பை சரி செய்தாள். பாத்ரூமிற்குள் சென்று தண்ணீர் ஊற்றி, புதிய ஓடோனில் மாட்டி, ஹாலில் கீழே கிடந்த சாக்லேட் கவரை குப்பை தொட்டியில் போட்டாள்.

படுக்கையறையை சுத்தம் செய்த பெருமூச்சோடு, சோபாவில் அமர்ந்தாள், சாதனா.

'ஹோம்வொர்க்' செய்து கொண்டிருந்த, சாதனாவின் நான்காவது படிக்கும் மகள், அப்பா வரும் முன், இரவு, 7:00 மணிக்கு அலாரம் வைத்து, வேலை செய்யும் அம்மாவை எப்போதும் போல், இன்றும் வித்தியாசமாய் பார்த்தாள்.

அரைமணி நேரத்திற்கு ஒருமுறை வீடு முழுக்க பார்த்தாள், சாதனா. இப்படி அடிக்கடி வீட்டை சுத்தம் செய்வதில் காரணமில்லாமல் இல்லை.

கணவன் ஷ்யாமின் குணம் எப்போது, எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. சிரித்துப் பேசி, மகளோடு விளையாடிக் கொண்டிருப்பான். வீட்டுச் சுவரில் சிந்தியிருந்த ஒரு துளி இங்க்கை பார்த்தவுடன், அவன் முகம் அஷ்ட கோணலாய் மாறும். ஆத்திரத்தோடு கத்தி கூச்சலிட்டு, சாப்பிடாமல் எழுந்து போய் விடுவான்.

வேலை விட்டு வரும்போது, என்ன மன நிலையில் வருவான் என, இந்த, 10 ஆண்டில் அவள் அறிந்தது தான். சிலசமயம் மறந்து விடுவோம் என்பதால் தான், அலாரம்.

ஷ்யாமின் வண்டி சத்தம் கேட்டதும், சாதனா மற்றும் மகளின் முகம் இறுகியது. ஸ்கூல் பேக்கை எடுத்து அறைக்குள் போய் கதவை சாத்திக் கொண்டாள், மகள். கதவை திறந்து வைத்து, சமையலறை சென்றாள், சாதனா.

ப்ரிஜில் இருந்து எடுத்த ஜில் தண்ணீர் பாட்டிலோடு, கணவன் முன் வந்து நின்றாள். அவன் சாதனாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

''டிபன் செய்யட்டுமா?'' மெல்ல கேட்டாள்.

''ம்!''

அவசரமாக ஓடி, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து தோசையை வார்த்தாள். ரெண்டே தோசையோடு, போதும் என்று எழுந்து கொண்டான். ஒன்றும் பேசவில்லை, சாதனா. அவனிடம் பேச்சுக் கொடுத்தால் அவள் தான் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும்.

வேலையில் இருக்கும் அத்தனை கோபங்களையும் வீட்டுக்குள் கொண்டு வருவான். ஷ்யாமின் குணம் இது தான். அவன் கோபத்தின் காரணம் புரியாமல், மனம் நொந்து, இரவெல்லாம் துாக்கம் வராமல் தவிப்பாள், சாதனா.

சாதனாவை கண்டாலே, அவன் முகத்தில் கோபம் தொற்றிக் கொள்ளும். அவள் பேசத் துவங்கும் முன்பே சத்தமாக பேசி, அவளை அடக்கி விடுவான்.

அவன் விஷயத்தில் தலையிடக் கூடாது; மொபைல்போன் அடித்தாலும், யார் என்று பார்க்கக் கூடாது; அவன் நண்பர்கள் யாராவது அவனைத் தேடி வந்தால், யார் என்று எட்டி பார்க்கக் கூடாது.

இவையெல்லாம் அவன் சொன்ன கட்டளைகள் இல்லை; அவனது கோபமான செயல்களை வைத்து, புரிந்து, ஒதுங்கி கொண்டாள், சாதனா.

வாரக் கணக்கில் பேசாமலிருந்து, வேலை, 'டென்ஷன்' என, ஒற்றை வார்த்தையில் தேவைக்கு மட்டும் சிரிக்கும் கணவன் மீது, அவளின் விருப்பம் விலகியே நின்றது. எல்லாம் என் தலையெழுத்து என்று, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்வாள்.

ஒற்றை ஆளாய் காலை சமையலை முடித்து, குழந்தையை, 'ரெடி' செய்து, ஸ்கூல் வேனில் ஏற்றி விட்டு வந்தாள், சாதனா. பெட் காபி குடித்து, போன் பார்த்துக் கொண்டிருந்த கணவனைக் கண்டதும், எரிச்சல் பற்றியது.

''பாத்ரூம் லைட் எரியலயா?''

''நேற்றிலிருந்து மின்னிக்கிட்டே இருந்துச்சு, 'பீஸ்' போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.''

''நேற்றே சொல்ல வேண்டியது தானே?'' என்று கத்தினான், ஷ்யாம்.

''வேலையில இருக்கறப்ப போன் பண்ணக் கூடாது; வண்டியில வர்றப்ப போன் செஞ்சா எடுக்க மாட்டீங்க; வீட்டுக்கு வந்த உடனே சொன்னா, 'வந்த உடனே உயிர எடுக்காதே'ன்னு சொல்லி கத்தறது.

''நேற்று வேலை முடிஞ்சு வந்ததுல இருந்து, யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசல. குழந்தை கூட உங்களப் பார்த்தா, விலகி நிற்குது. எதுக்கு இந்த கோபம். எனக்கு புரியல,'' என்றாள், சாதனா.

''கஷ்டப்படாம மூணு வேளை சாப்பாடு, நினைச்சா துாக்கம், வாஷிங் மிஷின், மிக்சி, கிரைண்டர், 'ஏசி' மற்றும் ஹீட்டர். இப்படி நீங்க வசதியா வாழணும்ன்னா, நான் வெளியப் போய் கஷ்டப்பட்டாகணும். வேலையில ஆயிரம் பிரச்னை, எனக்கு நிம்மதி இல்லை.

''என் ஒருத்தன் சம்பாத்தியத்துல தான் குடும்பம் நடக்குது. மாசமானா வீட்டு லோன், ஸ்கூல் பீஸ், கரன்ட் பில்ன்னு பணத்தை எண்ணி வைக்கணும். அதுக்கு நான் கஷ்டப்பட்டு மாடா உழைச்சா தான் முடியும்.

''கஷ்டப்படுறவன் ஆயிரம் யோசனையில தான் இருப்பேன். உங்ககிட்ட முழு நேரமும் பல்லை காண்பிக்க என்னால முடியாது. வேணும்ன்னா இங்க இரு, வேண்டாம்ன்னா உங்க அம்மா வீட்டுக்குப் போயிடு,'' காட்டுக் கத்தலாய் கத்தி, பாத்ரூம் கதவை படாரென மூடினான்.

அவசரமாய் தயாராகி, சாதனா கொண்டு வந்து வைத்த டிபன் தட்டை கண்டுகொள்ளாமல் வேலைக்கு கிளம்பினான், ஷ்யாம். தினமும் தவறாமல் அவன் காண்பிக்கும் கோபம் தான். கலங்கிய கண்களோடு அவன் போவதைப் பார்த்தபடி நின்றாள், சாதனா. தன் பக்க நியாயத்தை சொல்லக் கூட அவளுக்கு உரிமை இல்லை.

ஒட்டடை அடித்து, வீட்டை துடைத்துக் கொண்டிருந்தாள், சாதனா. வெளியே யாரோ, 'கேட்' தட்டும் சத்தம்.

''அக்கா அக்கா...'' என, அழைத்தாள், சுடிதார் அணிந்த பெண்.

''யாரும்மா வேணும்?''

''இந்த தெருவுல கடைசி வீடுன்னு சொன்னாங்க. அக்கா, இது ஆடிட்டர் வீடு தானே. வீட்டு வேலைக்கு வந்திருக்கேன்,'' என்றாள்.

''அடுத்த தெருவுல கடைசி வீடு. ஆனா, அவங்க வீட்ல இருக்க மாட்டாங்களே.''

''தேவையில்லாம இவ்வளவு துாரம் வந்துட்டேனே,'' சலித்துக் கொண்டவள், ''இந்த வீட்ல தான் வேலைன்னு நினைச்சு வந்துட்டேன்,'' என்றாள்.

''இந்த வீட்ல தான், வேலைக்கு நான் இருக்கேனே?'' மெல்ல சிரித்தாள், சாதனா.

ஒட்டடை படிந்த தலை கேசம், கொஞ்சம் அழுக்கான உடை, சோகம் படர்ந்த முகம். சாதனாவின் சாதாரண தோற்றம், வீட்டின் வேலையாள் என்றே, அந்தப் பெண்ணை நம்ப வைத்தது.

''உள்ள வந்து, கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டுப் போ. உன் பேர் என்ன?''

''என் பெயர் மாலதி. உங்க முதலாளி இல்லையா?''

''இல்லம்மா, எல்லாரும் வெளிய போயிட்டாங்க.''

''இந்த வீட்ல, எத்தனை மாசமா வேலை பார்க்கறீங்க?'' லெமன் ஜூஸ் குடித்தபடி கேட்டாள், மாலதி.

''பத்து வருஷமா!''

''பத்து வருஷமா, ஒரே வீடா... எவ்வளவு சம்பளம் குடுக்கறாங்க அக்கா?''

''சம்பளம்ன்னு பெருசா ஒண்ணுமில்ல. எப்பயாவது, 500 - 1000 கையில் குடுப்பாங்க. பண்டிகை காலத்துல ஒரு சேலை, குழந்தைகளுக்கு டிரஸ், 'ஸ்கூல் பீஸ்' கட்ட பணம். மூணு வேளை சாப்பாடு. இவ்வளவும் குடுத்துட்டு, எப்பவும் கோபத்துல, மனச நோகடிப்பாங்க. அதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு,'' என்றாள், சாதனா.

''திட்டுறாங்களா... அப்ப இந்த வீடு வேண்டான்னு, வேற வீட்டு வேலைக்கு போக வேண்டியது தானே?'' என்றாள், மாலதி.

''அப்படி போக முடியாதும்மா, எனக்கு ஒரு குழந்தை இருக்கு,'' என்றாள், சாதனா.

''வெளி வேலையா, இல்ல உள் வேலையா?'' என்றாள், அப்பெண்.

''அப்படின்னா...''

''வீடு, வாசல் சுத்தம் பண்றதா... இல்ல சமையல் வேலையான்னு கேட்டேன்.''

''வீடு, வாசல் பெருக்கி, துடைச்சு சுத்தம் பண்ணுவேன். மூணு வேளையும் விதம் விதமா சமைக்கணும், பாத்திரம் கழுவணும், முதலாளி குழந்தைக்கு பாடம் சொல்லித் தரணும். வாஷிங் மிஷின் இருந்தாலும், கையிலதான் துவைப்பேன். இன்னும் நிறைய வேலை இருக்கு,'' என்றாள், சாதனா.

''அக்கா... நீங்க சரியான ஏமாளி,'' என்றாள்.

''உண்மைதாம்மா.''

''வாசல் பெருக்கி, தண்ணி தெளிச்சு கோலம் போட, ஒரு ஆள். துணி துவைச்சு, பாத்திரம் தேய்க்க தனி. சமையல் வேலைன்னா தனி ஆள், தனி சம்பளம். இப்படி எல்லா வேலையும் பிரிச்சு செஞ்சு தான் சம்பளம் வாங்குவோம். டியூசன் எடுக்க பெரிய அமவுண்டு ஆகும்.

''நீங்க ஒரு ஆளே இத்தனை வேலையும் செஞ்சு மாசம், 500 - 1000ன்னு சொல்றீங்க. பேசாமா நீங்க ஒரு டிபன் சென்டர் ஆரம்பீங்க. தள்ளு வண்டியில சின்ன டிபன் கடை போட்டு, உங்களுக்கு வேண்டிய பணத்தை நீங்களே சம்பாதிக்கலாமே.

''இந்த வீட்டுல வேலை செய்யிறதுக்கு நான் சொல்ற வேலை நல்லது. என்னை வேலைக்கு வரச்சொல்லிட்டு, சம்பளம் தராம ஏமாத்துனாங்கன்னா, நான் பொல்லாதவளா ஆயிடுவேன். ஆமா, உங்கள பெத்தவங்க, புருஷன் எங்க இருக்காங்க?'' என்றாள், மாலதி.

''எங்க அப்பா பெரிய குடிகாரன். அப்பன் குடியாலயே ஏழையான குடும்பம். அம்மா இருந்தும் இல்லாத மாதிரி தான். புருஷன பத்தி கேட்காத, மாலதி,'' என்றாள், சாதனா.

மாலதியின் போன், அழைத்தது.

''ஹலோ, சார் சொல்லுங்க... இங்க பாருங்க, அங்க வீட்ல ஆள் இல்லையாம். எங்க போய் சாவி வாங்கணும். அப்புறம், அந்த வீட்டு வேலைக்காரம்மாகிட்ட தான் இவ்வளவு நேரம் பேசிட்டிருந்தேன்.

''அவங்க முதலாளி, வீட்டு வேலை எல்லாம் வாங்கிக்கிட்டு, சம்பளம் சரியா குடுக்காம எப்பப் பாரு கோபப்படுறானாமே... அந்தம்மா சொல்லி அழுவுறாங்க. அவங்க இடத்துல நான் இருந்தா, அழுதுட்டு இருக்க மாட்டேன்.

''என்கிட்ட வீட்டு வேலை எல்லாத்தையும் வாங்கிட்டு, கோபத்தை காண்பிச்சான்னா, வேலையை விட்டு நின்னுடுவேன். ஏமாளி ஒருத்தி மாட்டுனா போதுமே, தலையில மொளகா அரைச்சிடுவீங்களே... போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுத்துடுவேன்.

''அப்புறம் வெளி வேலை, உள் வேலை எல்லாத்தையும் எனக்கு வசதியான நேரத்துல தான் வந்து செய்வேன். மூணு வேளை சமைச்சுப் போடுறவங்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத ஜென்மங்க. என் கண்டீஷன சொல்லிட்டேன், நான் நாளைக்கு வர்றேன். இன்னைக்கு வேலை செய்யிற மூடு இல்ல...'' என சொல்லி கிளம்பினாள், மாலதி.

இதை கேட்டதும், என்ன பதில் சொல்வது என்று யோசித்தான், இதுவரை மாலதியிடம் பேசிய ஷ்யாம்.

காலையில் வேலைக்கு வரும், 'டென்ஷனில்' நண்பன் வீட்டு சாவியை கொடுத்து, வேலைக்கு வரும் பெண்ணிடம் கொடுக்க சொல்ல மறந்திருந்தான்.

தன் கோபம், குடும்பத்தை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்பது, அப்போது தான் ஷ்யாமுக்கு புரிந்தது.
சுதா ராணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X