ஹிந்திக்கு செல்லும் சிவகார்த்திகேயன்!
ரவிக்குமார் இயக்கத்தில் தான் நடித்துள்ள, அயலான் படம் மூலம் ஹிந்தியில் கால் பதிக்கிறார், சிவகார்த்திகேயன். 'சயின்ஸ் பிக் ஷன்' கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில், வேற்று கிரகவாசியான, ஏலியன் இடம்பெறுவதால், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கிறது. அதனால், இந்த படத்தை, ஹிந்தியில், அமீர்கானின் பட நிறுவனம் மூலம் வெளியிட, அவரை சந்தித்துள்ளார், சிவகார்த்திகேயன். அப்போது, அயலான் படத்தை ஹிந்தியில், 'டப்' செய்து வெளியிடுவதற்கு அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.'அமீர்கானே, என் படத்தை ஹிந்தியில் வெளியிடுவதால், பெரிய அளவில் அங்குள்ள ரசிகர்களின் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்தடுத்து நான் நடிக்கும் படங்களையும் ஹிந்தியில், 'டப்' செய்து வெளியிட திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், சிவகார்த்திகேயன்.
— சினிமா பொன்னையா
சைஸ், 'ஜீரோ'வாக மாறிய, மாளவிகா மோகனன்!
தற்போது, பா.ரஞ்சித் இயக்கும், தங்கலான் படத்தில் நடித்து வரும், மாளவிகா மோகனன், இந்த படத்திற்காக, சிலம்பம் பயிற்சி எடுத்து, நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக தன் உடல் எடையை குறைத்து, ஒல்லியாக, சைஸ், 'ஜீரோ'வுக்கு, மாறி இருக்கிறார்.
'இந்த படத்திற்காக, தீவிர பிட்னசில் நடிப்பதற்கு காரணம், இது ஒரு மாறுபட்ட கதாபாத்திரம். இதற்கு முந்தைய படங்களில் சற்று கிளுகிளுப்பாக நடித்த போதும், இந்த படத்தின் கதாபாத்திரமோ உடலை வருத்தி நடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
'அதன் காரணமாகவே, பிட்னசுக்கு மாறி, நடித்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு ஒரு அதிரடியான, 'ஆக் ஷன்' காட்சி இருக்கிறது...' என்ற தகவல் வெளியிட்டிருக்கிறார்.
— எலீசா
இளசுகளை திணறடிக்கும் இவானா!
லவ் டுடே படத்தில் நடித்து, இளவட்ட ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கும், இவானா, தற்போது, புதிய படங்களில் வேக வேகமாக ஒப்பந்தமாகி வருகிறார். இப்படி படங்கள் அவருக்கு அதிகரிப்பதை அடுத்து, அவரது ஆடை குறைந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக, இயக்குனர்கள், தன்னிடம் கதை சொல்லும்போதே, 'நான் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளிலும், என் ஆடைகள், ரசிகர்களை திணறடிக்க வேண்டும். அவர்களை திக்கு முக்காட வைக்கக்கூடிய, 'காஸ்ட்யூம்'களில் என்னை காண்பிக்க வேண்டும்
'அது மட்டுமின்றி, பாடல் காட்சிகளில், கவர்ச்சி நடிகையரையே அலற விடும் அளவுக்கு அதிரடியான, 'கெட் - அப்'பில் என்னை நடிக்க வையுங்கள்...' என்றும் கேட்டுள்ளார், இவானா.
மேலும், படப்பிடிப்பு தளங்களில் தன்னை முற்றுகையிடும் ரசிகர்களை தேடி தேடிச் சென்று, 'செல்பி' எடுக்க, 'போஸ்' கொடுத்து, அவர்களின் ஆதரவையும் பெருக்கி வருகிறார்.
எலீசா
துப்பாக்கியை கையில் எடுத்த, வடிவேலு!
தற்போது, வடிவேலு நடித்துள்ள, மாமன்னன் படத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மாறுபட்ட குணசித்ர வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்டரில், அவர் கையில் துப்பாக்கியுடன் தோன்றும் காட்சி வெளியானதை அடுத்து, வடிவேலுவின் கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.
இது குறித்து அவர் கூறுகையில், 'மாமன்னன் படம், என் கேரியரில் இன்னொரு பரிமாணம். இதுவரை பார்க்காத வடிவேலுவை, இந்த படத்தில் பார்க்கப் போகிறீர்கள். காமெடியன் வடிவேலால் இதுபோன்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக, களம் கண்டுள்ளேன்.
'அடுத்து, வில்லன் வேடங்களில் களமிறங்குவதற்கும் திட்டமிட்டுள்ளேன்...' என்று சொல்லி, கோலிவுட், 'ஆக் ஷன்' பட இயக்குனர்களின் கவனத்தை, தன் பக்கம் திருப்பி இருக்கிறார், வடிவேலு.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
ஏற்கனவே, 'சூப்பர் ஹிட்' ஆன படங்களை காப்பியடித்து, தன் படங்களை தொடர்ந்து இயக்கி வரும், தெறி இயக்குனர், தற்போது இயக்கி வரும் படத்தையும், கேப்டன் நடிகரின் ஒரு, 'ஹிட்' படத்தை தழுவி எடுத்து வருவதாக, சர்ச்சைகள் எழுந்தன.
அந்த பரபரப்பு ஓய்ந்துவிட்ட நிலையில், தற்போது, இயக்குனர் இமயமும், உலக நடிகரும் இணைந்து நடித்த, ஒரு படத்தை தழுவி, அந்த பாலிவுட் படத்தை அவர் இயக்கி வருவதாக, கோலிவுட்டில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இதனால், கொந்தளித்துள்ள, கிராமத்து இயக்குனர், விரைவில் மேற்படி இயக்குனரை அழைத்து, விசாரணை நடத்த போவதாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சினி துளிகள்!
* தனி ஒருவன் படத்தை அடுத்து, ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ள, இறைவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்டப் பணி நடைபெற்று வருகிறது.
* தெலுங்கில், நானிக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் நடித்த வெளியான, தசரா படம், 100 கோடி வசூல் செய்துள்ளது.
* ஹிந்தியில், ஷாருக்கான நடிப்பில், அட்லி இயக்கி வரும், ஜவான் படம் செப்., 7ல் வெளியாகிறது.
அவ்ளோதான்!