மன்னரின் வருகைக்காக, அமைச்சர்கள், புலவர்கள் மற்றும் பண்டிதர்கள் காத்திருந்தனர். சற்று நேரத்தில், மன்னர் வந்து அரியணையில் அமர்ந்தார்.
அறிவாளிகளோடு விளையாடுவதில், மன்னருக்கு விருப்பம் அதிகம்.
தலைமை பண்டிதரிடம், 'நான் இப்போது நான்கு பேரை பற்றி சொல்வேன். அவர்களை நான் பார்க்க வேண்டும். நாளை காலை, இதே வேளையில், நீங்கள் அந்த நான்கு பேரையும் என் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். முடியுமா உங்களால்?' என்றார், மன்னர்.
'சொல்லுங்கள் மன்னா, முயன்று பார்க்கிறேன்...' என்றார், பண்டிதர்.
'நான் சொல்லப் போகிற முதல் ஆள், அவன் இங்கேயும் ஆனந்தமாக இருப்பவன், அங்கேயும் ஆனந்தமாக இருப்பவன்; இங்கே வருந்துபவன், அங்கேயும் வருந்துபவன்... இவன், இரண்டாவது ஆள்.
'மூன்றாவது ஆள் எப்படியென்றால், அவன் இங்கே மகிழ்ச்சியாக இருப்பவன், அங்கே வருந்துபவன்; நான்காவது ஆள், இங்கே வருந்துபவன், அங்கே மகிழ்ச்சியாக இருப்பவன்.
'இந்த நான்கு பேரையும் பார்க்க வேண்டும். நாளைக்கு இவர்களை அழைத்து வந்து, என் முன் நிறுத்த வேண்டும்...' என்றார், மன்னர்.
'யார் அந்த நான்கு பேர்...' என்று யோசித்த பண்டிதருக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக வீட்டுக்கு வந்தார்.
அப்பாவின் முகத்தில் கவலையும், குழப்பமும் குடி கொண்டிருப்பதை புரிந்து கொண்டாள், பண்டிதரின் மகள். அவள் கொஞ்சம் புத்திசாலிப் பெண்.
'என்னப்பா கவலை?' என்றாள், மகள்.
விபரத்தை சொன்னார், பண்டிதர்.
'அப்பா, கவலையை விடுங்க. உங்க பிரச்னையை நான் தீர்த்து வைக்கிறேன். அந்த நான்கு பேர் யார் என்பது எனக்கு தெரியும். இங்கே பக்கத்துல ஓர் ஆசிரமம் இருக்கு. அங்கே, ஒரு துறவி இருக்கார். அவர் தான் முதல் நபர். அவர் இங்கேயும் மகிழ்ச்சியாக இருப்பவர். அங்கேயும் மகிழ்ச்சியாக இருப்பவர்...' என்றாள்.
'சரி...'
'அதோ எதிரில் ஒரு பிச்சைக்காரன் நின்னுக்கிட்டிருக்கார் பாருங்க. அவர் தான் இரண்டாம் நபர். அவர் இங்கேயும் வருந்துகிறார், அங்கேயும் வருந்துவார்...' என்றாள்.
'அதுவும் சரிதான்...' என்றார்.
'நம் வீட்டுக்கு எதிரில் ஒரு பங்களா இருக்கு பாருங்க. அங்கே ஒரு செல்வந்தர் இருக்கார். அவருக்கு ரொம்ப மோசமான குணம். அவர் இங்கே மகிழ்ச்சியாய் இருப்பவர். அங்கே வருத்தப்படக் கூடியவர். இவர்தான் மூன்றாவது ஆள்...' என்றாள்.
'அப்புறம்?'
'நான்காவது ஆள் யார் தெரியுமா, அவர் ஒரு முனிவர். காட்டில் கடும் தவம் செய்து வருகிறார். கடுமையான தவம், உடம்பெல்லாம் இளைச்சு போச்சு. அவர் இங்கே வருந்துகிறார். அங்கே, மகிழ்ச்சியாக இருப்பார்...' என்றாள்.
மகளின் விளக்கம், பண்டிதரின் மனசுக்குள் வெளிச்சத்தை ஏற்படுத்தியது.
விரைந்து செயல்பட்டு, அந்த நான்கு பேரையும் அழைத்து போய், மன்னர் முன் நிறுத்தினார், பண்டிதர்.
மன்னருக்கு மிகுந்த மகிழ்ச்சி, மன நிறைவு. பண்டிதரை பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளும் உண்மை என்னவென்றால், பூமியில் மகிழ்ச்சியாக இருக்க பொருள் வேண்டும். விண்ணில் மகிழ்ச்சியாக இருக்க, அருள் வேண்டும்.
பி.என்.பி.,