எஸ்.ராஜவேலு எழுதிய, 'முயற்சி எனும் அரிய பொக்கிஷம்' நுாலிலிருந்து:
ஒருமுறை, தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்தார், அமெரிக்க முன்னாள் அதிபர், ஆபிரகாம் லிங்கன்.
அப்போது, அவருக்கு முன்பு ஒருமுறை உதவிய, 70 வயது மூதாட்டி ஒருவர், தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தன் மகனை போலீசார் அழைத்து போயிருப்பதாகவும், உடனே வந்து அவனை காப்பாற்ற வேண்டுமென்றும், கேட்டுக் கொண்டார்.
உடனே புறப்பட ஆயத்தமானார், ஆபிரகாம் லிங்கன்.
'இன்னும் சில மணி நேரத்தில், வேலைகளை முடிக்காவிட்டால், நீங்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை வரும். எனவே, இப்போது போக வேண்டாம்...' என்று கூறினர், அவருடைய நண்பர்கள்.
'ஜனாதிபதி ஆகவேண்டுமானால், அடுத்த தேர்தலில் நிற்கலாம். ஆனால், அந்த மூதாட்டிக்கு நான் இப்போது உதவி செய்யவில்லை என்றால், எப்போதுமே முடியாதல்லவா...' என்று கூறி, கிளம்பினார்.
மிகவும் பிரபலமானது, பம்பாய், ரிட்ஸ் ஹோட்டல். ஒருமுறை அந்த ஹோட்டலுக்கு வந்த வள்ளல், அழகப்ப செட்டியார், 'ஓர் அறை வேண்டும்...' என்று, வரவேற்பறையில் இருந்தவரிடம் கேட்டார்.
வரவேற்பறையில் அப்போது இருந்தவர், அந்த ஹோட்டலின் அதிபர்.
மிகவும் எளிய தோற்றத்துடன், ஆடம்பரமின்றி காட்சி தந்த, அழகப்ப செட்டியாரை ஏற இறங்க பார்த்தார்.
இந்த சாமானிய மனிதர், அதிக பணம் செலவு செய்து ஹோட்டலில் தங்கக் கூடியவரல்ல என்று தீர்மானித்து, 'அறை ஏதும் காலி இல்லை...' என்றார், ஹோட்டல் அதிபர்.
பல அறைகள் காலியாக இருப்பது, அழகப்ப செட்டியாருக்கு தெரிந்தது. அத்துடன், ஹோட்டல் அதிபரின் மனப்போக்கும் விளங்கியது.
'இந்த ஹோட்டலில் எத்தனை அறைகள் உள்ளன...' என்று கேட்டார், அழகப்ப செட்டியார்.
அழகப்ப செட்டியாரை அலட்சியமாக நோக்கி, ஏளனமாக சிரித்த ஹோட்டல் அதிபர், 'நீர் இந்த ஹோட்டலை விலைக்கு வாங்கப் போகிறீரா...' என்று கேட்டார்.
'ஆமாம், விலைக்குத்தான் வாங்கப் போகிறேன். என்ன விலை...' என கேட்டார், செட்டியார்.
இதைக் கேட்டு திகைத்துப் போன ஹோட்டல் அதிபர், ஒரு பெருந்தொகையை ஹோட்டலின் விலையாக சொன்னார்.
சற்றும் தாமதிக்காமல், தம் கைப்பையை திறந்து, 'செக்' புத்தகத்தை எடுத்து, ஹோட்டல் அதிபர் சொன்ன தொகையை, 'செக்'கில் எழுதி, கையெழுத்து போட்டுக் கொடுத்தார், அழகப்ப செட்டியார்.
ஆம்... பம்பாய், ரிட்ஸ் ஹோட்டலை உண்மையிலேயே விலைக்கு வாங்கி விட்டார், டாக்டர் அழகப்ப செட்டியார்.
சென்னை ஆவடியில், காங்கிரஸ் கட்சி மாநாடு நடந்த சமயம். மாநாட்டிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்தனர். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரும்போது, பாலத்தின் அருகே ஒரு காட்சியை கண்டார், காமராஜர்.
மூன்று சக்கர பார வண்டியை தள்ள முடியாமல், இருவர் மிகவும் சிரமப்பட்டு தள்ளிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் காரிலிருந்து இறங்கினார், காமராஜர். தானும் சேர்ந்து அந்த இருவருடன் தள்ளு வண்டியை தன் முழு பலத்துடன் தள்ளினார். பார வண்டி எளிதாக முன்னேறியது.
இச்சம்பவம் நடந்த காலத்தில், தமிழக முதல்வராக இருந்தார், காமராஜர். அவருடைய செயலில் பெருமையோ, ஆணவமோ எதுவுமில்லை. பிறர் கஷ்டத்தை கண்டு இரக்கம் கொண்டு, உடன் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே நிறைந்திருந்தது.
அதேபோல், ஒருமுறை வெளியூர் போய் திரும்பும்போது, காரிலேயே துாங்கிக் கொண்டு வந்தார், காமராஜர். கார், சென்னை, சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகே வந்தபோது, சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த வாகனங்களை நெறிப்படுத்த முடியாமல் திணறினார், போலீஸ்காரர்.
தனி ஆளாக நின்று திணறிக் கொண்டிருப்பதை கண்டதும், காரை விட்டு இறங்கி, அந்த போலீசுடன் சேர்ந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவினார், காமராஜர். அத்துடன், சைதை போலீஸ் நிலையம் சென்று, நெரிசலான அந்த இடத்தில், கூடுதலாக ஒரு போலீஸ்காரரை நியமிக்கவும் ஏற்பாடு செய்தார்.
- நடுத்தெரு நாராயணன்