அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 38 வயது பெண். இல்லத்தரசி. கணவர் வயது: 42, மத்திய அரசு பணியில் உள்ளார். எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர். என் பெற்றோரை விட, என் மீது மிகவும் அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பார், கணவர். மாமனார் - மாமியார் இல்லை.
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த வாழ்வில், தோழி என்ற பெயரில், விதி விளையாட ஆரம்பித்துள்ளது.
எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டிற்கு புதிதாய் குடி வந்தாள், 35 வயது பெண் ஒருவள். வயதான தாய் - தந்தையர் உள்ளனர். திருமணமாகாத ஏக்கம், அவளது பேச்சில் எதிரொலிக்கும். அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டி, அவளுக்காக நானே வரன் பார்க்க ஆரம்பித்தேன்.
இதற்கிடையில், என் குடும்பத்தினருடன் நெருங்கி பழக ஆரம்பித்தாள். அவளது சுறுசுறுப்பும், நகைச்சுவையாக பேசும் குணமும், யாரிடமும் பேசாத என் கணவரையும் அவளிடம் பேச வைத்தது. இதை அவளிடமும் கூறி வியந்தேன்.
வெறும் நட்பு மட்டுமல்லாமல், குடும்ப விஷயம் அனைத்தையும் அவளிடம் பகிரும் அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவளாக மாறினாள்.
அவள் அலுவலகம் கிளம்பினால், 'வழியில் இவளை இறக்கி விடுங்களேன்...' என்று கூறி, என் கணவரின் பைக்கில் அனுப்பி வைப்பேன்.
இது எவ்வளவு தவறு என்று இப்போது தான் புரிகிறது.
இப்போதெல்லாம், என்னிடம் பேசுவதை விட, அவளிடம் தான் அதிக நேரம் பேசுகிறார், கணவர். அவர் வீட்டில் இருக்கும் நேரமாக பார்த்து வந்து, நான் இருக்கும்போதே, என்னையும் மீறி, அவருக்கு சாப்பாடு பரிமாறுவது, என் குழந்தைக்கு, 'கிப்ட்' வாங்கி கொடுப்பது, பள்ளியில் நடந்த விஷயங்களை விசாரிப்பது என்று அத்துமீறுகிறாள்.
இதை முளையிலேயே கிள்ளி எறிய மனம் விரும்புகிறது. இது சம்பந்தமாக, கணவரிடம் மனம் விட்டு பேச நினைக்கிறேன். ஆனால், நான் நினைப்பதற்கு மாறாக, என் சந்தேகத்தால், எங்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விடுமோ என்றும் பயப்படுகிறேன்.
நாங்கள் இருப்பது சொந்த வீடு என்பதால், வேறு வீட்டுக்கு செல்ல முடியாது. என் தோழியிடமும் வெளிப்படையாக பேச தயங்குகிறேன். ஒருவேளை, அவள் விகல்பமில்லாமல் பழகுகிறாளோ என்ற குழப்பம் வேறு.
விஷயம் கைமீறவில்லை என்றாலும், அதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, தத்தளிக்கவும் மனம் விரும்பவில்லை.
நான் என்ன செய்யட்டும் அம்மா.
— இப்படிக்கு,
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
அன்பு மகளுக்கு —
உன் தோழி, நகைச்சுவையாக பேசுவதும், குடும்பத்தினருடன் நெருங்கி பழகுவதும், உன் கணவனை கைப்பற்றத்தான்.
தோழியிடம் வெளிப்படையாக பேச தயங்கினால், கரடிக்குட்டி உன் கையிலுள்ள தேன் அடையை பறித்து, ஓடி விடும்.
தோழி விகல்பம் இல்லாமல் பழகுகிறாளோ என, தப்புக்கணக்கு போடாதே. விகல்பம் டன் கணக்கில் இருப்பது, உன் கடிதம் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
இந்த விஷயத்தில், கணவன் மீது துளி தவறில்லை. தினம் இட்லி அல்லது உப்புமா சாப்பிடும் அவன் கண்களில், சோளாப்பூரி காட்டி விளையாடினால், பாவம் என்ன செய்வான்? தோழியிடம் நேரடியாக பேச சங்கோஜமாக இருந்தால், மொபைலில் அவளுடன் பேசு.
'அம்மா தாயே, உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது, உன் பெற்றோர்; -நானல்ல. உன்னை தொடர்ந்து வீட்டுக்குள் அனுமதிப்பது உனக்கும் நல்லதல்ல, எங்களுக்கும் நல்லதல்ல.
'நீ, நான், என் கணவன் நேர்மையாக இருக்கலாம். ஆனால், அவதுாறு பேசும் சமுதாயத்தின் வாயை யார் அடைப்பது? நான், உன்னை சந்தேகப்படுகிறேனோ என கேட்காதே. வரும் முன் காப்பது நல்லது.
'தடுப்பூசியாய் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன். இனி, என் வீட்டுக்கு வராதே. என் கணவனை வெளியில் கண்டால், முன் பின் தெரியாத அந்நியனை பார்ப்பது போல, விலகி விடு.
'நாளை உனக்கு திருமணமானால் அந்நிய பெண்களை உன் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டாய். நீயும், நானும் பேசிக் கொண்டதை யாரிடமும் குறிப்பாக என் கணவனிடம் கூறி விடாதே.
'உனக்கு சிறப்பான திருமண வாழ்க்கை அமைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பாதுகாப்பான துாரத்தில் நின்று, இருவரும் மானசீகமாக கைகுலுக்கி கொள்வோம். பெஸ்ட் ஆப் லக் மை டியர் தோழி!'
இப்படிக் கூறி, பிரியாவிடை பெறு.
குழப்ப மேகங்கள் விலகி, உன் நீலவானம் பிரகாசிக்கும் மகளே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.