மாம்பழங்கள் ருசியானவை என்பது எல்லாருக்கும் தெரியும். மாம்பழங்களை பற்றிய ருசிகரமான தகவல்களும் ஏராளமாக இருக்கின்றன. அவை:
* இனிப்பு சுவையுடன் பல்வேறு சத்துகளும் மாம்பழத்தில் அடக்கியுள்ளன. ஒவ்வொரு மாம்பழத்திலும், தண்ணீர் - 81 சதவீதம், கொழுப்பு - 0.4 சதவீதம், புரதம் - 0.6 சதவீதம், நார்ச்சத்து - 0.8 சதவீதம், கார்போஹைட்ரேட் - 17 சதவீதம் உள்ளன.
நமக்குத் தேவையான முக்கிய தாதுப்பொருட்களான பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், கந்தகம் ஆகியவையும் மாம்பழத்தில் நிறைந்துள்ளன
* மாம்பழம் என்றால், மல்கோவா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், சிந்துாரா என்று, சில வகைகள் தான் நமக்குத் தெரியும். ஆனால், மாம்பழத்தில், 1,000 ரகங்கள் இருக்கின்றன. மாம்பழத்தில் பல்வேறு ரகங்களை உருவாக்கும் விவசாய முறைகளை அறிமுகப் படுத்தியவர்கள், போர்த்துக்கீசியர்கள்
* உலக மாம்பழ உற்பத்தியில், 42.06 சதவீத பங்கும், உலகில் மாம்பழம் விளையும் பரப்பளவில் சுமார், 50 சதவீதமும், இந்தியாவில் தான் இருக்கிறது. நம் நாட்டிலேயே அதிகளவில் மாம்பழத்தை விளைவிப்பது, ஆந்திரப் பிரதேசம்
* மாம்பழத்தின் தாயகம் இந்தியா தான். ஆனால், இன்று உலகில், 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது. இந்தியா தவிர, பிரேசில், சீனா, எகிப்து, இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் அதிகளவில் மாம்பழம் விளைகிறது
* நம் தேசியப் பழம், மாம்பழம். பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் தேசியப் பழமும் மாம்பழம்தான். வங்காளதேசத்தின் தேசிய மரம், மா மரம்
* மாம்பழத்தை முதன் முதலில் இந்தியாவுக்கு வெளியே கொண்டு சென்று அறிமுகப்படுத்தியவர், சீன யாத்ரீகர், யுவான் சுவாங். 16-ம் நுாற்றாண்டில், இந்தியாவிலிருந்து மாம்பழத்தை கிழக்கு, மேற்கு ஆப்ரிக்காவுக்குக் கொண்டு சென்றனர், பாரசீக வியாபாரிகள்.
19-ம் நுாற்றாண்டில், மெக்சிகோவுக்கும், அமெரிக்காவுக்கும் மாம்பழம் சென்றது
* முகலாயப் பேரரசர் அக்பர், மாம்பழப் பிரியர். இவர், கி.பி., 1590-ல் தன், 'அயினி அக்பரி' நுாலில் மாம்பழங்களின் தரம், சுவை குறித்து விரிவாக எழுதியுள்ளார். அக்பருக்குச் சொந்தமாக, ஒரு லட்சம் மா மரங்கள் கொண்ட பெருந்தோப்பு இருந்ததாம்
* உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ள, மாலிகாபாத் கிராமம் தான், இந்தியாவின் மாம்பழத் தலைநகர் எனப்படுகிறது. இங்கு சுமார், 20 கி.மீ., சுற்றளவில், 700 வகை மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் மாம்பழ வியாபாரம், பல நுாறு கோடி ரூபாய்.
* வட மாநிலத்தில், மாம்பழ ரகங்களிலேயே சிறந்ததாக கூறுவது, 'வதசேரி' யைத்தான். இதன் பூர்வீகம், லக்னோவிலிருந்து, 25 கி.மீ., தொலைவில் உள்ள தசேரி கிராமம்.
உ.பி.,யில், மாலிகாபாத்தில் வசிக்கும் பெரியவர், கலீமுல்லா கானைத்தான், 'மாம்பழ மகாராஜா' என்கின்றனர். இவர், மாம்பழம் தொடர்பான அத்தனை விஷயங்களையும், நுணுக்கங்களையும் அறிந்தவர்.
கலீமுல்லா கானின் அப்துல்லா தோட்டம், ஒரு பெரிய மாம்பழ சாம்ராஜ்ஜியம். குறிப்பாக இங்குள்ள, 90 வயதான ஒரு மா மரத்தில், 300 வெவ்வேறு வகை மாம்பழங்களை காய்க்கச் செய்துள்ளார்.
லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இந்த மா மரம் இடம்பெற்றுள்ளது.
மாலிகாபாத்தில், ஒவ்வொரு சீசனிலும், ஒவ்வொரு மாம்பழ விவசாயியும், 15 ஆயிரம் பெட்டி மாம்பழங்களை உற்பத்தி செய்கிறார். மாலிகாபாத்திலிருந்து இந்தியா முழுமைக்கும், வெளிநாடுகளுக்கும் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீசன் போது, டில்லிக்கு மட்டும், 100 லாரி லோடு செல்கிறதாம்.
தொகுப்பு: அமுதா அசோக் ராஜா