ஆர்த்தியின் முகத்தில், எள்ளும் கொள்ளும் வெடித்தன.
''ஏங்க நான் ஒருத்தி கரடியாய்க் கத்திக்கிட்டு இருக்கேன். பதில் சொல்லாம கம்முன்னு இருக்கீங்க?''
''எனக்கு, கரடி பாஷைல்லாம் தெரியாதேம்மா.''
''போதும், உங்க மொக்க ஜோக். கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க. அடுத்த வாரம், என் பிறந்தநாள் வருது, வாங்கித் தரப்போறீங்களா இல்லையா?''
''ஓ... அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,'' என்று, அவள் கையைக் குலுக்கினான், ஆனந்தன்.
வெடுக்கென்று உதறி, ''இதுக்குக் குறைச்சலில்லை. சொல்லுங்க, கேரளா மாடல் ஜிமிக்கி வாங்கித் தரப்போறீங்களா, இல்லையா?''
''ஹ ஹா... நல்ல ஜோக். இங்க, கூடுவாஞ்சேரி மூக்குத்திக்கே வழியக் காணோமே செல்லம்.''
''போதும், செல்லமாவது, வெல்லமாவது... நீங்க மட்டும் இரண்டு நாள்ல வாங்கித் தரல, நான் எங்கம்மா வீட்டுக்குப் போயிடுவேன்.''
இதைக் கேட்டதும், கவுண்டமணியாகி விட்டான், ஆனந்தன்.
''ஆமா, நானும் பார்க்கிறேன்... எல்லா பொண்ணுங்களும், புருஷன்ட்ட சண்டைக்கு வந்தா, அம்மா வூட்டுக்கு போறேன், அம்மா வூட்டுக்கு போறேன்னு போர்க்கொடி பிடிக்கிறீங்க... ஏன், அப்பா வூட்டுக்குப் போறேன்னு சொல்லக் கூடாதா?''
''உங்களுக்கு, எல்லாமே விளையாட்டாப் போச்சு.''
அவனைப் பார்த்து முறைத்தபடியே, அடுக்களைக்குள் போக முனைந்தவள், ''ம்... எல்லாம் என் போதாத காலம். பேசாம அந்த, வள்ளியூர் மாப்பிளைக்கு கழுத்த நீட்டியிருக்கணும். யோக ஜாதகம், ராஜா மாதிரி இருப்பான், செல்வத்துல மிதப்பான்னு ஜோசியர் சொன்னாராம். என்ன பண்றது, அந்த ஆளுக்கு ஏழு பொருத்தம்தான் இருக்குன்னு, ஒன்பது பொருத்தம் இருக்கிற உங்கள, என் தலையில கட்டிட்டாங்க,'' என, மறக்காமல் அந்த, 'டயலாக்'கைச் சொன்னாள், ஆர்த்தி.
அதிர்ச்சி அடையவில்லை, ஆனந்தன். இதெல்லாம், பலமுறை கேட்ட வார்த்தைகள் தானே.
எப்போது சண்டை, ஊடல் வந்தாலும், இந்த, 'வள்ளியூர் மாப்பிள்ளை' மேற்கோளில் தான், சுபம் போடப்படும்.
இயல்பிலேயே மென்மையானவன், ஆனந்தன்; அதிகம் ஆசைப்படாதவன். உள்ளதைக் கொண்டு ஊராள வேண்டும். அனாவசியமாக எதற்கும் ஆசைப்படக் கூடாது. இயலாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அதே சமயம், மாற்றுக் கருத்து உள்ளவர்களிடமும் இயல்பாக இருப்பவன்.
பாளையங்கோட்டை சேவியர்ஸ் பள்ளியில் படித்து முடித்ததும், வேலைக்காக காத்திருந்து நேரத்தை வீணாக்காமல், சொந்தக் காலில் நிற்க ஆசைப்பட்டு, எலக்ட்ரிகல் படித்து, லைசென்ஸ் வாங்கி, எலெக்ட்ரீஷியனாகி விட்டான்.
திருமணம் ஆன புதிதில், ஆர்த்தியின் எண்ணங்களும், ஆசை, அபிலாஷைகளும் அவனுக்கு வியப்பளித்தாலும், அவளின் குணத்தை புரிந்து, சண்டைகளைத் தவிர்த்து விடுவான்.
ஆர்த்தி, அவன் மேல் உயிரையே வைத்திருப்பதும், ஒரு சின்ன துரும்பு அவன் மேல் பட்டாலும், துடித்துப் போவதும்... பேசுவாளே தவிர, நெஞ்சில் வீசுவதெல்லாம் பாசம் தான் என்பதையும் தெரிந்து கொண்டான்.
அது போதாதா ஒரு புருஷனுக்கு?
எல்லா பெண்களுக்கும் இருப்பது போல, நகை, பட்டுப் புடவை, வாகன வசதி இந்த வீட்டில் இல்லையென்று, அவனிடம் வருந்துவாள். அந்த பேச்சு வந்தாலே அவளுக்கு கோபம் வெடிக்கும். அந்த,'வள்ளியூர் மாப்பிள்ளை' தொப்பென்று, 'ஹீரோ' மாதிரி குதிப்பான் அல்லது வில்லன் மாதிரி சிரிப்பான்.
அப்போதும் கண்டுகொள்ள மாட்டான், ஆனந்தன். அவனுக்குத் தெரியும், வெறுப்பேற்றவே இப்படி பேசுவது.
'ஆமா, அந்த ஆளு பேர் என்ன?' என்பான்.
'பேர்லாம் தெரியாது. ஆளக் கூட பார்த்தது இல்ல...' என்பாள்.
'ஓஹோ, அப்படியானால் அந்த, 'வள்ளியூர் மாப்பிள்ளை' ஒரு கற்பனையாகக் கூட இருக்கலாமோ!' என, நினைப்பான்.
''சார்...'' என்ற குரல் கேட்க பார்த்தான், ஆனந்தன்; இரண்டு தெரு தள்ளி இருக்கும் வந்தனா நின்றிருந்தாள்.
துணி துவைத்துக் கொண்டிருந்தாள், ஆர்த்தி.
எட்டிப்பார்த்து, ''அக்கா பாவம், பாருங்க, முடியாம துணி துவைக்கிறாங்க,'' என்றாள், வந்தனா.
உஷாரானான், ஆனந்தன்.
இவள் தான் ஆர்த்தி மனதை அவ்வப்போது, ஆசை என்ற 'ஸ்ட்ரா' போட்டு கலக்குபவள்.
''துவைக்க முடிகிற வரை துவைக்கட்டுமே. பிறகு, வாஷிங் மிஷின் வாங்கிட்டா போச்சு. என்ன விஷயமா வந்தீங்க?''
''வீட்ல திடீர்னு கரன்ட் போயிடுச்சு. நீங்க வந்து பார்த்தா நல்லா இருக்கும்,'' என்றாள்.
ஆர்த்தி துணி துவைப்பதைப் பார்த்துக் கொண்டே, சத்தம் கேட்டு அவள் வருவாள் என்று இன்னும் சத்தமாக பேசினாள்.
''ஓ... வந்து பார்க்கிறேன்,'' என,'டூல் கிட்'டை எடுத்து கிளம்பினான், ஆனந்தன்.
அந்த ஏரியாவில் நல்ல எலக்ட்ரீஷியன் என்று பேர் வாங்கியிருந்தான். அப்பார்ட்மென்ட்ஸ், சிறிய, பெரிய கம்பெனிகள் என்று, நிலையாக நல்ல வாடிக்கையாளர்கள் அவனுக்கு உண்டு.
ஆர்த்தியின் பிறந்தநாள். அவளுக்கு, 'கேக்' ரொம்பப் பிடிக்கும் என்பதால், பிளாக் பாரஸ்ட் கேக், அரை கிலோ வாங்கினான், ஆனந்தன்.
''சாரி ஆர்த்தி, அடுத்த வருஷம் நீ கேட்ட ஜிமிக்கி ஷ்யூர்,'' என்றவாறே, 'கேக்'கை அவளுக்கு ஊட்டினான்.
''போங்கங்க, எப்ப பாரு பஞ்சப் பாட்டு தான். இதே அந்த வள்ளியூராருக்கு வாழ்க்கைப் பட்டிருந்தா,'' என்று ஆரம்பித்தாலும், 'கேக்'கை லபக்குவதில், குறை வைக்கவில்லை.
அழைப்பு மணி ஒலிக்க, வந்தனா நின்றிருந்தாள். ஆனந்தன் ஒரு கணம் துணுக்குற்றாலும், அவளை வரவேற்றான்.
''ஹேப்பி பர்த் டே ஆர்த்தி...'' என, கை குலுக்கி, சின்ன, 'கிப்ட்'டைக் கொடுத்தாள்.
ஆனந்தனிடம், ''வந்தனாகிட்ட மட்டும் சொன்னேங்க,'' என்றாள், ஆர்த்தி.
''ஹாய் ஆர்த்தி... பிறந்தநாளுக்கு, அவர், தங்க ஜிமிக்கி வாங்கி தர்றதா சொன்னே... எண்ணெய் இறங்கிய பழைய கம்மலைத்தான் போட்டிருக்கே,'' என்றாள், வந்தனா.
ஆனந்தன் எதுவும் சொல்வானோ என, ஆர்த்தியின் முகம் கலவரமானது. வழக்கமான புன்னகையுடன் சென்று விட்டான், ஆனந்தன்.
அவ்வப்போது எலக்ட்ரிகல் வேலைக்காகப் போகும், அவந்திகாவிடம் டைப், ஷார்ட்ஹேண்ட் தெரிந்த ஆர்த்தியை, வேலைக்கு சேர்த்து விட்டால் என்ன என, தோன்றியது, ஆனந்தனுக்கு.
'வீட்டிலேயே நடத்தும், பாஷன் டிசைனிங் கம்பெனிக்கு, உதவிக்கு நல்ல பெண் வேண்டும்...' என்று, ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டிருந்தாள், அவந்திகா.
இந்த யோசனையை சொன்ன உடனேயே, ஏகக் குஷியாகி, வேலைக்கு சேர்ந்தாள், ஆர்த்தி.
சில மாதங்களுக்கு பின், ஆனந்தனிடம், ''நான் வேலைக்குப் போகலங்க,'' என, தயங்கி தயங்கி கூறினாள்.
''ஏன் என்னாச்சு, அவந்திகா ஏதாவது சொன்னாளா?''
''இல்லங்க, வாடகை வீடு பக்கத்துலயே, வீட்டு சொந்தக்காரரும் இருந்தா, பிள்ளை பூச்சியை மடியில கட்டின கதையாய் லொட்டு லொசுக்குன்னு ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க... அத மாதிரி, அவந்திகா ஆபீசும், வீடும் ஒண்ணு தான். வீட்ல எப்ப பாரு சண்டை, சந்தேகம், அமைதியே இல்லை. அது, எனக்கு எரிச்சலா இருக்குங்க.''
''புருஷன் பொண்டாட்டின்னா, சண்டை வரத்தான் செய்யும்.''
''அதுக்காக இப்படியா, என் முன்னாடியே அடிதடி. வேணாம்ங்க, நான் போகலை,'' என்றாள்.
''என்ன உளர்ற, மாதம் பத்தாயிரம் சம்பளம்.''
''மனுஷனுக்கு பணம் வேண்டியது தான். ஆனா, அதனால மன நிம்மதி போச்சுன்னா, அந்தப் பணம் எதுக்குங்க?''
அப்போது, அவன் மொபைல் போன் ஒலித்தது.
''அண்ணா... கொஞ்சம் வீட்டுக்கு வர்றீங்களா அவசரம்,'' என்றாள், அவந்திகா.
''சொல்லுங்க அவந்திகா... 'ப்யூஸ்' போயிடுச்சா?''
''இல்லண்ணா, கேசவன் விஷம் குடிச்சு, செயின்ட் தாமஸ் ஆஸ்பிடல் ஐ.சி.யூ.,வில் உயிருக்கு போராடிட்டு இருக்கார். பயமாயிருக்கு, வாங்க அண்ணா.''
''ஓ மைகாட்... வரேன், தைரியமா இருங்க.''
ஆர்த்தியிடம் விபரம் சொல்லி, அவசரமாக கிளம்பினான், ஆனந்தன்.
''நான் சொன்னேல்ல ஒரே பிரச்னை... 'ஒய்யாரக் கொண்டடையாம் தாழம்பூவாம்... உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்...'' என, முணுமுணுத்தவாறே உள்ளே சென்றாள், ஆர்த்தி.
கேசவனைக் காப்பாற்றி விட்டனர்.
'ஆன் லைன்' ரம்மியில் பணத்தை தொலைத்து, அவந்திகாவின் சொத்திலும் கை வைக்க, அவள் மறுத்துள்ளாள். பிரச்னையாகி, தற்கொலைக்கு முடிவெடுத்து, விஷம் குடித்ததாக பதிவு செய்திருந்தது, போலீஸ்.
அந்த சம்பவத்திற்குப் பின் அடியோடு மாறி விட்டாள், ஆர்த்தி. இப்போதெல்லாம் ஆனந்தனுடன் சண்டை போடுவதில்லை. வேண்டாத ஆசை, வீணான செலவுகளை தவிர்த்தாலே, குறைந்த வருமானமாக இருந்தாலும், குறைவில்லாத நிம்மதி வீட்டில் இருக்கும் என்பதை புரிந்து கொண்டாள்.
ஒருநாள், ஜாலி மூடில் இருக்கும்போது, அவளிடம் சும்மா வம்பிழுக்க ஆசைப்பட்டான், ஆனந்தன்.
''என்ன, மஹாராணி இப்பல்லாம் எங்கிட்ட சண்டைக்கு வர்றதில்லை... அந்த, 'சூப்பர் ஹீரோ வள்ளியூர் மாப்பிள்ளையை'யும் காணோம்,'' என்றான்.
''ஏங்க இப்ப நல்லாத்தானே போயிட்டு இருக்கு. ஏன் வம்புக்கு வர்றீங்க. கோபத்துல அப்படி இப்படி பேசறது தான். நான் தான், 'சாரி' கேட்டுட்டேனே. ஆனாலும், அந்த வள்ளியூர் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டிருந்தா?''
''சரி சரி... ஆரம்பிச்சிராதே தாயே. இதைப்பாரு,'' என்று, பையில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து, அவளிடம் காண்பித்தான்.
ஆர்த்தியின் முகம் பேயறைந்தது போலாயிற்று.
''என்னங்க, இது என் பழைய ஜாதகம். உங்க கையில எப்படி வந்துச்சு?'' கலவரமாய் கேட்டாள்.
''அன்றைக்கு ஒருநாள், ஒருத்தர் வீட்டுக்கு எலக்ட்ரிக் வேலைக்கு போனேன். பரணில் வேலை செய்த போது, ஒரு பையில் ஜாதகங்கள் கிடந்தன. அந்த ஆளுக்கு பெண் பார்க்கும் சமயம், நிறைய ஜாதகங்கள் வந்திருக்கும் போல...
''பொருந்தாத ஜாதகங்களைத் திருப்பி அனுப்பாம வைச்சிருக்கான். அதுல உன் படம் ஒட்டின இந்த ஜாதகம் இருந்தது. படக்குன்னு லவட்டிக்கிட்டு வந்துட்டேன்.''
''அச்சச்சோ... யாருங்க அவன்?''
''ஆன் லைன் ரம்மியில, பணத்தை இழந்து, விஷம் குடிச்சு சாகப் பார்த்தானே, அவந்திகா புருஷன், கேசவன். அவன் சொந்த ஊர், வள்ளியூராம். நீ அடிக்கடி பெருமை அடிப்பியே, வள்ளியூர் மாப்பிள்ளை அவனே தான்.''
அதிர்ச்சியுடன், ''தெய்வமே...'' என, ஆனந்தனை இறுக்கி கட்டிக்கொண்டாள், ஆர்த்தி.
அவனை இமைக்காமல் பார்த்த, அந்தப் பார்வையில் அன்பின் வெளிச்சம் தெரிந்தது!
கே.ஜி. ஜவஹர்