நெல் நடவு செய்யாமல் நேரடியாகவே விதைப்பு செய்வதால் பயிரின் நாற்றங்கால் காலத்தை குறைக்க முடியும். இதற்கான தொழில்நுட்பங்கள் வந்து விட்டன.
நிலம் தயாரித்தல் முக்கியம்
கோடைபருவ நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற உழவு முக்கியமானது. களைகளை அழிப்பதற்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வைக்கவும் மண் கட்டிகளை உடைத்து விதைகள் நன்கு முளைப்பதற்கும் 4 அல்லது 5 முறை உழவேண்டும். இதனால் கூண்டுபுழுக்கள் பாதிப்படைந்து அந்துபூச்சிகள் உருவாகாமல் தடுக்கலாம். கடைசி உழவின் போது தொழு உரம் அல்லது மட்கிய எருவை ஒரு எக்டேருக்கு 12.5 டன் என்ற அளவில் இட வேண்டும். மேலும் 750 கிலோ தொழு உரத்துடன் 60 கிலோ சூப்பர் பாஸ்பேட் சேர்த்து அடி உரமாக இட வேண்டும். இதனால் பயிரின் முளைப்புதிறன் அதிகமாகும். வேர் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு பயிர் செழிப்பாக வளரும்.
கோடைபருவ நெல் சாகுபடிக்கு அனைத்து குறுகிய கால் நெல் ரகங்களையும் பயன்படுத்தலாம். புதிதாக வெளியிட்டுள்ள கோ 54 ரகம் 115 நாட்கள் வயதுடையது, எக்டேருக்கு 6350 கிலோ மகசூல் கிடைக்கும். புகையான், குலைநோய், இலையுறை கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்தன்மை உடையது. 'அமைலோஸ்' என்ற மாவுப்பொருள் குறைவாக இருப்பதால் சமைப்பதற்கு ஏற்றது.
ஏ.டி.டீ 55 ரக நெல் 115 நாட்கள் வயதுடையது. எக்டேருக்கு 5930 கிலோ கிடைக்கும். குலைநோய், இலையுறை அழுகல் மற்றும் இலைசுருட்டுப் புழுவிற்கு மிதமான எதிர்ப்புசக்தி கொண்டது.
விதைநேர்த்தி செய்தல்
ஒரு எக்டேருக்கு தேவையான 60 கிலோ விதையை 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். ஊறிய விதைகளை சாக்குப்பைகளில் கட்டி இருட்டறையில் 24 மணி நேரம் வரை, அதாவது முளைக்கும் வரை வைக்க வேண்டும். முளைத்த விதைகளை விதைப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கார்பென்டசிட் கலந்து விதைக்க வேண்டும். நேரடியாக விதைக்கும்போது மெல்லிய கண்ணாடி அளவிற்கு நிலத்தில் நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைத்த 14 முதல் 21 நாட்களில் அதிகமாக உள்ள பயிர்களை களைந்து தேவையான இடங்களில் நடவு செய்ய வேண்டும். சரியான எண்ணிக்கையில் பயிர்களை பராமரித்தால் மட்டுமே அதிகபட்ச உற்பத்தி திறனை பெற முடியும்.
ஊட்டசத்து மேலாண்மை
நடவுமுறைக்கு போன்றே நேரடி நெல்விதைப்புக்கும் உரம் தேவை. ஒரு எக்டேருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 50 கிலோ மணலுடன் சேர்த்து சீராக நிலத்தில் அடியுரமாக துாவி விட வேண்டும். ஒரு எக்டேருக்கு 100 கிலோ தழைசத்து, 50 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை நான்கு பகுதிகளாக பிரித்து விதைத்த 21வது நாளும், துார் பிடிக்கும் பருவம், பூங்கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இட வேண்டும். மணிச்சத்து முழுவதையும் அடியுரமாகவே தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் டி.ஏ.பி. என்ற அளவில் கலந்து இலைவழியாக 65 மற்றும் 80வது நாட்களில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இதனால் நெல்மணிகள் திரட்சியாக நல்ல எடையுடன் வரும்.
களை மேலாண்மை
நேரடி நெல்விதைப்பில் களை மேலாண்மை அவசியம். களை முளைப்பதற்கு முன்பே, ஒரு எக்டேருக்கு 750 கிராம் 'பிரிட்டிலாகுளோர்' களைக்கொல்லியை நெல் விதைத்த 8ம் நாளில் தெளிக்க வேண்டும். அதன் பிறகு 40வது நாளில் ஒருமுறை கையால் களை எடுக்க வேண்டும். விதைத்த முதல் வாரத்தில் மண் நனைய நீர் பாய்ச்சினால் போதும். பயிர் வளர வளர நீரின் ஆழத்தை 5 செ.மீ வரை அதிகரிக்கலாம்.
பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டுமெனில் பயிர் சுழற்சியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதனால் பூச்சிகள் பெருகுவதை தடுக்கலாம். வரப்பை சுத்தமாக பராமரிக்க வேண்டும். நோய் உருவாவதை தடுக்க கட்டாயம் பூஞ்சாணக்கொல்லிகளை கொண்டு விதைநேர்த்தி செய்தபின் விதைக்க வேண்டும்.
பவுர்ணமியன்று விளக்குப்பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும். இனக்கவர்ச்சிப்பொறிகள் ஏக்கருக்கு 5 வீதம் வைத்து தண்டு துளைப்பான், இலை சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
புகையான், இலைச்சுருட்டுபுழுக்கள் வழக்கமாகத் தாக்கும் பகுதிகளில் நாற்றுகளை நெருக்கமாக நடக்கூடாது. எட்டு அடிக்கு ஓர் பட்டம் விட்டு ஒவ்வொரு பட்டத்திற்கும் ஒரு அடி இடைவெளி விட வேண்டும்.
நெல்லின் இலை தண்டு போன்றவை வெளிறிய மஞ்சள் நிறமாக காணப்படும் போது 80 சதவிகித தானியங்கள் முற்றி காணப்படும். அறுவடை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பே நீர் கட்டுவதை நிறுத்த வேண்டும். அறுவடை செய்த பிறகு நெல் மணிகளை 3 அல்லது 4 முறை வெயிலில் காய வைத்து ஈரப்பதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். அதன்பின் சாக்குப்பைகளில் சேமிக்க வேண்டும்.
-மகேஸ்வரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு)
அருண்ராஜ், சபரிநாதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்டெக்ட்
வேளாண் அறிவியல் மையம், தேனி, 96776 61410