விதையை கடினப்படுத்தினால் உலர் நிலங்களில் அதிக மகசூலுக்கு உதவுகிறது.
விதை கடினப்படுத்துதல் என்பது தேவையான நீர் அல்லது ரசாயனக் கரைசலில் விதைகளை ஊறவைத்து பின் பழைய ஈரப்பதத்திற்கு உலர்த்துவதால் வறட்சியைத் தாங்கும் தன்மை பெறுகின்றன. இது மானாவாரி விதைப்பிற்கு பரிந்துரைக்கப்படும் விதை நேர்த்தி முறை. விதைகளை விதைப்பதற்கு முன் கடினப்படுத்தினால் வளர்ந்து வரும் நாற்றுகளில் வறட்சியைத் தாங்கும் தன்மையைத் துாண்டும்.
விதைகளின் உடலியல்மற்றும் உயிர்வேதியியல் தன்மையை மாற்றியமைக்கும்.
கடினப்படுத்தும் முறை
ரசாயன முறையில் விதைகளை கடினப்படுத்தும் போது ஒவ்வொரு தானியத்துக்கும் ஊறவைக்கும் நேரம் மாறுபடும். அதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஊறவைத்த விதைகளை நிழலில் உலர்த்திய பின்பே விதைக்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பொட்டாசியம் குளோரைடு கலந்து அதில் ஒரு கிலோ நெல் விதையை 16 மணி நேரம் ஊற வைத்து பின்பு நிழலில் உலர்த்த வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கலந்து அதில் ஒருகிலோ மக்காச்சோளம் அல்லது சோள விதையை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கம்புக்கு இதே கலவையில் ஒரு கிலோ விதையை சேர்த்து 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் சோடியம் குளோரைடு கலந்து அதில் ஒருகிலோ கேழ்வரகு விதையை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் ஒருகிலோ சூரியகாந்தி விதையை 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் கால்சியம் குளோரைடு கரைசலில் ஒரு கிலோ நிலக்கடலையை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லிகிராம் துத்தநாக சால்பேட் கலந்து ஒரு கிலோ துவரையை 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லிகிராம் மாங்கனீஸ் சல்பேட் கலந்து ஒரு கிலோ உளுந்து அல்லது பாசிப்பயறு விதையை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கலந்து ஒரு கிலோ கொண்டைக் கடலை விதையை 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் பொட்டாசியம் குளோரைடு (மியூரியேட் ஆப் பொட்டாஷ்) கலந்து ஒரு கிலோ பருத்தி விதையை 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
கடினப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
விதைகளின் முளைக்கும் வேகம் மற்றும் முளைப்புத்திறன் சதவீதம் அதிகரிக்கிறது. விதைப்பு வீரியத்தை அதிகரிக்கிறது. நாற்றுகளின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. வேர் வளர்ச்சியை அதிகரிக்கிறது. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் பூக்கும். சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. மகசூலை அதிகரிக்கிறது.
மகாலட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்
சத்தியா, மகிஷாதேவி, வேளாண் அலுவலர்கள்,
தேனி. 96775 33161