கேரள மாநிலம், பத்தனம்திட்டா பகுதியில் உள்ளது கவி. எழில் நிறைந்த காட்டுப்பகுதி. விலங்குகள் சுதந்திரமாக உலாவருவதை இங்கு எளிதாக பார்க்கலாம். சபரிமலை செல்லும் பாதையில் கவிக்கு செல்லும் காட்டுப்பாதை துவங்குகிறது.
இருமருங்கிலும், நெடிதுயர்ந்த மலை தொடர், பச்சைப்பசேல் புல்வெளிகள் நிறைந்துள்ளன. வழியில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள். பேருந்து பயணம் சுக அனுபவம் தரும்.
சாலையில் கவிந்துள்ள மரங்கள் அடர் நிழலாக காட்சி தருகிறது. வழியில் கக்கி, மூழியார் அணைக்கட்டுகள் கடல் போல் தேங்கியுள்ளதை பார்க்கலாம். கவியிலும் அணை உள்ளது. அது இரு ஆறுகள், நான்கு மலைகள் நடுவில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் சபரி நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு தண்ணீர் பாய்கிறது. இதன் அருகே, சூழல் சுற்றுலா மையம் நிறுவப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில், பொன்னம்பலமேடு பகுதியில் உள்ளது.
மிகுந்த சோதனைக்கு பின் தான் இங்கு சுற்றுலாவுக்கு அனுமதிக்கிறது கேரள வனத்துறை. காலை உணவுக்கு பின், அணையில் படகு சவாரி செய்யலாம். மதிய உணவுக்கு பின், நறுமணம் வீசும் ஏலக்காய் தோட்டங்களைப் பார்க்கலாம். ஏலக்காய் பதப்படுத்தும் ஆலை ஒன்றும் உள்ளது. பயணத்துக்கு ஜீப் வசதி உள்ளது.
காட்டுக்குள் வரையாடுகள் கூட்டமாக நகர்வது வியப்பு ஏற்படுத்தும். காட்டெருமை, யானைகள் எழிலாக சுற்றித் திரியும். இவற்றை காண கண்ணாயிரம் வேண்டும். இங்கு, 260 வகை பறவையினங்கள் உள்ளதாக வனத்துறை கணக்கிட்டுள்ளது. பறவைகளின் இனிய குரல்களின் ஊடே, சுத்தமான காற்றை சுவாசித்தபடி புல்வெளிகளில் சுற்றித் திரியலாம். இது பேரானந்தம் தரும்.
காட்டை சுற்றிப் பார்த்து, இரவு காட்டேஜில் தங்கி ஓய்வெடுக்கலாம். இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. இந்த காடு மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. கமகமக்கும் ஏலக்காய், மிளகு தாராளமாக கிடைக்கிறது. சந்தனக்கட்டை, 20 கிராம் விலை,1,500 ரூபாய்க்கு கிடைக்கிறது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் காலை, 6:30, மதியம், 12:15 மணிக்கு இங்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. குமுளியில் இருந்து அதிகாலை, 5:30, மதியம், 1:15 மணிக்கு கேரள அரசு பேருந்துகள் இயக்குகிறது. பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் உள்ளதால், கேரள வனத்துறை, இந்த பகுதியை சுற்றிப் பார்க்க பிரத்யேக வேன் இயக்குகிறது.
குழந்தைகளே... பயணங்கள் செய்து இயற்கை சூழலை பற்றிய அறிவை வளர்த்து வாழ்வில் உயருங்கள்.
- எல்.மீனாம்பிகா