திரைப்பட நடிகர், மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!
என் எதிர்காலம் பற்றி பலவித கற்பனைகளுடன் பஸ்சில் பயணம் செய்தேன், நான். மதுரைக்குள் நுழைந்து, பஸ் நிலையத்தினுள் சென்று நின்றது, பஸ். அதில் இருந்தவர்களோடு நானும் இறங்கியபோது தான், 'இங்கிருந்து எங்கே போவது, யாரை சந்திப்பது...' என்று யோசித்தேன்.
எங்கள் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர், தாயம்மாள். காங்கிரஸ் இயக்கத்துக்காக, கடுமையாக உழைத்து, சிறைச்சாலையெல்லாம் கண்டவர், அவர். அப்போது, மதுரை ஜில்லா போர்டு மெம்பராக இருந்தார். இப்போதைய நகரசபை உறுப்பினர் மாதிரி. எல்லாரும் அவரை, 'காங்கிரஸ் தாயம்மாள்' என்றே அழைப்பர்.
ஆகவே, பிரபலமான அந்த அம்மாவின் வீட்டு விலாசத்தை சிரமமின்றி அறிந்து, அவரை சந்தித்தேன். மதுரை அமெரிக்கன் கல்லுாரி வளாகத்தில், நான் நடித்த, 'சிந்தாமணி' நாடகத்தை, அவரும் பார்த்திருக்கிறார். ஆகவே, துணிந்து ஒரு பொய்யை சொன்னேன்.
'அப்பாதானம்மா என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார். என் நடிப்பு திறனை நாடகத்தில் கண்டு, அனைவரும் பாராட்டியதைக் கேட்டு மெச்சிப் போனார்.
'அவர் தான், நேராக மதுரை போ. அம்மாவை பார்த்து, நான் சொன்னதாக விஷயத்தை விளக்கமாக எடுத்துச் சொல். மதுரையில் நடந்து வரும், டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடக சபையில் உன்னை சேர்த்து விட ஏற்பாடு செய்வார் என்றார்...' என, கலையார்வம் கொடுத்த துணிச்சலால், ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து கொட்டினேன்.
அம்மையாரும், அந்த நாடக குழுவில் என்னை சேர்க்க முற்பட்டார். அவர் ஏற்பாட்டின்படி, நாடக கம்பெனியின் வீட்டுக்கு போனேன். அங்கே, டி.கே.எஸ்., சகோதரர்களில் ஒருவரான, டி.கே.பகவதி முன் நின்றேன். என்னை, அவர் ஏற இறங்க பார்த்து, 'பாடத் தெரியுமா?' என்று கேட்டார்.
'பாடுவேன்...' என்றேன்.
ஆர்மோனிய பெட்டி கொண்டு வரப்பட்டது. பகவதி, ஆர்மோனியம் வாசிக்க, 'இது நல்ல சமயமய்யா - என்னை ஆண்டருள் செய்ய இது நல்ல சமயமய்யா...' என்ற பாடலை கரகரப்பிரியா ராகத்தில் பாடி முடித்தேன்.
உடனே, டி.கே.பகவதி, 'இது நல்ல சமயந்தாய்யா...' என மகிழ்வுடன் கூறி, அருகிலிருந்த வாட்ட சாட்டமான நடிகரை நோக்கி, 'பையன் எப்படி நாராயணசாமி...' என்றார்.
'பரவாயில்லை... அரசவையில், ஏதாவது காவலன் வேடம் கொடுத்து நிற்க வைக்கலாம்...' என்றார்.
அவரது சட்டாம்பிள்ளைத்தனமான போக்கும், பேச்சும் எனக்கு எரிச்சல் ஊட்டியது.
அவர் பெயர், டி.வி.நாராயணசாமி. பிற்காலத்தில், அவர் தான், என் தங்கையை திருமணம் செய்து, எங்களின் எஸ்.எஸ்.ஆர்., நாடக மன்றம், எஸ்.எஸ்.ஆர்., பிக்சர்ஸ் ஆகியவற்றுக்கு நிர்வாகியாகவும் இருந்து, எனக்கு ஆலோசனைகளையும் வழங்கிய, நடிகமணி டி.வி.நாராயணசாமி.
நாடக குழுவில் நானும் உறுப்பினராக சேர்ந்து விட்டேன். இப்போது புதிய அமைப்பு, புதிய கூட்டணி. அதுவரை அனுபவித்திராத புதிய வாழ்க்கை முறை. கொஞ்சம் கொஞ்சமாக அதில் இணைந்து விட்டேன்.
தினமும் இரவு, 10:00 மணிக்கு நாடகம் ஆரம்பமாகும். நாடகம் முடிந்து, நாடக அரங்கிலிருந்து நாங்கள் தங்கியிருந்த வீடு வந்து துாங்கத் துவங்கும்போது, அடுத்தநாள் விடிந்து விடும்.
காலையில் தாமதமாகத்தான் விழித்தெழ முடியும். குளித்து முடித்தவுடன் இட்லி, காபி, பிறகு, நடிப்பு, நடன ஒத்திகை. மதியம், வயிறு நிறைய நல்ல சுவையான உணவு. அதற்குப் பின், பகலில் கண்டிப்பாக துாங்கியாக வேண்டும். அப்போது தானே இரவில் விழித்து, சுறுசுறுப்புடன் நடிக்க முடியும்.
வாரத்தில் ஒருநாள் மட்டும், ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:30 மணிக்கே நாடகம் துவங்கி, 10:00 மணிக்குள் முடிந்து விடும். அந்த சமயங்களில், மாலையில் ஒரு ஸ்வீட், காரம், காபி என்ற முறையில், ஒவ்வொருவருக்கும் நல்ல டிபன் கொடுப்பர்.
நாடகம் முடிந்ததும், சாப்பாடு. பிறகு துாக்கம். எப்போதாவது ஒருமுறை, 'ராமாயணம்' நாடகம் நடைபெறும். இரவு, 10:00 மணிக்கு துவங்கி, காலை, 6:00 மணியளவில் முடியும். ஆகவே, அன்று காலை சூரியனை நாங்கள் பார்த்து விடுவோம். அடுத்தநாள் நாடகம் இருக்காது. எங்களுக்கு ஓய்வு.
மாலையில், எங்களை ஏதாவது தமிழ் சினிமாவுக்கு அழைத்துச் சென்று பார்க்க வைப்பர்.
எம்.கே.தியாகராஜ பாகவதரும், அவரது தோழனாக, எம்.ஜி.ஆரும் நடித்த, அசோக்குமார் படத்தை அப்போது தான் பார்த்தேன்.
வாரத்தில் ஒருநாள், நல்லெண்ணெய் தேய்த்து, சிகைக்காய் போட்டு குளித்தாக வேண்டும். சிறுவர்களுக்கு குளிப்பாட்டி விட, ஆட்கள் இருப்பர். வீட்டில் கூட பெற்றோர், இவ்வளவு கண்டிப்பாக கவனிக்க மாட்டார்கள். அவ்வளவு கவனிப்பு இருக்கும்.
அந்த வயதில், இரவை பகலாக காட்டிடும் வித்தையை கூத்தாக நடத்திக் காட்டுவதில், எங்களுக்கென்றும் சங்கடமே தெரிந்ததில்லை. மாறாக மகிழ்ச்சியும், பெருமையும், தொழிலை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உற்சாகமும் மிகுந்திருந்தது.
நாடகக் குழுவில் நடிகர்களை, மூன்று பிரிவினராக பிரித்து அழைப்பர். 14 வயதுக்கு உட்பட்டவர்களை, பையன்கள் என்றும், 20 வயதுக்கு மேற்பட்டோரை, பெரியோர் என்றும், இடைப்பட்ட வயதுக்குட்பட்டோரை, 'வவ்வால் செட்' நடிகர்கள் என, அழைப்பர்.
அப்போது, 'சிவலீலா' என்ற நாடகம் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு, மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த நாடகம், மதுரையில், 108 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. அந்த, 108 நாட்களும், அரச சபை காட்சியில், தடியை பிடித்துக் கொண்டு நின்ற காவலாளிகளில் நானும் ஒருவனாக இருந்தேன்.
மதுரை, எங்களுக்கு சொந்த மாவட்டமாதலால், என் உறவினர்கள், தெரிந்தவர்கள் யாராவது நாடகம் காண வந்திருந்தால், அவர்கள் என் நிலையை பார்த்து சங்கடப்படுவர். எனவே, கழுத்தில் சுளுக்கு பிடித்தவன் மாதிரி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டே நிற்பேன்.
என்னவெல்லாமோ மனக்கோட்டை கட்டி, இந்த நாடக குழுவில் வந்து சேர்ந்தேன். இங்கே துணை நடிகர்களோடு சேர்ந்தல்லவா, மேடையில் வாய் திறக்காமல், அரச சபையில் சேவகன் உடையில் தினசரி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
அப்பாவோ, வேறு யாருமோ என்னைத் தேடி வரவில்லை.
மரியாதையாக, அந்த வத்தலக்குண்டு பள்ளியிலேயே படித்திருக்கலாம். பாழாய் போன அந்த வார்டன் பேச்சைக் கேட்டல்லவா, மதி மோசம் போனேன் என எண்ணி, பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.
இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க...
- தொடரும்எஸ். எஸ். ராஜேந்திரன்