தருமரை பற்றி நமக்கு தெரியும். அவர், ஏழை, எளியவர்களிடம் இரக்கம் கொண்டவர்; தாராளமாக தருமம் செய்கிறவர்.
ஒரு சமயம், தருமருக்கே, தன் ஈகை குணத்தை பற்றி லேசாக கர்வம் உண்டாயிற்று.
அதை புரிந்து கொண்ட கிருஷ்ணர், 'சரி, இவரை இப்படியே விட்டு விடக்கூடாது. கொஞ்சம் திருத்தி, நல்வழிப்படுத்த வேண்டும்...' என முடிவு செய்தார்.
ஒருநாள், தருமரை தேடி வந்து, 'வாயேன் இப்படி கொஞ்சம் வெளியே போய் வரலாம்...' என்று வழக்கம் போல கூப்பிட்டார்.
உடனே புறப்பட்டார், தருமர்.
இருவரும் சேர்ந்து போய் கொண்டே இருந்தனர். கடைசியாக, பாதாள லோகத்துக்கு போய் விட்டனர். அப்போது, அந்த பாதாள லோகத்தை, மகாபலி சக்ரவர்த்தி ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
தான, தர்மம் பண்ணுவதில் ரொம்ப பெரியவர், மகாபலி சக்கரவர்த்தி. அவரிடமிருந்த விருந்தோம்பல் பண்பை, எல்லா உலகமும் பாராட்டிக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில், தருமரும், கிருஷ்ணரும், அங்கே நடந்து போய் கொண்டிருந்தனர்.
ஒரு வீட்டுக்கு போய், 'குடிக்கிறதுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்க...' என்று கேட்டார், தருமர்.
அந்த வீட்டுக்கார அம்மா, ஒரு தங்க கிண்ணத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
தருமருக்கு, இது வியப்பாக இருந்தது. அந்நாட்டு மக்களின் செல்வச் செழிப்பை புரிந்து கொண்டார். அதன்பின், தருமரும், கிருஷ்ணரும் புறப்பட்டு, மகாபலி மன்னரின் அரண்மனைக்கு சென்றனர்.
மன்னரிடம், தருமரை அறிமுகப்படுத்தி, 'இன்றைக்கு தரும புத்திரரை தங்களின் ராஜ்யத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன். அவர், தான, தர்மங்கள் செய்வதில் மிகவும் புகழ் பெற்றவர். ஒவ்வொரு நாளும் இவர், 500 பேருக்கு அன்னதானம் செய்கிறார்...' என்றார், கிருஷ்ணர்.
அதைக் கேட்டதும், தன் இரண்டு காதுகளையும் கைகளால் பொத்திக் கொண்டார், மகாபலி.
'நீங்க சொல்ற அந்த சேதி என் காதில் விழ வேண்டாம். என்கிட்ட அதை சொல்லாதீர்கள். அப்படிப்பட்ட ஒருத்தரை பற்றி நான் கேட்கவும் தயாராக இல்லை. இங்கே என் ராஜ்யத்தில், நான் தானம் கொடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும், அதை வாங்கிக் கொள்ள, ஒருத்தர் கூட கிடைக்கவில்லை.
'தர்மம் வாங்கும் நிலையில் யாருமே இங்கே இல்லை. ஆனால், நீங்களோ, தருமர், தினம், 500 பேருக்கு அன்னதானம் பண்ணுவதாக சொல்றீங்க. அப்படின்னா, அவருடைய ராஜ்யத்தில் லட்சக்கணக்கான ஏழைகள் இருப்பதாக அர்த்தம் ஆகிறது.
'இதிலிருந்து அவர் எப்படி ஆட்சி புரிகிறார் என்பது நல்லா விளங்குது. அப்படிப்பட்ட ஒருத்தரை பற்றி நான் தெரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்சம் கூட தயாராக இல்லை...' என்றார், மகாபலி.
இதைக் கேட்டதும், வெட்கமாகி, தலை குனிந்தார், தருமர்; அவரிடமிருந்த கர்வமும் ஒழிந்தது.
இந்த கதை நமக்கு வழங்கும் நீதி: தர்மம் செய்வதில் கர்வத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது.
பி.என்.பி.,