தேவைகள் அற்று
தேக்கி வைக்கப்படுபவை
நம் தேடல்களை
சிறை வைக்கின்றன!
தேவைகளுடன்
நிறுத்தி வைக்கப்படுபவை
நம் தேடல்களை
புதுப்பிக்கின்றன!
மிகப்பெரிய தேடல்கள்
நம்மை உச்சி முகட்டில்
ஊஞ்சலாட்டி பின்
சஞ்சலத்தில்
சங்கமிக்க வைக்கிறது!
சின்ன சின்ன தேடல்கள்
நம்மை சிகரத்திற்கு
கொண்டு சென்று பின்
சிம்மாசனத்தில் அங்கம்
சொக்க வைக்கிறது!
எதிர்பார்த்த தேடல்கள்
நம் தேவைகளை
விசாலமாக்குகிறது!
எதார்த்த தேடல்கள்நம் தேவைகளை
விருத்தியாக்குகிறது!
அதிவேக தேடல்கள்
நம்மை வகை இல்லாத
வாழ்க்கையில்
வழுக்கி விழச் செய்கிறது!
நிதான தேடல்கள்
நம்மை தொல்லை இல்லாத
வாழ்க்கையை
தொடரச் செய்கிறது!
தேவைகளை தேடி
பெறும் போது தான்
தேடல்களின் மகத்துவம்
பெருமை அடைகிறது!
முதல் பார்வையின்
முன்னில் என்பதல்ல
தேடல்!
முற்றுப்புள்ளி இல்லாத
தொலைதுாரப் பார்வையின்
முயற்சி தேடல் ஒன்றிலே
நம் கண்ணுக்கு தெரியாத
கடவுளையும் காட்சி மேடையில்
சாட்சியாக்க முடியும்!
— அ. ரேவந்த், கொச்சி.