புதிய கட்டடத்தில் பெயின்டிங் பணிகளை துவக்குவதற்கும், பழைய கட்டடத்தில் பெயின்டிங் பணிகளை மேற்கொள்வதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. புதிய கட்டடம் என்றால், சுவரின் மேற்புறத்தை சரி படுத்த வேண்டும்.அதில் பூச்சு வேலை சரியாக முடிக்கப்பட்டு இருக்க வேண்டியது அவசியம்.
பூச்சு வேலை குறைபாடுகள் ஏதும் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.சுவரில் பட்டி பார்த்தல் என்பதே இது போன்ற குறைபாடுகளை சரி செய்ய தேவைப்படும். அதே நேரத்தில் புதிய கட்டடமானாலும், பழைய கட்டடமானாலும் அதில் பெயின்ட் அடிப்பதற்கு முன் வழக்கத்துக்கு மாறாக சில பிரச்னைகள் ஏற்படுவது உண்டு.புதிய கட்டடத்தில் கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்திய ஊழியர்கள் எண்ணெய் கறை அல்லது கிரீஸ் போன்றவற்றை சுவரில் பூசி இருக்கலாம். வேண்டுமென்றே செய்வார் என்று இல்லாவிட்டாலும் கவன குறைவால் இது போன்ற தவறுகள் நடந்து விடும்.
இத்தகைய கறைகளை முறையாக பார்த்து சரி செய்த பின் தான் பெயின்டிங் பணிகளை துவக்க வேண்டும். இதில் அலட்சியமாக இருந்தால், பணிகள் முடிந்த நிலையில் சுவரில் கறைபட்ட இடத்தில் மட்டும் வண்ணம் வேறுபட்டு காட்சி அளிக்கும்.
இது கட்டடத்தின் ஒட்டுமொத்த அழகுக்கும் கேடாக மாறிவிடும். பழைய கட்டடங்களிலும் இத்தகைய பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.குறிப்பாக, பயன்பாட்டு நிலையில் வீட்டில் சில சுவர்கள் எண்ணெய் கறைக்கு ஆளாவது இயல்பு தான். இத்தகைய பகுதிகளில் எப்படி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது என்று யோசித்து செயல்பட வேண்டும்.எண்ணெய் கறை, பிசுபிசுப்பு இருக்கும் சுவர்களை, டிரை சோடியம் பாஸ்பேட் போன்ற பொருளை பயன்படுத்தி கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் டிட்டர்ஜன்ட் போன்ற தன்மையுள்ள இப்பொருள் சுவர்களில் எண்ணெய் பிசுபிசுப்பை முழுமையாக அகற்றிவிடும்.
இவ்வாறு முறையாக சுத்தம் செய்த பின் சுவர்களில் பெயின்ட் அடிக்கும் பணிகளை மேற்கொண்டால் வெளிப்புற தோற்றத்தில் எவ்வித குறைபாடும் இருக்காது. இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும், முறையாக அணுகாவிட்டால் பாதிப்பு பெரிதாக இருக்கும் என்கின்றனர் பெயின்டிங் பணியாளர்கள்.