உஷாரய்யா, உஷாரு!
என் நண்பனின் வீட்டுக்கு, கணவன் - மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் என, குடும்பமாக நான்கு பேர் வந்துள்ளனர்.
'இந்த வீட்டில், 10 ஆண்டுக்கு முன் குடியிருந்தோம். தற்போது, சொந்த வீடு வாங்கி, பெங்களூரில், 'செட்டில்' ஆகிவிட்டோம். பக்கத்து தெருவிலிருந்த சொந்தக்காரர்களின் திருமணத்துக்கு வந்தோம்.
'இரண்டு பிள்ளைகளும், சிறு வயதில், விளையாடிய வீட்டை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். காண்பிக்க வந்தோம்...' என்று கூறியுள்ளனர்.
பட்டுப்புடவை, கழுத்து நிறைய நகை, கையில் தாம்பூலம் பை வைத்திருந்ததால், உள்ளே அழைத்து பேசியுள்ளார், நண்பரின் மனைவியும், தாயும்.
கிளம்பும்போது, 'பெங்களூரு செல்ல இன்னும் நான்கு நாட்கள் ஆகும். தாம்பூலத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள்...' என்று கூறி, தாம்பூல பையை கொடுத்து, 'ஸ்பிரே' செய்துள்ளனர்.
மனைவி மற்றும் தாய் கழுத்தில், கையிலிருந்த நகைகளை கழட்டியுள்ளனர். கை, கால்கள் மரத்துப் போய் இருவராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லையாம். இரண்டு மணிநேரம் கழித்துதான் உணர்வே வந்ததாம்.
நல்லவேளை, பீரோ சாவி கிடைக்கவில்லை. காவல் துறையினர், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை அலசி ஆராய்ந்தும், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டான், நண்பன்.
இதுபோன்ற ஆட்களால் தான் நல்லவர்களையும் சந்தேகப்பட வேண்டியுள்ளது. எனவே, நகை போட்டிருக்காங்க, இவங்க நல்லவங்களாகத்தான் இருப்பாங்கன்னு நம்பி ஏமாந்துடாதீங்க, நண்பர்களே.
புதிதாக குடி வந்தவர்களை குறி வைத்து இதுபோன்ற நுாதன திருட்டுகள் நடக்கின்றன. நாம் தான் ஜாக்கிரதையா இருக்கணும்.
எஸ்.ஓவியா, சென்னை.
கார் வைத்துள்ளீரா?
பெட்ரோல் விலை அதிகரித்ததால், காரை அடிக்கடி வெளியே எடுப்பதில்லை. எங்கு சென்றாலும், மோட்டார் பைக் தான். காரை ஓட்டாமல் வைத்திருந்தால், பேட்டரி பழுதாகி விடும் என்று, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, 'ஆன்' செய்து சில நிமிடம் இன்ஜினை ஓட விட்டு, 'ஆப்' செய்தேன்.
ஒருநாள் காரை வெளியே எடுக்கப் போன எனக்கு, பேரதிர்ச்சியாக இருந்தது. காரின் நான்கு டயர்களும் வெடித்து சேதமடைந்திருந்தது.
மெக்கானிக் ஒருவரிடம் கேட்டதில், 'காரை ஒரே இடத்தில் வெகு நாட்கள் வெயிலில் நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தினால், டயரில் அழுத்தம் ஏற்பட்டு, டயர் வெடித்து விடும். மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை, 'ஆன்' செய்து, முன் பக்கமோ அல்லது பின்பக்கமோ காரை நகர்த்தி வைக்க வேண்டும்...' என்றார்.
எப்போதாவது காரை உபயோகிப்போர், இதை நினைவில் கொள்ளுங்கள்!
ஜெ. கண்ணன், சென்னை.
சபாஷ் இளைஞர்கள்!
நெருங்கிய நண்பர் மகன் திருமண வரவேற்புக்கு, சமீபத்தில் சென்றிருந்தேன். இசை நிகழ்ச்சியில், 'தன்னம்பிக்கை ஆர்க்கெஸ்ட்ரா' என்று பெயரிடப்பட்ட, இசைக்குழுவில், ஆறு இளைஞர்களும், மூன்று இளம்பெண்களும் இடம்பெற்றிருந்தனர்.
கேட்போரை வசீகரிக்கும் வண்ணம், பழைய, புதிய பாடல்களை அசத்தலாக பாடி, அனைவரையும் மகிழ்வித்தனர். பலரும் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். நானும் வாழ்த்து தெரிவித்து, 'ஆர்க்கெஸ்ட்ரா'வை வழி நடத்துபவரிடம், குழு குறித்து விசாரித்தேன்.
'நாங்கள் ஒன்பது பேருமே, ஒரே கல்லுாரியில் பயிலும் மாணவர்கள். படிக்கும்போது, ஏதாவது சுயதொழிலில் ஈடுபட, 'ஆர்க்கெஸ்ட்ரா' ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து, களத்தில் இறங்கி, இப்போது வெற்றிப்படியில் ஏறியுள்ளோம்.
'அனைவருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இசைக் கருவிகள் அனைத்துமே, வாடகைக்கு வாங்கி வந்துள்ளோம். சில கருவிகள் மட்டும், நலன் விரும்பிகள் அன்பளிப்பாக வழங்கினர். போகப் போக, 'ஆர்க்கெஸ்ட்ரா'வுக்கென சொந்த இசைக் கருவிகளை வாங்கி விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
'இதில், குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம்... எங்கள் குழுவில் பாடும் மூன்று பெண்களில், இருவர் திருநங்கையர். திறமையுள்ளோருக்கு வாய்ப்பு தந்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நட்பில் பாலின பேதமில்லை என்பதை நிரூபிக்கவே, அவர்களையும் எங்களோடு இணைத்து பயணிக்கிறோம்...' என்றார்.
முன்மாதிரி இளைஞர்களுக்கு, 'சபாஷ்' சொல்லி, விடைபெற்றேன்.
-மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.