திரைப்பட நடிகர், மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!
அப்போது, இந்திய நாட்டை வெள்ளைக்காரர்கள் ஆண்டுக் கொண்டிருந்த காலம். பல முக்கிய தலைவர்கள், காந்திஜி தலைமையில், காங்கிரஸ் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போராட்டத்தில், இந்திய நாட்டின், வட பகுதியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும், தென் பகுதியில், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும் பெரும் பங்கு உண்டு.
மதுரையம்பதிக்கு, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச நேதாஜி வருவதாகவும், அதில், பசும்பொன் தேவரும் கலந்து கொள்வதாக, விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மதுரைப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
எங்கள் நாடக குழுவில், அன்று நாடகம் இல்லை; விடுமுறை தினம். மதுரையில் அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்த என் ஒன்றுவிட்ட மாமா, சந்தனகாளை தேவர் என்பவர், என்னை பார்க்க வந்திருந்தார்.
'இன்றுதான் நாடகம் இல்லையே. என் வீட்டுக்கு வந்து விட்டு நாளைக்கு திரும்பலாமே...' என்றார்.
அதனால், நாடக குழு நிர்வாகிகளுள் ஒருவரான டி.கே.ஷண்முகத்திடம் கூறி, விடுமுறை பெற்று, வெளியே வந்தோம்.
உண்மையில், என்னை சந்திக்க வந்த என் மாமாவை பயன்படுத்தி, அன்று நடக்க இருக்கும், பொதுக்கூட்டத்துக்கு போக வேண்டும். எப்படியாவது நேதாஜியையும், பசும்பொன் தேவரையும் நேரில் பார்த்து, அவர்களின் மேடைப் பேச்சை கேட்க வேண்டும் என்ற அளவு கடந்த ஆசையில் தான், இந்த திட்டம் தீட்டினேன்.
என் திட்டம் நிறைவேறியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில், மாமா துணையோடு நானும் மேடைக்கு மிக அருகில் இடம் பிடித்து அமர்ந்து, அவர்களின் பேச்சை கேட்டு, ரசித்தேன்.
ஒருமுறை, டி.பி.பொன்னுச்சாமி பிள்ளையின் நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்த, நடிகர் எம்.ஆர்.ராதா, பிரபல பாடகர், திருவாரூர் ராமசாமியுடன், எங்கள் நாடகம் காண வந்திருந்தார். அவர்களுடன், பெண்களுக்கு இருக்கிற மாதிரி நிறைய தலைமுடி, நீண்ட மூக்கு, பளிச்சென்ற கண்கள், கவர்ச்சி தோற்றமுடைய ஒரு பையனும் வந்திருந்தார்.
எங்கள் நாடகத்தை முன் வரிசையில் அமர்ந்து, மூவரும் பார்த்தனர். நாடகம் முடிந்ததும், மேடைக்கு வந்து, டி.கே.ஷண்முகத்திடம் பேசிவிட்டு, 'பையன் கணேசன், உங்கள் நாடக குழுவினரோடு இன்று இரவு தங்கி இருக்கட்டும். நாளைக்கு வந்து அழைத்துச் செல்கிறோம்...'என, விட்டுச் சென்றார், எம்.ஆர்.ராதா.
அந்த பையன், கணேசன். என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டு, எங்களோடு தங்கினார்.
அவர் தான் பிற்காலத்தில், சிவாஜி கணேசனாகி, கலைத்துறையில் நீங்காப் புகழோடு விளங்கியவர்.
மதுரையில், டி.கே.எஸ்., நாடக குழு, பல நாடகங்களை நடத்தி, அடுத்த முகாம், கும்பகோணம் என நிச்சயிக்கப்பட்டது. இப்போது, வாடகைக்கு கார் பிடிப்பதை போல, அப்போது, நாங்கள் கும்பகோணம் செல்வதற்கு, ஒரு தனி ரயிலே வாடகைக்கு அமர்த்தப்பட்டது. அதில் தான் பயணமானோம்.
நடிப்புலக ஆசான், அவ்வை ஷண்முகம், 'எனது நாடக வாழ்க்கை' என்ற வரலாற்று நுாலில், என்னைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டு எழுதியுள்ளார். அதில், என்னைப் பற்றி எழுதிய வாசகங்கள் இவை:
'சிவலீலா' நாடகம் தொடர்ந்து நடந்து வந்தது.
ஒருநாள் என்னிடம் வந்து, 'பெரிய வேடம் ஏதாவது கொடுங்கள்...' என்றார், ராஜேந்திரன்.
'எந்த வேடம் வேண்டும். எந்த வேடத்தை நீ விரும்புகிறாய்...' என்று கேட்டேன்.
'சிவலீலாவில் நீங்கள் போட கூடிய, செண்பகப் பாண்டியனாக நான் நடிக்க விரும்புகிறேன்...' என்றார்.
ராஜேந்திரனின் துணிவைக் கண்டு மகிழ்ந்தேன்.
இப்படி குறிப்பிட்டுள்ளார், அவ்வை ஷண்முகம்.
நாடகங்களில் என்னுடன் ஜோடியாக நடித்தார், நடிகை திரவுபதை என்ற பெண். என்னை விட மூத்தவராக இருந்தாலும், நாடகத்தில் ஜோடிப் பொருத்தம் சரியாகவே இருந்தது. நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன.
ஒருநாள், நான் நடித்துக் கொண்டிருந்தபோது, முன் வரிசையில் கம்பீரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார், என் அப்பா. நான், மேடையிலிருந்து அவரை பார்த்து திடுக்கிட்டேன்.
என்ன செய்யப் போகிறாரோ, என்ன நடக்கப் போகிறதோ என பயந்தேன்.
நாடகம் முடிந்ததும் என்னைப் பார்த்து, ஆவலுடன் கட்டியணைத்து, 'பரவாயில்லை, நீ நல்ல நாடக குழுவில் தான் இருக்கிறாய். எப்படி இருப்பாயோ என எண்ணி வந்தேன், நான்.
'நாடகத்தில் உன் சிறந்த நடிப்பையும், ரசிகர்கள் கை தட்டி வரவேற்பதையும் கண்டபோது, பெரு மகிழ்ச்சியடைந்தேன். நீ சிறப்பாக வருவாய் என்ற நம்பிக்கை வந்து விட்டது...' என பாராட்டி, அன்று என்னுடனேயே தங்கினார். பிறகு, அக்கம்பெனியின் விதிமுறைகளை தெரிந்து, திருப்தியுடன் திரும்பி சென்றார்.
கும்பகோணத்தில், எங்கள் நாடகங்களை முடித்து, அடுத்து, கரூருக்கு, தனி ரயிலில் பயணமானது, எங்கள் நாடக குழு.
கரூரில், 'சிவலீலா' நாடகம் நடந்தபோது...
- தொடரும்
ஒரு ஊரிலிருந்து மறு ஊர் சென்று நாடகம் துவங்குவதற்கு, எப்படியும் 10 - 15 நாட்கள் ஆகிவிடும். அதுவரை நடிகர்களுக்கு விடுமுறை தான். நாடக குழுவின் நிர்வாகிகளுள் ஒருவரான டி.கே.சங்கரனிடம் அனுமதி பெற்று, விடுமுறையில் என் ஊருக்கு புறப்பட்டு போனேன்.எங்கள் கிராமத்தில், என்னுடன் படித்த, பழகியவர்கள், பெரியவர்கள், குடும்பத்தினர், உறவினர் என, அத்தனை பேருடனும் பேசி மகிழ்ந்தேன்.என் படிப்பில் மிகவும் அக்கறை கொண்டவர், அருணாசல வாத்தியார். என்னவோ, அவரை பார்த்தவுடன், அவர் கையில், 100 ரூபாய் கொடுத்து, வணங்கி நின்றேன். 'நீ, நிறைய உழைத்து சம்பாதிக்கணும், மற்றவர்களுக்கு உதவுவதற்காக...' என, மகிழ்வுடன் வாழ்த்தினார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன்